எதெற்கெடுத்தாலும் பைபிளில் இருக்கிறதா என்று கேட்கும் சகோதரர்கள் கவனத்துக்கு.
நாம் நமது பெயரை எழுதும் போது நமது பெயருக்கு முன்னால் நமது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை எழுதுகிறோம்.
தாயின் பெயரின் முதல் எழுத்தை எழுதுவயதில்லை.
அப்படியானால் நமக்குத் தாய் இல்லை என்று அர்த்தமா?
புனித அருளப்பர் கி.பி 90 ஆம் ஆண்டுவாக்கில் நற்செய்தியை எழுதினார்.
அவர் போதிக்க ஆரம்பித்தது
கி.பி 33ல்.
57 ஆண்டுகள் வாய் மொழியாக நற் செய்தியைப் போதித்து
விட்டுதான் தனது போதனைக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்.
இந்த ஆண்டுகளில் அன்னை மரியாளைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டு கவனித்து வந்தார்.
அவருடைய நற்செய்தி நூலில் இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகள் எழுதப்படவில்லை.
எழுதப்படாததால் இயேசு பிறக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடலாமா?
பைபிளில் இல்லாதது நடக்கவில்லை என்றால் இயேசு பிறக்கவில்லை என்று தானே அர்த்தம்!
நாம் அன்னை மரியாளை முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.
ஆனால் நமது பிரிவினை சகோதரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அப்படி பைபிளில் எங்கும் எழுதப்படவில்லை என்பது அவர்களுடைய வாதம்.
மேலும்,
"இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? "
(மத்தேயு நற்செய்தி 13:55)
என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு,
"யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? "
என்ற வார்த்தைகளைக்கூறி இயேசுவுக்குச் சகோதரர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள்.
ஆனால் அவர்கள் யாருடைய பிள்ளைகள் என்பதற்கு பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது.
அவர்கள் அன்னை மரியாளின் தங்கை மக்கள்.
இந்த வசனத்தில்தான்,
"இவர் தச்சருடைய மகன் அல்லவா?" வார்த்தைகளும் உள்ளன.
அப்படியானால் இயேசுவைத் தச்சனின் மகன் என்று ஏற்றுக் கொள்கிறார்களா?
தாங்கள் ஒரு கருத்தை முதலில் மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஆதாரம் தேடுவது தான் இவர்கள் வேலை.
கன்னி மரியாள் திருமண ஒப்பந்தத்துக்கு முன்பே கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்தவள் என்று நாம் நம்புகிறோம்.
கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி,
'இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
(லூக்கா நற்செய்தி 1:31)
என்று சொன்னபோது மரியாள் எப்படி எதிர்வினை புரிந்தாள்?
(How did Mary react?)
"அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்."
(லூக்கா நற்செய்தி 1:34)
நமது குடும்பத்தில் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வாழ்த்துரை வழங்கும் போது,
''சகோதரிக்கு தலைப்பிள்ளையாக ஆண் குழந்தை பிறக்கும்" என்று வாழ்த்தினால் அவள் மகிழ்வாளா, அல்லது அது எப்படி நடக்கும் என்று கேட்பாளா?
மரியாளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.
கபிரியேல் தூதர்
'கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்." என்று வாழ்த்தியபோது,
"இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" என்று சொன்னதிலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்தவள் என்று.
தூதர் அவளது கன்னிமைக்குப் பழுது ஏற்படாது, தூய ஆவியின் வல்லமையால் நிகழும் என்று சொன்னவுடன்,
"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்''
என்று பதில் அளித்தாள்.
இயேசு தன் தாயின் கன்னிமைக்குப் பழுது ஏற்படாமல் உற்பவித்தார்,
கன்னிமைக்குப் பழுது ஏற்படாமல் பிறந்தார்.
ஒளி கண்ணாடிக்குப் பழுது ஏற்படாமல் அதன் வழியே ஊடுருவி ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குச் செல்வது போல
இயேசுவும் கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்தார்.
உலகில் பிரசவ வலியே ஏற்படாமல் குழந்தை பெற்ற ஒரே பெண்மணி மரியாள் தான்.
இயேசு உற்பவிக்கும் போதும் மரியாள் கன்னி.
இயேசு பிறக்கும் போதும் மரியாள் கன்னி.
இயேசு பிறந்த பின்னும் மரியாள் கன்னி.
முக்காலமும் கன்னி.
**********
கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசம் பைபிளையும் பாரம்பரியத்தையும் ஆதாரமாகக் கொண்டது.
இயேசு போதித்தவை, செய்தவை எல்லாம் பைபிளில் எழுதப்படவில்லை.
தூய ஆவி இறங்கி வந்த பின் சீடர்கள் வாய் மொழியாக போதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
போதனையை ஏற்றுத் திருமுழுக்குப் பெற்ற மக்கள் போதனையை வாழ ஆரம்பித்து விட்டார்கள்.
சீடர்களுடைய போதனைக்கு அவர்களுடைய வாய்மொழி தான் ஆதாரம்.
அவர்கள் போதனையில் தவறாதபடி பார்த்துக் கொண்டவர் தூய ஆவி.
அவர்களுடைய வாய்மொழிப் போதனையைத் தான் பாரம்பரியம் என்கிறோம்.
பாரம்பரியத்திலிருந்து தான் பைபிள் பிறந்தது.
பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாத நமது பிரிவினை சகோதரர்களுக்கு நமது விசுவாச சத்தியங்களைப்பற்றி என்ன சொன்னாலும் புரியாது.
வாய்பாடு தெரியாதவனுக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.
மரியாள் சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தாள் என்று பைபிளில் நேரடியாகச் சொல்லப் படவில்லை.
ஆனால் அது தாய்த் திருச்சபையின் போதனை.
"அவள் உன் தலையை நசுக்குவாள்"
"அருள் நிறைந்தவரே வாழ்க."
என்ற பைபிள் வசனங்களை ஆதாரமாகக் காட்டியது தாய்த் திருச்சபை.
ஆனால் "பொது பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் அதிலும் கைவைத்து விட்டார்கள்.
ஆனாலும் நாம் பாப்பரசரின் தவறா வரத்தின்மீது அசையா நம்பிக்கை வைத்திருப்பதால் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளை ஏற்றுக் கொள்கிறோம்.
அன்னை மரியாளின் ஆன்மசரீரத்தோடு விண்ணேற்பு விழா ஆதித் திருச்சபையிலேயே கொண்டாடப் பட்டு வந்தது.
பாப்பரசர் பன்னிரெண்டாம் பத்திநாதர் அதை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார்.
பாப்பரசரை நம்பாதவர்கள் பற்றி நமக்குக் கவலையில்லை.
நாம் பைபிளையும், பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்கிறோம்.
ஏற்றுக் கொள்ளாதவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment