புற உதவியின்றி, சுயமாக, நம்மால் வாழ முடியாது.
நம்மைப் படைத்தவர் உதவியின்றியும்,
அவர் நமக்காகப் படைத்த நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் உதவியின்றியும் நம்மால் வாழ முடியாது.
கடவுள் சுயமாக வாழ்பவர். அன்பு மயமானவர். அன்பு அவருடைய சுபாவம். அவர் தன்னையும் அன்பு செய்கிறார், தன்னால் படைக்கப்பட்டவர்களையும் அன்பு செய்கிறார்.
அவருடைய அன்பு நிபந்தனை அற்றது, மாறாதது.
அவர் மேல் அன்பு உள்ளவர்களையும், அவரை அன்பு செய்ய மறுப்பவர்களையும் அவர் அன்பு செய்கிறார்.
கடவுள் சர்வ ஞானம் உள்ளவர்.
அவர் மனிதனைப் படைக்க நித்திய காலமாகத் திட்டமிட்டபோதே அவன் கட்டளைகளை மீறுவான், பாவம் செய்வான் என்பது அவருக்குத் தெரியும்.
ஆனாலும் தனது அன்பின் மிகுதியால் அவனைப் படைத்தார்.
அவனைப் படைக்கும் முன்பும் நேசித்தார்.
படைத்த போதும் நேசித்தார்.
படைத்த பின்பும் நேசித்தார்.
அவன் பாவம் செய்த போதும் நேசித்தார்.
அவர் மாறாதவர்.
அவரது அளவு கடந்த நேசத்தின் காரணமாகத்தான் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அவனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.
இது நமக்கு அறிவு பூர்வமாகத் தெரியும், உணர்வு பூர்வமாகத் தெரியுமா?
தெரிந்தால் எப்படி பாவம் செய்ய மனது வரும்?
அவரது அன்பு மாறாதென்றால் நரகத்துக்குச் சென்றவர்களை?
அவர்களையும் நேசிக்கிறார். அவரை எதிர்த்து நரகநிலையைத் தேர்வு செய்த சாத்தானையும் பசாசுக்களையும் நேசிக்கிறார்.
ஆனால் நரகவாசிகளால் பதிலுக்கு அன்பு செய்ய முடியாது.
அறிவு பூர்வமாக நமக்குத் தெரிந்த இந்த உண்மைகளைத் தியானத்தின் மூலம் உணர்வுப் பூர்வமானவைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாவம் செய்யச் சோதனை வரும் போதெல்லாம் கடவுளுடைய அளவு கடந்த மாறாத அன்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.
அது சோதனையை வெல்ல உதவும்.
நமது அன்பும் நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்.
நலமாக இருக்கும் போது மட்டுமல்ல நோய் நொடிகளால் துன்பப் படும்போதும் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.
நாம் கேட்பது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அன்பு செய்ய வேண்டும்.
வெற்றிகள் ஏற்பட்டாலும், தோல்விகள் ஏற்பட்டாலும் அன்பு செய்ய வேண்டும்.
அன்பு ஒன்று தான் நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தரும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment