Wednesday, July 9, 2025

"மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" . (அரு.3:3)



 "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" . 
(அரு.3:3)

  நிக்கதேம் ஒரு பரிசேயர். அவர் யூத மதத் தலைவர்களுள் ஒருவர். 

பரிசேயராக இருந்தாலும் இயேசுவை விசுவசித்தவர்.

அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, 

"ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார். 

இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார். 

நிக்கதேமுக்கு மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்று புரியவில்லை.

தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறத்தல் தான் மறுபடி பிறத்தல் என்று இயேசு அவருக்கு விளக்கம் அளிக்கிறார்.

இயேசு குறிப்பிடுவது திருமுழுக்குப் பெறுவதை.

திரு முழுக்கு பெறும் போது பெறுபவர் மீது தூய ஆவி இறங்கி பாவ நிலையிலிருந்து அவருக்கு விடுதலை கொடுக்கிறார்.

பாவ நிலையிலிருந்து விடுதலை பெறுவது தான் ஆன்மீக மறு பிறப்பு.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததால்,
உடல் ரீதியாக வாழ்ந்தாலும்  ஆன்மீக ரீதியாக மரணம் அடைந்தனர். 

அவர்களுடைய வாரிசுகள் பாவ இயல்போடு பிறக்கின்றனர்.

ஆன்மீக மரணநிலையில், அதாவது, பாவத்தோடு பிறக்கும் நாம்,

 திரு முழுக்குப் பெறும்போது தூய ஆவியின் வல்லமையால் 

 ஆன்மீக ரீதியாக பாவ மாசின்றி பரிசுத்தத்தனத்தில் பிறக்கிறோம்.

நமது பெற்றோரிடமிருந்து பாவ நிலையில் பிறந்த நாம்  

தூய ஆவியால்  பிறப்பது ஆன்மீக ரீதியானது.

மனித இயல்பை உடையவர்களாக இருந்த நாம் தூய ஆவியால் பிறக்கும் போது தூய ஆவியின் இயல்பை உடையவர்களாக மாறுகிறோம். 

இதை விளக்க இயேசு ஒரு உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

காற்று எங்கிருந்து வீசுகிறது என்பதைப் பற்றிய அறிவு நம்மிடம் இல்லாவிட்டாலும் அதன் பயனை நாம் அனுபவிக்கிறோம்.

அதுபோல ஆன்மீக ரீதியாக தூய ஆவி நம்மிடம் செயல் புரிகிறார் என்பது நமது மனித அறிவுக்கு எட்டா விட்டாலும் அவருடைய செயலை ஆன்மீக ரீதியாக அனுபவிக்கிறோம்.

வெளிப்பார்வைக்கு லௌகீக வாதிகளும், ஆன்மீக வாதிகளும் ஒன்று போல் தான் தோன்றுவார்கள்.

ஆனால் ஆன்மீக வாதிகள் தூய ஆவியால் ஆன்மாவில் ஏற்படுகிற மாற்றத்தை அனுபவிப்பார்கள்.

இயேசு நிக்கதேமோடு பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நமக்காவும்தான்.


பாலைநிலத்தில் மோசேயால்  உயர்த்தப்பட்ட பாம்பைப் பார்த்தவர்கள் சாகாமல் பிழைத்தது போல 

சிலுவையில் உயர்த்தப்பட்ட மனுமகனை விசுவாசத்தோடு பார்ப்பவர்கள் மீட்புப்‌ பெறுவர், அதாவது, நிலைவாழ்வு பெறுவர். 

தந்தை இறைவனின் அன்பைப் புரிந்து கொண்டு நாம் நிலை வாழ்வு பெறுவதற்காக அவரால் அனுப்பப் பட்ட அவரது ஒரே  மகன் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, 

தம் மகன் வழியாக அதை மீட்கவே தந்தை அவரை உலகிற்கு அனுப்பினார். 

மனம் திரும்ப விரும்பாதோர் தங்களுக்குத் தாங்களே தீர்ப்பளித்துக் கொள்கிறார்கள்.

ஏனெனில் முழுமனச் சுதந்திரத்தோடு தான் பாவம் செய்கிறார்கள்.

தெரிந்தே செய்தால் வேண்டுமென்றே செய்வதாகத்தான் அர்த்தம்.

சாவான பாவம் செய்தால் நரகம் என்பது தெரிந்தும் சாவான பாவம் செய்பவன் நரகத்தைத் தேர்ந்து கொண்டான் என்று தான் அர்த்தம்.
 
இயேசுவை விசுவசிப்பவர்கள் பாவத்தைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.

இயேசுவாகிய ஒளியை விரும்பாதவர்கள் இருளின் மக்கள், அதாவது பாவத்தின் மக்கள்.

இயேசுவே உண்மை.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் இயேசுவோடு வாழ்கிறார்கள்.

அதாவது,

இயேசுவோடு இணைந்து வாழ்பவர்கள் உண்மைக்கேற்ப வாழ்வார்கள்.

நிக்கதேமோடு இயேசு பகிர்ந்து கொண்ட செய்தி நமக்கும் பொருந்தும்.

அவர் யூதர்களின் தலைமைச் சங்கத்தின் (Sanhedrin) உறுப்பினர்.

சங்க உறுப்பினர்கள் இயேசுவைக் கைது செய்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த போது நிக்கதேமு,

"ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார். (அரு.7:51)

இயேசுவின் மரணத்துக்குப் பின் 
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போனபோது 

நிக்கதேம்  வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். 

அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி அடக்கம் செய்தார்கள். (19:40)

நிக்கதேமின் செயல்கள் அவரது ஆழமான விசுவாச வாழ்வுக்கு,
அதாவது செப வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

அவர் இயேசுவின் வார்த்தைகள் காட்டிய வழியில் வாழ்ந்தது போல நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment