Sunday, July 6, 2025

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)



நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். 
(கலாத்தியர் 6:9)


ஒரு நாள் முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்த நால்வர் 

மக்கள் திரண்டிருந்ததன் காரணமாக வழி இல்லாததால்   அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். 

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, இரங்கி
முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார். 

 "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார். 

அவனும் எழுந்து  படுக்கையை எடுத்துக்கொண்டு, கடவுளைப் புகழ்ந்து கொண்டு வீட்டுக்குப் போனான்.

கடவுளுக்கு நன்றி.

இப்போது நாம் தியானிக்கப் போவது நோயாளியைத் தூக்கி வந்த நால்வரைப் பற்றி.

முன்முயற்சி எடுத்து, தங்கள் நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்து,

 தங்கள் சொந்த சுகபோகத்தைத் தியாகம் செய்து, விசுவாசத்துடன்

 அந்தத் திடீரவாதக்காரனை இயேசுவிடம் கொண்டு வந்த நான்கு பேரும் தங்கள் சேவைக்குப் பதிலாக என்ன பெற்றார்கள் என்று யாரும் கேட்டால் நாம் பதில் எதுவும் சொல்ல முடியாது.

ஏனெனில் பைபிளில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை.


ஒன்று சொல்லலாம், அவர்கள் பிரதிபலன் எதுவும் எதிர் பாராமல் சேவை செய்தார்கள்.

இயேசு கடவுள்.  அவருடைய விண்ணக வீட்டில் பிறரன்பு பணி செய்பவர்களுக்கான சன்மானத்தை தயாராக வைத்திருப்பார்.


"என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். 


, "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத்தேயு நற்செய்தி 25:34,40)

இப்படி இயேசு அவர்களிடம் இறுதி நாளில் சொல்வார்.

ஆக, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்குவதற்காக இயேசுவிடம் அழைத்து வந்தவர்களுக்கு அவருடைய சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம்  சிந்தித்துக் கொண்டிருக்கும் நால்வரும் இப்போது விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நமக்கு புனித சின்னப்பர் கூறுகிறார்,

"ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்."
(கலாத்தியர் 6:10)

நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் யார் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவி செய்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment