Friday, July 4, 2025

ஆவியில் ஆன்மீக வாழ்வு.



ஆவியில் ஆன்மீக வாழ்வு.

தூய ஆவியில் நாம் வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு.

தூய ஆவியானவர் நம்மில் வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு.

அதாவது,

ஆவியானவர் நம்மிலும், நாம் ஆவியானவரிலும் வாழும் வாழ்வு.

நமது வாழ்வில் தூய ஆவியின் வெளிப்பாடு தான் செபம்.

செபம் நாம் செய்வதல்ல, தூய ஆவி நம்மில் செய்வது.


 "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது."
(1 கொரிந்தியர் 12:3)

இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 

உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். 
(உரோமையர் 8:26,27)

புனித சின்னப்பரின் கருத்துப்படி தூய ஆவி நம்மில் செயல்புரியா விட்டால் நம்மால் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ள முடியாது.

திருமுழுக்கு பெற்றபின் தான் நாம் கிறிஸ்தவர்கள், திருமுழுக்கின் போது தூய ஆவி நம்மில் இறங்கி வந்து நம்மைக் கிறிஸ்தவர்களாக மாற்றுகிறார்.

தூய ஆவியைப் பெற்றபின் தானே சீடர்கள் இயேசுவை உலகுக்கு அளிக்கப் புறப்பட்டார்கள்.

கடவுள் நம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கை தான் நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் யூதர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, சுதந்திர வாழ்வை நோக்கி வழிநடத்தினார்.

யூதர்களைப் பொறுத்த மட்டில் நமக்காகக் கடவுள்.
(God for us)

புதிய ஏற்பாட்டில் இறைமகன் மனிதனாகப்  பிறந்து, வளர்ந்து, பாடுகள் பட்டு , மரித்தார்.

நம்மைப் பொறுத்தவரை கடவுள் நம்மோடு.(God with us)

இயேசு விண்ணகம் சென்றபின் தூய ஆவி திருமுழுக்கின்போது நம்முள் இறங்கி, ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் போதும் நம்முள் செயல் புரிகிறார்.

இப்போது நம்மைப் பொறுத்த மட்டில் கடவுள் நம்முள்.
(God within us)

 நமக்காகக் கடவுள்.
 நம்மோடு கடவுள்.
 நம்முள் கடவுள்.

ஆக, கடவுள் நமக்காகச் செயல்புரிகிறார்,

நம்மோடு செயல்புரிகிறார்,

நம்முள் செயல்புரிகிறார்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களில் பழைய ஏற்பாட்டில் தந்தை செயல் புரிந்தாக குறிக்கப்பட்டிருக்கும்.

புதிய ஏற்பாட்டில் மகன் செயல் புரிந்தாக குறிக்கப்பட்டிருக்கும்.

இக்காலத்தில் தூய ஆவி செயல் புரிவதாக குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனாலும் எக்காலமும் மனிதரிடையே செயல் புரிபவர் பரிசுத்த தம திரித்துவக் கடவுள்.
ஏனெனில் கடவுள் ஒருவரே.

நம்முள் தூய ஆவி எப்படிச் செயல் புரிகிறார்?

ஆன்மீக வாழ்வில் நமது உயிர் மூச்சாக செயல் புரிகிறார்.

நாம் மூச்சு விடும்போது தான் வாழ்கிறோம்.

ஆனால் சுவாசிப்பதைப் பற்றியும், இதயத் துடிப்பைப் பற்றியும் நாம் நினைப்பதில்லை.

நமது சுவாசப் பைகளில், இதயத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டுமே அவற்றைப் பற்றி நினைப்போம்.

நாம் நினைத்தாலும், நினைக்கா விட்டாலும் தூய ஆவி நம்முள் செயல் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

தந்தை, மகன், தூய ஆவி என்று சொல்லும் போது அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறோமா?

ஆனாலும் தம திரித்துவக் கடவுள் தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் சிலுவை அடையாளம் போடும் போதும்,

தம திரித்துவத் தோத்திர செபம் சொல்லும் போதும் மனதில் தியானித்து சொல்ல வேண்டும்.

அப்போதுதான் அந்த செபத்துக்கான முழு அருள் வரமும் கிடைக்கும்.

உணவை பல்லால் அரைத்து உண்டால் சீக்கிரம் சீரணமாகும்.

வாயில் போட்டு அப்படியே விழுங்கினால் சீரணமாக நேரமாகும்.

ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும் போதும் நம்மைப் படைத்த தந்தையையும், மீட்ட மகனையும், 
வழி நடத்தும் தூய ஆவியையும் நினைத்துக் கொண்டே போட வேண்டும்.

ஆவியானவர் அன்பு, இரக்கம், மன்னிப்பு,   சாந்தம், சமாதானம், மகிழ்ச்சி ஆகிய,

மரணத்தால் கூட அளிக்க முடியாத பரிசுப் பொருட்களால் நமது இதயத்தை நிறப்புவார்.

தூய ஆவியின் வல்லமையால்  கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக் கொள்கிறோம். 

நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு ஆதாரமாக,  அவர் தனது தூய ஆவியானவரை நம் இருதயங்களுக்குள்  அனுப்பியுள்ளார். 


தூய ஆவியானவர் இறைவனை, "அப்பா, தந்தையே" 'என்று அழைக்கும் படி நம்மைத்  தூண்டுகிறார். 

இறைவனை நாம், "அப்பா, தந்தையே" என அழைப்பதற்கு தூய ஆவியின் தூண்டுதல் தான் காரணம்.

இதை விட நெருக்கமான உறவு வேறு இல்லை.

சில சமயங்களில் என்ன ஜெபிப்பதென்று தெரியாதபோதுகூட, தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வதோடு 

கடவுளுக்குப் பிரியமான வழியில் நம்மை வழிநடத்துகிறார்.

நாம் தூய ஆவி காட்டுகிற வழியே நடப்போம்.

அதுதான் செப வாழ்வு.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment