Friday, July 11, 2025

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். (திருப்பாடல்கள். 51:13)



அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 
(திருப்பாடல்கள். 51:13)

தாவீது கடவுளால் இஸ்ரேல் மக்களின் மன்னராகத் தேர்வு செய்யப் பட்டார்.

அவர் நல்லவர் தான்.    ஆனால் அவரது கண்களை அடக்கி வைக்காததால் விவச்சாரம் என்னும் பாவத்தில் வீழ்ந்தார்.

பொதுவாக பாவம் தனியாக வராது. அதன் குழந்தை குட்டிகளோடு வரும். கவனம் இல்லாதிருந்தால் பலுகிப் பெருகும்.

தாவீது விசயத்திலும் விபச்சாரத்தைத் தொடர்ந்து
பொய், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கொலை போன்ற எல்லைமீறிய பாவங்கள் வந்தன.

ஆயினும் கடவுளின் அளவில்லாத இரக்கத்தின் காரணமாக தாவீது மனம் திரும்பினார்,

 பாவங்களுக்காக மனத்தாபப் பட்டார், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டார், கடவுளும் மன்னித்தார்.

மனத்தாபத்தின் போது அவர் பாடிய பாடல்களைப் பாடி நமது பாவங்களுக்காக நாம் மனத்தாபப்பட வேண்டும் என்பதற்காகத் தாய்த் திருச்சபை அவற்றை பைபிளின் ஒரு நூலாக சேர்த்துள்ளது.

அவர் பாடிய பாடல்களில் ஒரு வசனத்தை மட்டும் நாம் தியானிக்க எடுத்திருக்கிறோம்.


பாவம் செய்தார். ஆனால்,  செய்த பாவங்களுக்காக மனத்தாபப் பட்டு, கடவுளிடம் தனது பாவங்களை அறிக்கையிட்டார். 

இந்தச் சங்கீதம் அவரது மனந்திரும்புதல் மற்றும் அறிக்கையிடுதலின் ஒரு பகுதி.

"அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்."
(திருப்பாடல்கள். 51:13)

அவரது வீழ்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, கடவுளின் இரக்கத்தின் மீது அவருக்கு இருந்த பிடிப்பு எத்தகையது என்று ஆச்சரியப்படுகிறோம்;

 ஏனெனில், வெறும் மனந்திரும்புதலோடும் மன்னிப்போடும் திருப்தியடையாமல், 

கடவுளுக்கான தனது ஊழியத்தையும் சேவையையும் தொடர உதவும்படி  இறைவனிடம் வேண்டுகிறார்.

தாவீதைப் போல நாமும் பாவம் செய்தவர்கள்தானே.
 
நாம் மனந்திரும்பிய பிறகு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்கிறோம்.

அப்புறம்?

மன்னிப்புப் பெற்ற திருப்தியில் மௌனமாக நமது வேலையை மட்டும் தொடர்கிறோமா?

பாவிகள் மனம் திரும்ப இறை ஊழியத்தில் உற்சாகமாக ஈடுபடுகிறோமா?

தாவீது கடவுளிடம் என்ன வேண்டுகிறார்.

"உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்."
(12-15)

"என்னைப் போல குற்றம் செய்தவர்களும் நான் மனம் திரும்பியது போல் மனம் திரும்ப வேண்டும்.

குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பித்து, அவர்களும் உம்மை நோக்கித் திரும்ப நான் உழைக்கத் தேவையான ஆர்வத்தையும், அருளையும் தாரும்.

அனைவரும் கேட்டு ஆன்மீகப் பயன் அடையும் வகையில் உமது நீதியைப் பாட உதவியருளும்.

எல்லோர் முன்னிலையிலும் உமது புகழைப் பாட என் இதழ்களைத் திறந்தருளும்."

என்று வேண்டுகிறார்.

 அவரே மனந்திரும்பும் நிலையிலிருந்தபோதிலும், மற்றவர்களையும் மனம் திருப்ப ஆசிக்கிறார்.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்."

அவர் தன்னை நேசித்தது போல தன் அயலானையும் நேசித்ததின் பயன் இது.
 
தாவீது இரகசியமாகப் பாவம் செய்தாலும் அவர் மன்னராகையால் அது பலருக்குத்
தெரியவரும்.

அவரது பாவ நிலையை அறிந்தவர்களிடையே 
தனது ஊழியத்தைத் தொடர்வது 
கடினம்தான்.

 உண்மையில் அது ஒரு சிலுவையைச் சுமக்கும் அனுபவம்.

மற்றவர்களிடமிருந்து அவருக்கு என்ன பட்டங்கள் கிடைத்திருந்தாலும்,

 மனந்திரும்பிய பிறகு அந்தப் பட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், 

கடவுளின் இரக்கத்தின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து 
இறை ஊழியம் செய்யத் தீர்மானிக்கிறார்.

இறை இரக்கத்தின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கை நமக்கு ஒரு பாடம்.

தன் வாழ்நாள் முழுவதும் தன் பாவத்தின் விளைவுகளை அவர் அனுபவித்திருக்கலாம், 

ஆனால் அவர் தொடர்ந்து போதித்தார், பாடினார், துதித்தார்.


உண்மையான மனந்திரும்புதலுக்கு அதுதான் அடையாளம்.

நாமும் ஒரு பாடம் கற்றுக் கொள்வோம்.

நாமும் பாவிகள் தான். பாவ மன்னிப்பு பெற்றபின் இறைப் பணியில் தொடர இறைவனின் இரக்கத்தை வேண்டுவோம்.


தாவீதைப் போல் இறை இரக்கத்தில் நம்பிக்கை வைப்போம்.

கடவுள் நம்மைப் பலப்படுத்தி, அவருடைய வேலையைச் செய்ய புதிய வழிகளைக்  காண்பிப்பார்.

தூய ஆவியில் மறு பிறவி அடைந்துள்ள அனைவருக்கும் தாவீது அரசரின் அனுபவம் ஒரு பாடம்.

பாவிகள் என்று கருதப்பட்ட தாவீது பெத்சபா வம்சத்தில் தான் பாவமாசில்லாத அன்னை மரியாளும், நமது மீட்பர் இயேசுவும் பிறந்தார்கள்.

பாவம் பெரியது தான், ஆனால் கடவுளின் இரக்கம் அதை விடப் பெரியது.

"இயேசுவே! குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment