Tuesday, July 1, 2025

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு நற்செய்தி 11:28)




 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, 
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
(மத்தேயு நற்செய்தி 11:28)

இன்பச் சுற்றுலா (Excursion) வாக வெளியூர் சென்று விட்டு புகை வண்டியில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

எதிர் இருக்கையில் எனது நண்பர் ஒருவர், எங்கள் ஊர்க்காரர் அமர்ந்திருந்தார்.

இறங்க வேண்டிய நிலையம் வந்தவுடன் நண்பர் என்னைப் பார்த்து, 

"மேலேயுள்ள Luggage (சுமை)ஐக் கொஞ்சம் இறக்கேன்" என்றார்.

"என்ன Luggage?" என்று கேட்டேன்.

"நண்பர் ஒருவர் சுமார் ஆறு கிலோ எடையுள்ள முந்திரிப் பருப்பைப் பரிசாகக் கொடுத்தார்.

முந்திரிப் பருப்பு சுவையாக இருக்கிறது.

ஆனால் மூட்டை கனமாக இருக்கிறது." என்றார்.

நானும் கட்டப்பட்டு சுமையை இறக்கி, அதோடு புகை வண்டியை விட்டு இறங்கினேன்.

"அப்படியே தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டேன். Porter  யாரையும் காணவில்லை."

வேறு வழியின்றி தூக்கிக்கொண்டு நடந்தேன்.

சுமையோடு நடக்க மிகவும் கட்டமாக இருந்தது.

"வா, அப்படியே நடப்போம். வண்டி எதையும் காணவில்லை."

"அட பாவி! நீ சாப்பிட நான் கட்டப்பட வேண்டுமா?" மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன்.

அவன் வீடு முதலில், அடுத்து என் வீடு.

அவன் கையை வீசி வர, நான்  கட்டப்பட்டு நடந்தேன்.

அவன் வீட்டை நெருங்கியதும்,

"சரிடா, முந்திரிப் பருப்பு முழுவதையும் நீயே வைத்துக் கொள். மனைவி மக்களுக்குக் கொடு."

அவன் அப்படிச் சொன்னதும் பருப்பு மூட்டையின் கனம் பறந்து போய் விட்டது.

சுமை இன்பகரமாகி விட்டது.

நான் வைத்திருப்மது என் மனைவி மக்களுக்கு.

மனைவி மக்களுக்காகச் செய்யும் எந்த வேலையும் கட்டமாகத் தெரியாது.

இப்போது இறைவாக்கைத் தியானிப்போம்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, 
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

இயேசு நம்மைப் பார்த்துச் சொல்கிறார்,

"பாரமான சுமையைச் சுமந்து களைத்துப் போயிருப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 

என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்கிறார்.

நாம் சுமக்கும் சுமைகள் பல வகை.

உடல்நலத்தைப் பாதிக்கும் நோய் நொடிகள் போன்ற துன்பங்கள்.

மனநலத்தைப் பாதிக்கும் அவமானங்கள், நிறைவேறாத ஆசைகள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்கள்,

நம்மை வெறுப்பவர்களால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் (இயேசு யூதர்கள் கையில் பட்ட பாடுகளைப் போல.)

நாம் சுமக்கும் சுமைகளால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கும் போது அவை மிகவும் கனமாக இருக்கின்றன, நமக்குச் சோர்வைத் தருகின்றன.

சுமை சுமந்து சோர்ந்திருக்கும் நம்மை இயேசு அழைக்கிறார்.

எதற்கு?

நமக்கு இளைப்பாற்றி தருவதற்காக.

எப்படி?

களைப்பை ஏற்படுத்தும் சுமைகளை நமக்கு இன்பம் தருவனவாக மாற்ற.

எப்படி?

இயேசுவை ஒரு வண்டியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வண்டிக்கு நுகக்கால் ஒன்று இருக்கும்.

வண்டியில் பாரத்தை ஏற்றி, நுகக்காலை ஒரு மாட்டின் கழுத்தில் ஏற்றி விட்டால் மாடு இலகுவாக பாரத்தை இழுத்துச் செல்லும்.

நாம் நமது துன்பங்களாகிய சுமையுடன் இயேசுவிடம் சென்றால் துன்பப் பாரத்தை அவர் ஏற்றுக் கொண்டு,

அவரது நுகத்தை நம் கழுத்தில் ஏற்றி விடுவார்.

துன்பச் சுமையின் பாரம் குறைந்து இழுப்பதற்கு எளிதாக இருக்கும்.


"என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்று இயேசு சொல்கிறார்.

நாம் இழுத்துச் செல்ல‌ வேண்டியது இயேசுவை.

நமது சுமையை இயேசு சுமக்கிறார்.

இயேசுவை நாம் இழுத்துச் செல்கிறோம்.

நமக்குப் பிடிக்காத ஆளை இழுத்துச் செல்வது கடினம்.

ஒரு காதலன் காதலியை இழுத்துச் செல்வது இன்பம்.

நமது துன்பங்களை இயேசு ஏற்றுக் கொண்டார்.

இயேசு இனிமையானவர்.

அவரை இழுத்துக் கொண்டு போவது இன்பகரமானது.

இயேசுவை நேசிப்பவர்களுக்கு சிலுவைப் பாதை இன்பகரமானது.

நமது சிலுவைப் பாரத்தை இயேசு சுமந்து விட்டார்.

இப்போது நாம் சுமந்து கொண்டிருக்கும் சுமையை அன்றே இயேசு பாடுகள் மூலமும், சிலுவையாகவும் சுமந்து விட்டார்.

இன்று நாம் இயேசுவை அணுகி நமது கனமான சுமையை அவர்முன் இறக்கி வைக்க வேண்டும்.

இயேசு நம்மை நோக்கி,

"மகனே, நீ இறக்கி வைத்துள்ள சுமையை நான் அன்றே சிலுவை வடிவில் சுமந்து உனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்து விட்டேன்.

அதனால் இன்று உனது சுமை உனக்கு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும் சிலுவையாக மாறியுள்ளது.

இன்று நீ சுமப்பது உனக்காக சிலுவையில் அறையப்பட்ட என்னை, உனக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தரப் போகும் என்னை.

நீ அனுபவிக்கப் போகும் நித்திய பேரின்ப வாழ்வை நினைத்துக் கொள்.

உன் மேலுள்ள என் நுகம் இனிமையாக இருக்கும்.

உனக்காக சிலுவையைச் சுமந்த நான் எவ்வளவு இனிமையானவர் என்று சுவைத்துக் கொண்டே நட மோட்ச வாழ்வை நோக்கி."

என்று கூறுகிறார்.

இப்போது புரிந்திருக்கும் துன்பங்கள் நிறைந்த நமது வாழ்வு பேரின்பத்தைப் பெற்றுத் தரப்போகும் சிலுவை.

நமது துன்பங்களை செபமாக அனுபவிப்போம்.

சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம் இதை நினைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்