Wednesday, September 19, 2018

பாவம் செய்வான் எனத் தெரிந்திருந்தும், ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?

பாவம் செய்வான் எனத் தெரிந்திருந்தும்,  ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?
*******************************-

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்."

"கடவுள் தாம் படைத்த எல்லாவற்றையும் நோக்கினார். அவை எல்லாமே மிகவும் நன்றாய் இருந்தன."

இறைவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார்.

இயற்கை இயங்க விதிகளை (laws of nature) வகுத்தது போலவே

மனிதன் இயங்கவும் விதிகளை (Commandments) வகுத்து அளித்தார்.

இயற்கைக்கு சுதந்திரம் இல்லாததால் அது படைக்கப்பட்ட தருணத்திலிருந்து விதிகள்படி இயங்கிவருகிறது.

ஆனால் மனிதனுக்குச் சுதந்திரம் (Freedom of choice and action.) அளிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திரத்தை சரியாகப்பயன்படுத்தி,

கட்டளைகட்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் என்பது

இறைவனது திட்டம்.

ஆனால்,

மனிதன் தனக்கு அளிக்கப்பட்ட
சுதந்திரத்தைத்

தவறாகப் பயன்படுத்திப்

பாவம் புரிந்திருக்கிறான்.

நல்லவனாகப் படைக்கப்பட்ட மனிதன்
பாவியாக மாறியிருக்கிறான்.

உண்பதற்காக அளிக்கப்பட்ட உணவை மண்ணில் கொட்டிவிட்டு,

"உணவைத் தந்ததால்தான் மண்ணில் கொட்டினேன்." என்று

உணவை அளித்தவர்மீது பழியைப் போடுவது எவ்வளவு தவறானதோ, 

அவ்வளவு தவறானது

"இறைவன் சுதந்திரம் தந்ததால்தான் மனிதன் பாவம் செய்தான்" என்று கூறுவது!

சிலர் எழுப்பும் கேள்வி:

"கடவுள் சர்வத்தையும் அறிந்தவர்,

மனிதன் பாவம் செய்வான் என்று முன்கூட்டியே அவருக்குத் தெரியும்.

தெரிந்திருந்தும் ஏன் அவனைப் படைத்தார்?"

"கடவுள் மனிதனைத் தமது சாயலாகப் படைத்தார். தெய்வச் சாயலாகவே அவனைப் படைத்தார."

தன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனுக்குக் கடவுள் கொடுத்த அன்புக் கட்டளை:

"உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக."

'நாம் நம்மை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்கும்போது' நாம் இறைவனின் சாயலைப் பிரதிபலிக்கிறோம்.

அதாவது,

தன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிப்பது இறைவனின் இயல்பு,

அதாவது அன்பின் இயல்பு.

அன்பு மயமான கடவுள் அளவுகடந்த விதமாகத் தன்னைநேசிப்பது போல

நேசிப்பதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

தன்னை நேசிப்பதுபோல நம்மையும் நேசிப்பது அவர் இயல்பு.

அன்பு

அன்பு  செய்வதற்காகவே

அன்புக் கட்டளையைக் கொடுத்து

அன்பர்களாக

நம்மைப் படைத்தார்.

கடவுள் தன் சுதந்திரத்தையும் நம்மோடு பகிர்ந்திருக்கிறார்.

நாம் அன்பு செய்யும்போதும், சுதந்திரமாகச் செயல்படும்போதும்,

நமது சுதந்திரத்தை இறைவனையும்,பிறரையும் அன்பு செய்யப் பயன்படுத்தும்போது

நாம் இறைவனின் சாயலைப் பிரதிபலிக்கிறோம்

" கடவுள் சுதந்திரம் தராமலிருந்திருக்கலாம்,

பாவம் செய்யாதிருந்திருப்போம்."

எனச் சிலர்  எண்ணுகிறார்கள்.

அதாவது  சாவி கொடுக்கப்பட்ட. பொம்மைகளாகப் படைக்கப்பட்டிருக்க விரும்புகிறார்கள்.

பொம்மைகட்கு சுதந்திரம் கிடையாது.

சாவி கொடுத்தபடிதான் இயங்கும்.

ஆனால் பொம்மைக்கு அன்பு செய்யத் தெரியாது.

பக்கத்துவீட்டில் பையன் பெற்றோர் சொல்லை கேட்கவில்லை என்பதற்காக,

நாம் பிள்ளைக்குப் பதிலாக    ரோபோ பொம்மை ஒன்று வாங்கி இரசித்துக் கொண்டிருப்போமா?

ரோபோ Program செய்தபடி இயங்கும்.

ஆனால் நம்மீது அன்பு காட்டுமா?

சுயமாக அன்பு செய்ய வேண்டுமானால் அன்பு செய்பவருக்கு சுதந்திரம் இருக்கவேண்டும். 

அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும்தான் நம்மை சுதந்திரத்தோடு படைத்தார்.

நாம் நமது சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவோம் என்று அவருக்குத் தெரியும்.

மனிதனைப் படைப்பது அவரது நித்திய காலத்திட்டம்.

மனிதன் பாவம்  செய்யப்போவது நித்திய காலமாகவே அவருக்குத் தெரியும்.

மனிதன் செய்யவிருக்கும் பாவத்துக்குத் தானே பரிகாரம் செய்யவும் நித்திய காலத்திலிருந்தே தீர்மானித்துவிட்டார்.

ஒரு சிறிய கற்பனை உரரையாடல்:

இறைவன்: மகனே,  நான் அன்பு செய்வதற்காகவும்,

அன்பு செய்யப்படுவதற்காகவும்

உன்னை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கியிருக்கிறேன்.

உனக்கு முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறேன்.

நான் உன்னை நேசிக்கிறேன்.

நீயும் என்னை அன்பு செய்வாயாக.

மனிதன் : இறைவா, நான் உம்மை அன்பு செய்கிறேன்.

ஆனால்  நீர் எனக்கு சுதந்திரம் அளித்திருப்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது.

"ஏன்? "

"நான் என் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பாவம் புரிந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்."

" நீ பாவம் புரிவாய் என்று எனக்குத் தெரியும்."

"பின் ஏன் என்னைப் படைத்தீர்? "

"அன்பு செய்யத்தான்.

நீ பாவம் செய்தாலும் நான் உன்னைக் கைவிடமாட்டேன்.

உனது பாவத்திற்கு நானே பரிகாரம் செய்வேன்."

"அது எப்படி?

நீர் இறைவன். உம்மால் கஸ்டப்பட முடியாது.

கஸ்டப்படாமல் எப்படிப் பரிகாரம் செய்ய முடியும்?"

"பரிகாரம் செய்வதற்காக நானே மனிதனாகப் பிறந்து பாடுகள்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, உயிரைக்கொடுத்து பரிகாரம் செய்வேன்."

"இது  எதற்கு வீண் வேலை.

என்னைப் படைக்காதிருந்தால்
உமக்கு ஒரு கஸ்டமும் இல்லை.

கஸ்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஏன் எனக்காக கஸ்டத்தை தேடிப்போய் ஏற்கவேண்டும்? "

"அன்பு.

அன்பு மட்டுமே காரணம்.

அன்பின் நிமித்தம் உன்னைப் படைத்த நான்

என் அன்பிலிருந்து என்றும் மாறமாட்டேன்.

நீ பாவம் செய்தாலும், நீ வருந்தும்பொது மன்னிக்கத் தயாராக இருக்கிறேன்.

ஏன் படைத்தீர் என்று கேட்பதை விட்டு விட்டு அன்பு செய்.

அதைத்தான் நான் விரும்புகிறேன்."

"ஆண்டவரே நீர்  சர்வத்தையும் அறிந்தவர்,

சர்வ ஞானம் உள்ளவர்.

நீர் என்ன செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

உம்மை விசுவசிக்கிறேன்,

நம்புகிறேன்,

நேசிக்கிறேன்."

ஆண்டவர் நமக்குச் சுதந்திரம் தந்திருக்கிறார்,

முழுமனதோடு அன்பு செய்ய.

அன்பு செய்வோம், அவரடி அடைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment