விண்ணிலிருந்து ஒரு கடிதம்.
********************---**--+*--**
மோட்சம்,
22- 09- 18.
அன்புள்ள அத்தான்,
என்னிடமிருந்து கடிதம் வரும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள்.
வெளியில் சாதாரணமாகத் தோன்றினாலும்
உள்ளத்தில் அழுதுகொண்டிருக்கும்
உங்களுக்கும்,
நமது பிள்ளைகட்கும்
ஆறுதலாக இக்கடிதத்தை எழுதுகிறேன்.
அதுமட்டுமல்ல, விண்ணகத்தில்
இறைவனோடு
எண்ணற்ற புனிதர்களும்,
நானும்
வாழ்ந்து கொண்டிருக்கும்
பேரின்ப வாழ்வைப் பற்றித்
தங்களுக்குத் தெரியப்படுத்துவதும்
இக்கடிதத்தின் நோக்கம்.
இறந்தவர்கட்காக வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை.
யாராவது தாங்கள் நேசிப்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை எண்ணி வருத்தப்படுவார்களா?
இறப்பு என்பது பிரிவு அல்ல.
நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே,
''இருந்தாலும், இறந்தாலும் இறைவன் கையில்தான்" என்று.
நாம் அனைவரும் ஒரே இறைவன் கையில்தானே இருக்கிறோம்!
ஒரே கையில் ஒன்றாய் இருக்கும் நம்மை யாரால் பிரிக்கமுடியும்?
உண்மையில்
நாம் எல்லோரும்,
இருப்பவர்களும், இறந்தவர்களும்
ஒரே இறைவனுக்குள்தான் இருக்கிறோம்!
நம்முள் அவரும், அவருள் நாமும் இருக்கும்போது நமக்குள் பிரிவேது?
நீங்கள் நினைப்பது புரிகிறது.
"உனது விண்ணக வாழ்வின் அனுபவங்களைக் கூறாமல் வளவளவென்று எழுதிக்கொண்டிருக்கிறாயே என்றுதானேகேட்கிறீர்கள்!
எனது விண்ணக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தானே கடிதமே எழுதுகிறேன்.
எனது அனுபவங்கள் உங்களுக்கு ஆறுதலை மட்டுமல்ல,
விண்ணகம் வர ஆசையையும் தரும்.
உலகத்தில் வசிப்பவர்கட்கு மரணம் ஒரு முடிவு போல தெரியும்.
உண்மையில் அது முடிவு அல்ல.
எந்த வாழ்வுக்காக படைக்ப்பட்டோமோ அந்த வாழ்வின் ஆரம்பம்.
மோட்சத்தின் நுழைவு வாயிலே மரணம்தான்.
வெளியே இருந்து வீட்டிற்குள் நுழைபவர்கள் கால் கைகளிலுள்ள அழுக்கைக் கழுவி விட்டு நுழைவதுபோல
மோட்சவாசலில் உள்ள உத்தரிக்கிறத் தலத்தில் நமது ஆன்மாவைத் தூய்மைப் படுத்திவிட்டு உள்ளே நுழைகிறோம்.
எனது வாழ்நாளில் இறுதிமாதங்களில் நான் பட்ட உடல் வாதைகளே உத்தரிக்கிறத்தலம் மாதிரிதான்.
வாழ்வின் கடைசிக்காலத்தில் மட்டுமல்ல,
எந்தக்காலத்தில் ஏற்படும்
எந்தத்துன்பத்தையும் பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக்கொடுத்தாலும்
உத்தரிக்கிறத்தலம் மாதிரிதான்.
சிலுவையைச் சுமப்பவர்கள் பாக்கியவான்கள்,
அவர்கள் சீக்கிரமாகவே விண்ணகத்திற்குள் நுழைவார்கள்.
விண்ணக வாழ்வுக்கு வருவோம்.
நான் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும்
மோட்சத்தின் பேரின்ப நிலையை உள்ளதை உள்ளபடியே விபரிக்க
உலக மொழிகளில் வார்த்தைகள் இல்லை.
உலகமொழிகள் உலக சம்பத்தப்பட்ட காரியங்களைப் பற்றிப் பேசுவதற்காகவே உருவாக்கப்பட்டவை.
ஆன்மீக விசயங்கள் உலகத்திற்கு அப்பாற்பட்டவை.
ஆனாலும் வேறு வழியில்லாமல் ஆன்மீகம் பேசவும் உலகமொழியையே பயன்படுத்துகிறோம்.
அதைப் புரிந்து கொள்ளக்கூடிய விதமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
கடவுள் ஒரு ஆவி.
God is a spirit.
ஆவி இருக்க
நாம் புரிந்துகொள்வது போன்ற
இடம் தேவை இல்லை.
ஆகவே மோட்சம் ஒரு இடம் இல்லை.
Heaven is not a material place.
It is a state of life.
அது ஒரு வாழ்க்கை நிலை.
இறைவனோடு ஒன்றித்த பேரின்ப நிலை.
இறைவன் நித்தியர்.
ஆகவே நாம் அனுபவிக்கும் பேரின்பமும் நித்தியமானது.
அதை விபரிக்க மனித மொழியில் வார்த்தைகள் இல்லை.
அதை அனுபவிக்கவேண்டும்
"கண்ணுக்குப் புலப்படாதது, காதுக்கு எட்டாதது,
மனித உள்ளத்தில் எழாதது.
கடவுள் தமக்கு அன்பு செய்கிறவர்களுக்காக ஏற்பாடு செய்தது".
என்ற புனித சின்னப்பரின் வார்த்தைகளின் பொருள் இங்கு வந்தபின்தான் புரிகிறது.
விண்ணகத்தின் அழகை மனித உள்ளத்தால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.
மனிதனின் கற்பனைக்கு எட்டாத விண்ணக பேரின்ப நிலையை அடைய
இறக்கும்போது மனித ஆன்மா தேவ இஸ்டப்பிரசாத நிலையில் இருக்க வேண்டும்.
உலகில் இறைவனை விசுவாசக் கண்ணால் மட்டுமே பார்த்தேன்.
ஆனால் இங்கு விசுவாசம் தேவை இல்லை.
என்னைப் படைத்தவரை நேருக்கு நேராக,
அவர் எப்படி இருக்கிறாறோ அப்படியே பார்க்கிறேன்.
இப்படியே என்றென்றும் பார்ப்பேன்.
இறைவனோடு ஒன்றித்து இருப்பதால் கிடைக்கும் பேரின்பம் நித்தியமானது என்றேன்.
அதைக் கொஞ்சம் விளக்குகிறேன்.
உலக இன்பம் சிற்றின்பம், நிலையற்றது.
எவ்வளவு ருசியாகச் சாப்பிட்டாலும், உணவின் ருசி நாவில் இருக்கும் வரைதான்.
மணிக்கணக்கில் பயணம்செய்து குற்றாலத்தில் குளித்தாலும்,
அருவிக்குளிப்பின் சுகம் அருவிக்குள் நிற்கும் வரைதான்.
உலகின் எந்த இன்பமும் நிலையானதல்ல.
இறைவனின் ஒன்றிப்பில் நாம் காணும் பேரின்பம் இடைவெளி இன்றி நிரந்தரமானது.
இறைவனோடு ஒன்றிப்பு என்ற ஆன்மீக சொற்றொடரை எப்படி புரிந்துகொள்வது?
மண்ணுலகில் வாழ்வோர்
செபம் சொல்லும்போதும்,
தியானம் செய்யும்போதும்,
பராக்கிற்கு இடமின்றி,
நமது சிந்தனையில்
இறைவனை மட்டுமே நினைப்பதை
'இறைவனோடு ஒன்றித்து செபித்தல்' என்கிறோம்.
சிந்தனையில் இறைவனோடு ஐக்கியமாவதுதான் செபம்.
இந்த ஐக்கியத்தில் இறைவனை முகத்துக்கு முகம் பார்ப்பதில்லை,
நமது விசுவாசக் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும்.
இது விண்ணக ஐக்கியத்தின் முன்சுவைதான்.(Pretaste of eternal union with God.)
"ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள்."
(சங். 33:9)
சங்கீத ஆசிரியர் உலகில் வாழ்வோருக்குக் கொடுக்கும் அறிவுரை இது.
பூவுலகில் விசுவாசக் கண்ணால் பார்த்த நம் இறைவனை
இங்கு நேருக்கு நேர் பார்ப்பதோடு,
அவரோடு ஐக்கியமாகி
அவர் எவ்வளவு நல்லவர்,
எவ்வளவு இனிமையானவர் என்று
சுவைத்துக் கொண்டிருக்கிறேன்.
இது நிரந்தரமான சுவை.
உண்மையில் விண்ணகவாசிகளின் நித்தியமான ஒரே வேலை
சர்வ வல்லப தேவனின் ஐக்கியத்தில்
அவரது அன்பையும், நற்குணத்தையும், இனிமையையும் சுவைத்துக் கொண்டிருப்பதுதான்.
இதுவே நித்திய பேரின்பம்.
இத்தகைய பேரின்பம் எனக்குக் கிடைத்திருப்பதற்காக
நீங்களும்,
பிள்ளைகளும்,
பேரப்பிள்ளைகளும்,
பேத்தியும்,
பூட்டிகளும்
மகிழ்ச்சி அடைய வேண்டுமேதவிர
வருந்தக்கூடாது.
விண்ணகவாசிகள் இறைவனோடு மட்டுமின்றி
புனிதர்களோடும்
ஐக்கியமாயிருக்கிறார்கள்.
புனிதர்கள் உலகில் இறைவனுக்காக மட்டுமே
வாழ்ந்து,
நமக்கு முன்மாதிரிகையாக இருப்பவர்கள்.
இறைவனின் அன்னை மரியாளைப் பார்த்தபோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
கிறிஸ்துவின்பால் அவர்கள் கொண்டுள்ள அன்பு,
அவரோடு அன்பில் இணைந்த அனைவரையுமே இணைக்கிறது.
"நான் திராட்சைக் கொடி: நீங்கள் அதன் கிளைகள். ஒருவன் என்னுள்ளும் நான் அவனுள்ளும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனி தருவான். ஏனெனில், என்னை பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது."(அரு. 15:5)
நம் ஆண்டவரின் இவ்வார்த்தைகள் நாம் எவ்வாறு அவரில் இணைந்துள்ளோம் என்பதை விளக்குகிறது.
உங்களுக்கு முன் இங்கு வந்துள்ள நமது உறவினர்கள் பூமியில் உள்ளவர்களுக்காக எப்பொழுதும் இறைவனிடம் பரிந்து பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் ஆகிய மூன்று புண்ணியங்களுள்
விசுவாசம் இப்பொழுது தேவை இல்லை,
ஏனெனில் விசுவாசத்தால் பார்த்த இறைவனை நேரில் பார்த்துவிட்டோம்.
நம்பிக்கை தேவை இல்லை,
ஏனெனில் நாங்கள் கிடைக்கும் என நம்பிய எல்லாம் கிடைத்துவிட்டன.
இறையன்பு மட்டுமே எங்களிடம் இருக்கிறது.
பிறர் அன்பு இறையன்பில் அடங்கும்.
இறைவனில் ஐக்கியமாகி அவரது அழகைச் சுவைப்பதும்,
உலகில் உள்ளவர்களை அன்பு செய்வதும்,
அவர்கட்காக இறைவனிடம் பரிந்து பேசுவதும்தான் எங்களுக்குப் பேரானந்தம் தருகிறது.
நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும் உங்களுக்காகப் பரிந்து பேசிக்கொண்டுதான் இருப்போம்.
நீங்கள் எல்லோரும் இறைவனுக்காக வாழ்ந்து,
இறைவனிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
இறைவன் உங்களோடு இருக்கிறார்.
ஆகவே இறைவனோடு ஐக்கிமாயுள்ள நானும் உங்களோடிருக்கிறேன்.
இது நமக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தும்.
அனைவர் வீட்டிலும் இறைனடி சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.
மொட்சம் பற்றிய உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தங்கள்.
நமது பிள்ளைகள், பேத்தி, பேரன்மார், பூட்டிகள் அனைவருக்கும் என் அன்பைத் தெரியப்படுத்துங்கள்.
இறையன்பில் என்றும் தங்கள் மனைவி,
செல்வ பாக்கியம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment