இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.
"தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்."
(லூக்கா நற்செய்தி 10:42)
மார்த்தாள், மரியாள் வீட்டுக்கு இயேசு சென்றிருந்த போது மார்த்தாள் அவருக்கு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.
மரியாள் ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதாவது ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்தாள்.
ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பது தான் செபம்.
நமது வீட்டில் சிறு பிள்ளைகள் தாயின் மடியில் அமர்ந்திருக்கும்.
அல்லது தாயின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்.
தெருவில் போய் விளையாடினாலும் அடிக்கடி வீட்டுக்குள் வந்து அம்மாவைப் பார்த்து விட்டு விளையாடப் போகும்.
அதாவது தாயின் பிரசன்னத்தில், சந்நிதியில் விளையாடிக் கொண்டிருக்கும்.
அதேபோல, நாம் கடவுளுடைய சந்நிதியில் வாழ்வது தான் செபம்.
எப்படி ஒரு குழந்தை தனது தாயின் சந்நிதியில் வாழ்கிறதோ
அப்படியே பிள்ளைகளாகிய நாம் நமது தந்தையாகிய இறைவன் சந்நிதியில் வாழ்வோம்.
அதுதான் செபம்.
செபம் இல்லாத வாழ்க்கை இயேசு இல்லாத பைபிள்.
Life without prayer is Bible without Jesus.
இயேசுவைப் பற்றியதுதான் நற் செய்தி. இயேசு இல்லாவிட்டால் அது வெறும் செய்தி.
செபம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.
உயிர் இல்லாத உடல்.
சிலர் செபத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து கொண்டுள்ளார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை செபம் என்றால் இறைவனிடம் கேட்டல்.
அவர்கள் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறைவாக்கை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள். அது செபத்தின் ஒரு பகுதி.
நடக்க முடியாமலிருக்கும் போது ஊன்றுகோல் உதவுவது போல செபம் உதவுகிறது என்பது அவர்கள் எண்ணம்.
Some people wrongly think that prayer is a support system which is used when we can no longer help ourselves
அவர்கள் கட்டங்கள் வரும் போது மட்டும் கடவுளைத் தேடுவார்கள்.
கடவுளைத் தேடுவது செபம் அல்ல. கடவுளில் வாழ்வதுதான் செபம்.
சர்வ வல்லமை வாய்ந்த, சர்வ ஞானமுள்ள கடவுளில், கடவுளோடு வாழும் போது நாம் ஏன் உதவியைத் தேட வேண்டும்?
நடந்து செல்பவன் வேகமாகச் செல்ல காரைத் தேட வேண்டும்.
காரில் பயணிப்பவன் எதைத் தேட வேண்டும்?
கடவுளில் வாழ்பவன் தன் தேவைகளை நினைத்தாலே போதும்.
நமது நினைவுகளை அறியும் கடவுள் அவற்றை நிவர்த்தி செய்வார்.
செபம் உதவி கேட்கும் கருவி அல்ல. உதவி செய்பவருக்குள் வாழ்வதுதான் செபம்.
அநேகர் காலை செபம், இரவு செபம், செபமாலை, திருப்பலி ஆகியவற்றை மட்டுமே செபம் என்று நினைக்கிறார்கள்.
எல்லாவற்றையும் சேர்த்தாலே ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தான் ஆகும்.
ஆனால் 24 மணி நேரமும் செப நேரம்தான். சுவாசிப்பது தொடங்கி தூங்குவது ஈறாக அனைத்து செயல்களும் செபம் தான்.
இறைவன் எங்கும் இருக்கிறார். அனைத்தும் அவருக்குள் நடைபெறுகின்றன.
நாம் செய்யும் அனைத்தும் நமது சம்மதத்துடன், உணர்வு பூர்வமாக நடைபெறும் போது செபம்.
வெறுமனே வாழ்வது
மிருகங்களுடைய வாழ்க்கைக்குச் சமம்.
மிருகங்களால் செபம் செய்ய முடியாது.
இறைவன் சர்வ வல்லபர், நாம் ஒன்றுமில்லாதவர்கள்.
இயேசு நம்மை இறைவனை நோக்கி, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே!" என்று அழைக்கச் சொன்னார்.
இயேசுவின் அருளால் ஒன்றுமில்லாத நாம் தந்தை இறைவனின் பிள்ளைகளாகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்.
நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்கச் சொன்ன கடவுள் தன்னை நேசிப்பது போல நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.
அவரது நேசத்தினால் நாம் அவருடைய பிள்ளைகள் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.
"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)
இது நமது ஆண்டவரின் அறிவுரை.
ஆற்றுத் தண்ணீரின் அளவு கடல் நீரின் அளவை விடக் குறைவாக இருந்தாலும் ஆறு கடலில் கலக்கும் போது அது கடல் நீரோடு ஒன்றித்து விடுவது போல
நிறைவில்லாத நாம் நிறைவான இறைவனோடு ஒன்றிக்கும் போது நமது நிறைவின்மை இறைவனின் நிறைவோடு ஒன்றித்து விடுகிறது.
நாம் இறைவனோடு ஒன்றிப்பது தான் செபம்.
ஒன்றித்து வாழ்வது செப வாழ்வு.
(தொடரும்)
லூர்து செல்வம்
No comments:
Post a Comment