Tuesday, July 15, 2025

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)



கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். (மத்.7:7)


"தம்பி, உட்கார். என்ன பிரச்சினை?"

"தெரியல, டாக்டர்.  உடம்புக்கு சரியில்லை. என்ன பிரச்சினைன்னு தெரியல.'

"உன்னுடைய உடம்புக்கு என்ன பிரச்சினைன்னு உனக்கே தெரியலையா?"

"உடம்பு என்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதை நான் உண்டாக்கவில்லையே. என்னால் 
கை, கால், தலை ஆகியவற்றைத் தான் பார்க்கவே முடியும்.

என் முகத்தைத் கூட என்னால் பார்க்க முடியாது. 

உடலுக்கு உள்ளே உள்ள உறுப்புகள் எது எது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது.

பிரச்சினை அவற்றில்தான் இருக்க வேண்டும்."

"என்னாலும் அவற்றைப் பார்க்க முடியாது. Scan எடுத்துப் பார்ப்போம்."

"மன்னிக்க வேண்டும். நீங்கள் இது விடயமாக நான் பார்க்கும் நான்காவது டாக்டர். மற்ற மூவரும் நீங்கள் சொன்னபடி தான் சொன்னார்கள். மூவரும் scan எடுத்தார்கள்."

"என்ன சொன்னார்கள்?"

"டாக்டர், ஐந்தும் மூன்றும் எத்தனை என்று யாரிடம் கேட்டாலும் எட்டு என்று தான் சொல்வார்கள்.
யாராவது ஒன்பது என்று சொன்னால் அவருக்குக் கணக்குத் தெரியாது என்று அர்த்தம் ""

"அதாவது மூன்று பேரும் வெவ்வேறு விதமாகச் சொன்னார்கள். யாரும் உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை.

அப்போ என்னாலும் கண்டுபிடிக்க முடியாது என்கிறாய். அப்படித்தானே."

"அப்படியேதான்."

"பிறகு ஏன் என்னிடம் வந்தாய்?"

'அது என்னுடைய அறியாமை."

"அப்போ ஒன்று செய். எல்லாம் அறிந்தவர் கடவுள் மட்டும் தான்.

முழுப் பாரத்தையும் அவர்மேல் போட்டு விடு.  டாக்டர் என்ற முறையில் நானும் பார்க்கிறேன். ஆனால் கடவுள் நினைத்தது தான் நடக்கும்."

"சரி, டாக்டர் அப்படியே செய்கிறேன்."
                  ************

சுகம், சுகமின்மை என்றால் நாம் நினைப்பது நமது உடலை மட்டும் தான்.

உடல் உறுப்புகள் பிரச்சினை இல்லாமல் இயங்கினால் நாம் சுகமாக இருக்கிறோம், பிரச்சினை ஏற்பட்டால் நமக்குச் சுகமில்லை என்பது நமது எண்ணம்.

ஆனால் நம்மைப் படைத்த கடவுள் நமது உடலை மட்டும் படைக்கவில்லை.

உடலையும் ஆன்மாவையும் படைத்தார்.

நமது உடலை உயிரோடு வாழ வைப்பது ஆன்மா தான்.

ஆன்மா பிரிந்து விட்டால் உடலால் அசையக்கூட முடியாது. அது பிணமாகிவிடும்.

உண்மையில் நாம் என்றால் நமது ஆன்மா தான்.

ஆனால் உடலைப் பற்றி அக்கறை எடுக்கும் நாம் ஆன்மாவைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

உடலுக்கு ஒரு சிறிய நோய் வந்தாலும் டாக்டரிடம் ஓடுகிறோம்.

ஆன்மாவுக்கு நோய் வந்தால்?

பாவம் தான் ஆன்மாவுக்கான நோய்.

ஆன்மா பாவத்தில் விழ நேரிட்டால் அதிலிருந்து சுகம் பெற கடவுளிடம் ஓடுகிறோமா?

கடவுளை நோக்கி 'ஓட' வேண்டிய அவசியம் இல்லை, அவர் எப்போதும் நம்முடன் தான் இருக்கிறார்.

நமது பாவங்களுக்காக மனம் வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்கிறோமா?

அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய பிரதிநிதியாகிய குருவானவரிடம் பாவ சங்கீர்த்தனம் செய்கிறோமா?

நாம் செய்யும் ஆன்மீக செயல்களில் கூட உடல் மட்டும் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

செபமாலை செபிக்கும்போது கை செபமாலை மணிகளை உருட்டுகிறது.

வாய் செபத்தைச் சொல்கிறது.

மனம் தியானிக்கிறதா?

திருப்பலிக்குப் போகும் போது உடல் கோவிலில் தான் இருக்கிறது.

கண் பீடத்தின் மீது தான் இருக்கிறது.

காதில் பிரசங்கம் விழுகிறது, செபம் விழுகிறது, பாட்டு விழுகிறது.

மனம்?

பிரசங்கம் எப்போது முடியும்?
பூசை எப்போது முடியும்?
எவ்வளவு கறி வாங்கலாம்?
TV யில் என்ன‌படம் போடுவான்?

என்று சுற்றிக் கொண்டிருந்தால்,

தண்ணீர் மேல் படாமல் குளித்தால் உடலுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஆன்மாவுக்கு இருக்கும்.

உடல் நலமாக இருக்க வேண்டுமென்றால்
 சத்துள்ள ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும்.

ஆன்மா  நலமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குக் கொடுக்க வேண்டிய சத்துள்ள உணவு செபமும், நற் செயல்களும்.

செபத்தின் மூலம் ஆன்மா இறைவனோடு ஒன்றித்திருக்கும்
நற் செயல்கள் மூலம் நாம் நமது அயலானோடு ஒன்றித்திருக்கும்.

இறையன்பு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறரன்பும்.

இயேசு தனது பொது வாழ்வின் போது சென்ற இடமெல்லாம் நோயாளிகளைக் குணமாக்கினார். 

ஒவ்வொரு முறை குணமாக்கும் போதும் அவர் கூறிய வார்த்தைகள், "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று."

அடுத்து "உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டன."

அவ்வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்.

நம்மிடமும் விசுவாசம் இருந்து நாம் பாவமில்லாமல் இருந்தால் நமது உடல் நோயும் குணமாகும்.

டாக்டரைப் பார்க்க வேண்டாமா?

டாக்டரைப் பார்த்தாலும் மருந்து சாப்பிட்டாலும் குணமளிப்பது விசுவாசமே.

"நம்புங்கள், செபியுங்கள், நல்லது நடக்கும்.

என்ன பொருள்?

நம்பிக்கையோடு செபிக்கும் போது என்ன நடந்தாலும் நல்லதுதான்.

நலம் என்ற வார்த்தைக்கு லௌகீகத்தில் பொருள் வேறு,  ஆன்மீகத்தில் பொருள் வேறு.

லௌகீகத்தில் நமது உடல் 
உடல் சார்ந்த நோய் நொடிகள் இன்றி வாழ முடிவது நலம்.

ஆன்மீகத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று படைக்கப்பட்டோமோ அப்படி வாழ முடிவது நலம்.

எங்கு வாழ்ந்தாலும் நாம் இறை உறவுடன் வாழ்வதுதான் நலமான வாழ்வு.

இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகில் இறை உறவுடன் வாழ்வதும் நலமான வாழ்வு தான்.

"நம்புங்கள், செபியுங்கள், நலமுடன் வாழ்வீர்கள்.

புனித யோசேப்பை எடுத்துக் கொள்வோம்.

இயேசு திருக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே யோசேப்பு இயேசுவின் மடியில் தலை வைத்து மரித்தார்.

இயேசு ஏன் அவரை வாழ வைக்காமல் இறக்க விட்டார்?

கேள்வி தவறு.

இயேசு அவரை  வாழ வைத்தார், நித்திய பேரின்ப வாழ்வு.

இப்போது மோட்சத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவ்வுலகில் வாழ்வதும் வாழ்வு தான், மறுவுலகில் வாழ்வதும வாழ்வுதான்,

ஒரு வித்தியாசம்,

இவ்வுலக வாழ்வு தற்காலிகமானது,

மறுவுலக வாழ்வு நிலையானது.

ஒரு அப்பாவுக்கு இரண்டு பிள்ளைகள்.

ஒரு நாள் அவர் இரண்டு பிள்ளைகளையும் அழைத்து,

"இந்த பீரோ உள்ளே ஏராளமாக தங்க நகைகளும், பணமும் உள்ளன.

எதை வேண்டுமானாலும் கேளுங்கள். 

யார் அதிகம் கேட்கிறார்களோ அவர்களுக்கு கேட்டதைக் கொடுப்பேன்."

மூத்தவன் கேட்டான். 

"எனக்கு ஆயிரம் பவுன் நகையும், பத்து இலட்சம் பணமும் கொடுங்கள்."

இளையவன் கேட்டான்,

"எனக்கு பீரோ சாவியைக் கொடுங்கள்."

அப்பா சாவியைக் கொடுத்து விட்டார்.

மோட்சம் நமக்கு வேண்டுமா?

கடவுளிடம் விசுவாசத்தைக் கேட்போம்.

அதுதான் மோட்ச வாழ்வுக்கான சாவி.

விசுவாசம் இருந்தால் இவ்வுலகிலும் நலமாக வாழலாம், மறுவுலகிலும் நலமாக வாழலாம்.

"கேளுங்கள் கொடுக்கப்படும்."

"விசுவாசத்தைத் தாரும். அதுவே போதும்."

விசுவாசத்தினால் எதையும் சாதிக்கலாம்.

லூர்து செல்வம்.

Monday, July 14, 2025

இறைவன் வழிகள் அதிசயமானவை.



இறைவன் வழிகள் அதிசயமானவை.

பைபிளைக் கூர்ந்து வாசித்தால் சில நிகழ்வுகளுக்கு நம்முடைய பார்வையிலிருந்து விளக்கம் கொடுக்க முடியாது.

இறைவனுடைய பார்வையிலிருந்து (From the point of view of God) பார்த்தால்தான் புரியும்.

இறைவனின் வழிகள் நமது புரிதலுக்கு அப்பாற்பட்டவை,
அதிசயமானவை.

நமது வீட்டில் brake பிடிக்காத ஒரு சைக்கிள் இருக்கிறது.

brake பிடிக்காது என்று வீட்டில் அனைவருக்கும் தெரியும்.

நமது மகன் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் ப்ரேக் பிடிக்காத காரணத்தினால் சைக்கிளோடு கீழே விழுந்து காயத்தோடு வீட்டுக்கு வருகிறான்.

நமது முதல் கேள்வி எதுவாக இருக்கும்?

"ஏண்டா ப்ரேக் பிடிக்காது என்று தெரிந்தும் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனாய்?"

இதுதான் நமது பார்வை.

பாவம் செய்வான் என்று தெரிந்தும் ஏன் கடவுள் மனிதனைப் படைத்தார்?

கடவுள் அளவில்லாத அன்புள்ளவர்.

அன்பு காரணமாக தன்னைப் போல், தன் சாயலில் மனிதனைப் படைக்க விரும்பினார்.

கடவுள் துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

துவக்கம் இல்லாத மனிதனைப் படைக்க முடியாது.

படைக்கும் போதே துவக்கம் வந்து விடுகிறது.

ஆகவே முடிவில்லாத மனித ஆன்மாவைப் படைத்தார்.

பரிபூரண சுதந்திரமாகிய‌ தன் பண்பை அவனோடு பகிர்ந்து கொண்டார்.

பரிபூரண சுதந்திரத்தில் அவர் குறுக்கிட மாட்டார், குறுக்கிட்டால் பரிபூரணம் போய்விடும்.

சுதந்திரத்தை மனிதன் பாவம் செய்யப் பயன்படுத்துவான் என்று கடவுளுக்குத் தெரியும்.

ஆகவே அன்பின் மிகுதியால் அவனைப் படைக்கும் திட்டத்தோடு அவனை மீட்கும் திட்டத்தையும் போட்டார்.

இரண்டு திட்டங்களும் நித்தியமானவை.

அன்பின் மிகுதியால் மனிதனைப் படைத்த கடவுள் அதே அன்பின் மிகுதியால் மனிதனைப் பாவத்திலிருந்து மீட்க மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

மனிதன் மீது உள்ள அன்பின் மிகுதியால்தான் பிறப்பும் இறப்பும் இல்லாத கடவுள் பிறப்பும் இறப்பும் உள்ள மனித சுபாவத்தையும் ஏற்றுக் கொண்டார்.

அவரது அன்பின் மிகுதியை நமக்குக் காட்ட அவர்‌ தேர்ந்தெடுத்த வழி நமது புரிதலுக்கு அப்பாற்பட்டது.

தனது பாடுகள் மூலமும், சிலுவை மரணத்தின் மூலமும் தனது அன்பின் மிகுதியை நமக்குப் புரிய வைத்தார்.
                   ****
கடவுள் மனிதனாகப் பிறக்க தேர்ந்து கொண்டது  யாக்கோபின் வம்சம்.

ஈசாக்குக்கு இரண்டு பிள்ளைகள் ,
ஏசா, யாக்கோபு.

யாக்கோபை இஸ்ரேல் இனத்தின் தந்தையாக இறைவன் தேர்வு செய்தார்.

தேர்வு செய்யப்பட்ட யாக்கோபு பாவம் செய்தார்,  மனித இனத்தின் முதல் தந்தையாகப் படைக்கப்பட்ட ஆதாம் படைக்கப்பட்ட பின் பாவம் செய்ததைப் போல.


யாக்கோபு தன் தந்தையை ஏமாற்றி அவர் ஏசாவுக்காக வைத்திருந்த ஆசீர்வாதங்களைக் கைப்பற்றினார். 

அவர் செய்த பாவத்துக்காக அவரை இறைவன் தள்ளி விடவில்லை, மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

பாவிகளாகிய நம்மையும் இறைவன் மன்னிப்பார் என்பதற்கு இது ஒரு முன் அடையாளம்.

பாவிகளைத் தேடித்தானே இயேசு உலகுக்கு வந்தார்!

நாம் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்போம்.

யாக்கோபின் பன்னிரு புதல்வர்களுள் ஒருவர் யூதா.

யூதாவின் கோத்திரத்தில் தான் இயேசு பிறந்தார்.

யூதாவில் ஆரம்பித்து தாவீது வரை வம்ச பரம்பரை நான்கு பெண்கள் வருகிறார்கள்.

தாமார், ராகாப், ரூத், பத்சேபா.

இவர்களில் ரூத்தைத் தவிர மற்ற மூவரும் பாவிகள்.

தாமார் தனது மாமனார் யூதா மூலமாக அவருக்குத் தெரியாமல் அவரது மகனைப் பெற்றவள்.

ராகாப் ஒரு கானானிய விபச்சாரி.

யூதர்கள் எரிக்கோ நகரைக் கைப்பற்ற உதவினாள்.


இவர் சல்மோன் என்ற யூதரை மணந்து போவாஸைப் பெற்றார்

. போவாஸ் ரூத்தின் கணவனும், தாவீது மன்னரின் தாத்தாவுமாவார். 

ஒரு கானானிய விபச்சாரியாக இருந்த ராகாப், மெசியாவின் வம்சாவளியில் சேர்க்கப்பட்டது, கடவுளின் திட்டம்.

பத்சேபாவைப் பற்றிக் குறிப்பிடும் போது மத்தேயு,

" ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்." ‌என்று எழுதுகிறார்.
(மத்தேயு நற்செய்தி 1:6)

தாவீது அரசர் மனம் திரும்பிய பாவி.

இப்போது ஒரு கேள்வி எழும்.

தன்னைப் பெற்ற தாயைப் பாவ மாசில்லாமல் காப்பாற்றிய பரிசுத்தராகிய இயேசு 

ஏன் பாவிகள் நிறைந்த ஒரு வம்சாவளியில் பிறந்தார்?

இயேசு பாவிகளைத் தேடியே உலகுக்கு வந்தவர்.

சாக்கடைக்குள் விழுந்து விட்ட ஒருவரைக் காப்பாற்ற சாக்கடைக்குள் குதித்து தானே ஆக வேண்டும்.

இயேசு பாவிகளை நேசித்தார் என்பதற்கு பாவிகள் நிறைந்த வம்சாவளியில் பிறந்ததே ஒரு ஆதாரம்.

மீட்பு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும், மக்களுக்கும் உரியது என்பதையும், 

கடவுள் குறைபாடுள்ள மனிதர்களைக்கூட தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பதையும்

வம்சாவளியில் இடம்பெற்ற பாவிகளிலிருந்து அறிகிறோம்.

 இயேசுவின் வாழ்வின் போது அவரைச் சந்தித்த எந்த பாவியையும் அவர் சபிக்கவில்லை.  மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

கல்லால் எறிந்து கொல்லப் படுவதற்காகப் பரிசேயர் அழைத்து வந்த பெண் அதற்குச் சான்று.

இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்ளனும் ஒரு சான்று.

உலகில் உள்ள அத்தனை பெரிய பாவங்களையும் விட இயேசுவின் இரக்கம் பெரியது.

சுகமில்லாத பிள்ளையை மற்ற பிள்ளைகளைவிட நேசிக்கும் தாயைப்போல இயேசு பாவிகளை அதிகம் நேசிக்கிறார்.

நல்ல ஆடுகளை மேய விட்டு விட்டு நொண்டி ஆட்டைக் கையில் வைத்திருக்கும் ஆயனைப் போல இயேசு பாவிகளாகிய நாம் மனம் திரும்புவதற்காக‌ நம்மை அவரது பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.

நோயாளிகளைத் தேடும் மருத்துவரைப் போல இயேசு பாவிகளாகிய நம்மைத் தேடுகிறார்.

இதற்காக அவர் கையாளும் முறைகள் நமக்குப் புரியாமல் இருக்கலாம்.

நமக்குக் துன்பங்கள் வருவதே நம்மை மனம் திருப்புவதற்காகத் தான்.

அவரது வழிகள் அதிசயமானவை.

லூர்து செல்வம்.

Sunday, July 13, 2025

அடிமை அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம்.



அடிமை  அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம்.

இறைவனின் பண்புகளில் ஒன்று 
பரிபூரண சுதந்திரம்.

தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்த இறைவன் தன்னுடைய பரிபூரண சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுளுடைய சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

கடவுளும் அவர் நமக்கு அளித்த சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.

மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்யும்போது கூட கடவுள் அதில் குறுக்கிடுவதில்லை.

மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி மனம்திரும்ப வேண்டும்.

மனம் திரும்பப் போதுமான அருள் வரங்களைக் கொடுப்பார்.

 அவற்றை ஏற்றுக் கொண்டு மனிதன் சுதந்திரமாக மனம் திரும்ப வேண்டும்.

மோட்ச வாழ்வையோ, நரக வாழ்வையோ தேர்வு செய்ய வேண்டியது மனிதன் தான்.

சுதந்திரம் என்ற வார்த்தைக்கு மனிதன் கொடுக்கும் பொருள் வேறு, கடவுள் கொடுக்கும் பொருள் வேறு.

மனிதன் சுதந்திரமாக வாழ்வது என்றால் தனது விருப்பம் போல் வாழ்வது என்று பொருள் கொள்கிறான்.

அதாவது தான் யாருக்கும் அடிமை இல்லை என்பது மனிதன் கொடுக்கும் பொருள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்றால் இந்தியர்கள் தங்கள் விருப்பப்பட்ட அரசைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பொருள்.

கடவுள் கொடுக்கும் பொருள் என்ன?

நாம் சுதந்திர மாக இறைவன் விருப்பப்படி வாழ்வது.

இறைவன் தனது விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

 எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் படைத்தாரோ அப்படி வாழ மனிதன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.

மனிதன் சுதந்திரமாக இறைவன் விருப்பப் படி வாழ்ந்தால் அவன் இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வான்.

சுதந்திரமாக இறைவன் விருப்பத்திற்கு எதிராக வாழ்ந்தால் நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்காது.

நித்திய பேரின்ப வாழ்வுக்கு மோட்சம் என்று பெயர்.

நித்திய பேரிடர் வாழ்வுக்கு நரகம் என்று பெயர்.

பேரின்பத்துக்கு எதிர்ப் பதம் பேரிடர்.

சிலர் கேள்வி கேட்கிறார்கள்,

கடவுள் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்காமல் பாவமே செய்ய முடியாதபடி படைக்கலாம் அல்லவா?

அவருக்கு அப்படிப் படைக்க விருப்பம் இருந்தால் அப்படிப் படைக்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

நம்மைச் சுதந்திரத்தோடு படைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அவருடைய சுதந்திரமான விருப்பத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

படைத்தவர் விருப்பப்படி தான் படைக்கப்பட்டவர்கள் நடக்க வேண்டும்.

நம் விருப்பப்படி கடவுள் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

"என்னைப் பின்பற்ற‌ விரும்புகிறவர்கள் தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு வர வேண்டும் '' என்று இயேசு சோல்கிறார்.

சிலுவை என்றால் துன்பம்.

சுதந்திரமாக இன்பத்தைத் தேர்வு செய்வது எளிது, துன்பத்தைத் தேர்வு செய்வது கடினமாயிற்றே என்று கூறுவது காதில் விழுகிறது.

ஒருவன் நடு மத்தியான வெயிலில் ஒரு மணிநேரமாக நிழலே இல்லாத இடத்தில் நின்று கொண்டிருக்கிறான்.

"ஏண்டே வெயிலில் நின்று கொண்டிருக்கிறாய்?"

"12 மணிக்கு வருவதாக காதலி கூறியிருக்கிறாள். அவள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்."

"வெயில்?"

''வெயில் என்ன செய்யும்?"

எங்கே அளவு கடந்த ஆசை இருக்கிறதோ அந்த ஆசையை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அது இன்பம் தான்.

அதற்காகப் பட வேண்டிய துன்பமும் இன்பம் தான்.

எந்த துன்பத்தின் மத்தியிலும் இறைவன் விருப்பப்படிதான் வாழ்வது என்று தீர்மானித்து விட்ட ஒருவனுக்கு அதை இன்பகரமாக மாற்ற ஒரே வழி முழுமையாக சரண் அடைந்து விடுவது.

அன்னை மரியாள் அதைத்தான் செய்தாள்.

"இதோ, ஆண்டவருடைய அடிமை."

முழுமையான அடிமையாக வாழ்வதில் தான் முழுமையான சுதந்திரம் அடங்கியிருக்கிறது.

கட்டாயத்தினால் அல்ல, பரிபூரண சுதந்திர உணர்வுடன் இறைவனுடைய அடிமையாக வாழ தன்னை அர்ப்பணித்து விட்டாள்.

இறைவனுடைய விருப்பமே தனது விருப்பம் என்று முழு மனச் சம்மதத்துடன் வாழ்ந்ததால்

அவளது வியாகுலங்கள் கூட ஆன்மீகத்தில் மகிழ்ச்சி தான்.

ஆகவேதான் வியாகுல மாதாவை மகிழ்ச்சி நிறை கன்னிகையே என்று அழைக்கிறோம்.

இயேசு பட்ட அத்தனை பாடுகளையும் அவளும் மனத்தளவில் பட்டாள்.

இயேசு கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்ட போது அத்தனை அவள் மேல் விழுந்ததாகவே உணர்ந்திருப்பாள்.

இயேசு சிலுவையைச் சுமந்து சென்றபோதும், சிலுவையில் அறையப்பட்ட போதும் இயேசுவுக்கு ஏற்பட்ட வலி மாதாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும் அது மனுக்குலத்தின் மீட்புக்காக அவரே ஏற்றுக் கொண்டவை என்று அவளுக்குத் தெரியும்.

அது மட்டுமல்ல அவர் மூன்றாவது நாள் உயிர்ப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆகவே பிரசவ வேதனை அனுபவிக்கும் பெண் எப்படி பிறந்து கொண்டிருக்கும் குழந்தையை நினைத்து மகிழ்வாளோ அப்படியே அன்னை மரியாளும் ஆன்மீக மகிழ்ச்சியோடுதான் வேதனையை அனுபவித்திருப்பாள்.

ஆகவே தான் அவளை "மகிழ்ச்சி நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

மனித குல மீட்பு மாதாவுக்கு மகிழ்ச்சி.

மாதாவின் மகிழ்ச்சி ஆண்டவரின் அடிமைக்கு உயிர்ப்பினால் அவர் அடையப் போகும் மகிமையால் ஏற்பட்ட ஆன்மீக மகிழ்ச்சி.

இது ஆன்மீக மீட்பின் கண்ணோக்கிலிருந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

மகிழ்ச்சி ஒரு ஆன்மீக பண்பு.

சந்தோசம் ஒரு லௌகீக பண்பு.

ருசியான பிரியாணி சாப்பிட்டால் சந்தோசம் ஏற்படும்.

பாவப் பரிகாரமாக நோன்பு இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும்.


சினிமா பார்த்தால் சந்தோசம்.

திருப்பலியில் கலந்து கொண்டால் மகிழ்ச்சி.

உடல் ரீதியான துன்பங்களை சிலுவைகளாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது ஏற்படுவது ஆன்மீக ரீதியான மகிழ்ச்சி.

அன்னை மரியாள் தன் மகன் பட்ட பாடுகளையும், அதனால் அவள் அடைந்த வேதனையையும் மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து 
 அடைந்தது மகிழ்ச்சி.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் மைல் கணக்கில் நடந்து மகிழ்ச்சியாகத் திருப்பலிக்குச்‌ சென்றிருக்கிறார்கள்.

இறைப்பணிக்குத் தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்த சவேரியார், அருளானந்தர் போன்ற வேத போதகர்கள் கட்டப்பட்டு பயணித்து மகிழ்ச்சியாக நற்செய்தியை அறிவித்ததிருக்கிறார்கள்.

ஆண்டவர் திருப்பணிக்குத் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பரிபூரண சுதந்திரத்தோடு திருப்பணி புரிகிறார்கள்.

நாமும் பரிபூரண சுதந்திரத்தோடு நம்மை இறைப்பணிக்கு அர்ப்பணித்து நிலை வாழ்வு என்ற மகிழ்ச்சியைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

Saturday, July 12, 2025

தன்னை அறிவது எப்படி?



தன்னை அறிவது எப்படி?

பள்ளிக்கூடத்தில் முதல் முதல் நம்மைச் சேர்க்கும் போது ஒரு விண்ணப்ப படிவம் கொடுப்பார்கள், பூர்த்தி செய்வதற்காக.

முதலில் நமது பெயரை எழுத வேண்டியிருக்கும்.

அதாவது நாம் பிறந்தவுடன் மற்றவர்கள் நமக்கு வைத்த பெயரை.

ஆனால் நாம் பிறந்தவுடன் என்று சொல்வது உண்மை அல்ல.

நாம் பிறக்கவில்லை, பெறப்பட்டோம். (We were born. Passive voice.)

நம்மைப் பெற்றவர்கள் வைத்த பெயரைத்தான் நமது பெயர் என்று சொல்லிக் கொள்கிறோம்.

நாமே நமக்கு உரியவர்கள் அல்ல.

நம்மை ஒன்றுமில்லாமையிலிருந்து படைத்தவர் கடவுள்.

நம்மைப் பெற்றவர்கள் ஏற்கனவே கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஆணும் ஒரு பெண்ணும்.

விண்ணப்ப படிவத்தில் எழுதப்பட வேண்டிய மற்ற விபரங்களும் மற்றவர்கள் நமக்குத் தந்தவை தான்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களாவது நம்மைப் பற்றி ஏதாவது சொல்லித் தருவார்களா?

நாம் உலகுக்கு வருமுன்பே மற்றவர்கள் பேசியதைத்தான் பேச எழுத வேண்டிய மொழியாக நமக்குத் சொல்லித் தருவார்கள்.

மற்ற பாடங்களும் அப்படித்தான்.
மொழியறிவு, கணக்கு, அறிவியல், வரலாறு புவியியல் போன்ற பாடங்களில் அறிவு பெறுவது லௌகீக வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கலாம்,

ஆன்மீக வாழ்க்கைக்கு அது கொஞ்சம் கூட பயன்படாது.

இறைவனைப் பற்றிய ஞானமும், நமது ஆன்மாவைப் பற்றிய‌ ஞானமும்தான் ஆன்மீக வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.

அறிவு பெறுதல் என்றால் தெரிந்து கொள்வது.

அறிவு மட்டும் ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.

கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொள்வது மட்டும் ஆன்மீக வாழ்வுக்குப் பயன்படாது.

 கடவுள் இருக்கிறார் என்று சாத்தானுக்கு  நம்மை விட நன்கு தெரியும். தெரிந்து என்ன பயன்?

அறிவை ஆன்மீக வாழ்வு வாழ பயன்படுத்தத் தெரிவது ஞானம்.

கடவுளை அறிந்து, அறிவை அவரை அன்பு செய்து, அவருக்குச் சேவை செய்யப் பயன்படுத்துவதுதான் ஞானம்.

தூய ஆவியின் வரங்களுள் முதன்மையானது ஞானம்.

சாத்தானிடம் கடவுளைப் பற்றிய அறிவு இருந்தது, ஞானம் இல்லை.

சாத்தான் கடவுளைப் பற்றிய அறிவை அவருக்கு எதிராக மனிதர்களைத் தூண்டி விடப் பயன்படுத்துகிறான்.

ஏவாளை விலக்கப்பட்ட கனியைச் சாப்பிடத்  தூண்டியவன் அவன்தான்.

இயேசுவுக்கு எதிராக பரிசேயர்களையும், யூத மதத் தலைவர்களையும், யூதாசையும் தூண்டியவன் அவன்தான்.

இன்று நம்மைப் பாவம் செய்யத் தூண்டுபவனும் அவன்தான்.

ஆன்மீக வாழ்வு வாழ்வதற்கு கடவுளைப் பற்றிய ஞானமும் வேண்டும், நம்மைப் பற்றிய ஞானமும் வேண்டும்.

இயேசு கடவுளைப் பற்றிய ஞானத்தை கத்தோலிக்கத் திருச்சபையின் போதனை மூலமும், வழி நடத்துதலின் மூலமும் நமக்குத் தருகிறார்.

இயேசுவின் சீடர்களாகிய குருக்கள் மூலம் தேவத் திரவிய அனுமானங்களையும், அவற்றின் மூலம் ஞானம் முதலான வரங்களின் ஊற்றாகிய தூய ஆவியையும் நாம் பெறுகிறோம்.

கத்தோலிக்கத் திருச்சபையின் போதனையை ஏற்று, அதை‌ நமது
வாழ்வாக்க தூய ஆவியின் மூலமாக நாம் பெறும் ஞானம் உதவுகிறது.

நமது அன்னை மரியாளை "ஞானம் நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

ஏனெனில் அவள் வாழ்நாள் முழுவதும் தூய ஆவியால் தான் வழி நடத்தப் பட்டாள்.

கடவுளைப் பற்றிய ஞானத்தைப் பெற திருச்சபை உதவுகிறது.

நம்மைப் பற்றிய ஞானத்தைப் பெற?

கடவுள் உதவுகிறார்.

நாம் திரு முழுக்குப் பெற்ற போது திரி ஏக இறைவன் நமது ஆன்மாவில் குடியேறி விட்டார்.

நமது ஆன்மாவில் குடியிருக்கும் இறைவனை ஆழ் நிலைத் தியானத்தின் மூலம் (contemplative meditation.) உற்று நோக்க வேண்டும்.

தாய்த் திருச்சபை அவரைப் பற்றி கூறிய பண்புகளைத் தியானிக்க வேண்டும்.

அவர் நம்மைத் தனது சாயலில் படைத்தார்.

அப்படியானால் கடவுள் நம்மோடு பகிர்ந்து கொண்ட பண்புகள் நம்மிடம் இருக்க வேண்டும்.

கடவுளின் பண்புகளை ஒவ்வொன்றாகத் தியானித்து அவற்றை எந்த அளவுக்கு நாம் பிரதிபலிக்கிறோம் என்பதை ஆராய்ந்தால் நமது உண்மையான நிலை நமக்குப் புரியும்.

உதாரணத்துக்குச் சில பண்புகளைப் பார்ப்போம்.

முதல் பண்பு கடவுள் இருக்கிறார், நாமும் இருக்கிறோம்.

ஆனால் கடவுள் நித்தியர், துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

நாம் துவக்கமும் உள்ளவர்கள்.

நமது தாயின் வயிற்றில்  உற்பவிக்கும் முன் நாம் ஒன்றுமில்லாதவர்கள்.
(We were nothing)

கடவுளின் உதவியின்றி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை நமக்குப் புரிய வரும்.

கடவுள் சர்வ வல்லவர், அவருடைய அருள் இன்றி நாம் சுயமாக ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையும் நமக்குப் புரிய வரும்.

ஒவ்வொரு அசைவுக்கும் நாம் இறைவனைச் சார்ந்திருக்கிறோம்.

இந்த உண்மை நமக்குப் புரிந்து விட்டால் நம்மிடம் ஞானம் பிறந்து விட்டது, நமது ஆன்மீக வாழ்வு ஆரம்பித்து விட்டது.

இந்த ஞானம் பிறந்து விட்டால் நாம் வாழ்வின் ஒவ்வொரு செயலுக்கும் இறைவனின் உதவியை நாட ஆரம்பித்து விடுவோம்.

அதாவது இறைவனோடு வாழ ஆரம்பித்து விடுவோம்.
நல்ல
சுய நினைவோடு இறைவனைச் சார்ந்து வாழ்பவர்கள் பாவம் செய்ய மாட்டார்கள்.

அன்பு என்ற பண்பை எடுத்துக் கொள்வோம்.

கடவுள் நம்மை அன்பு செய்கிற அளவுக்கு நாம் அவரையும் நமது பிறனையும் அன்பு செய்கிறோமா?

கடவுள் தனது அன்பின் மிகுதியால் பாவிகளாகிய நம்மீது இரங்கி, நமக்காக மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

நாம் நமது அன்பின் காரணமாக கடவுளுக்காக வாழ்வதற்காக என்ன தியாகம் செய்திருக்கிறோம்?

நமது அயலானுக்கு உதவ என்ன தியாகம் செய்திருக்கிறோம்?

கடவுள் தனது அன்பின் காரணமாக நமது பாவங்களை மன்னித்தார்.

நாம் யார் யாருடைய குற்றங்களை மன்னித்திருக்கிறோம்?

இப்படி ஒவ்வொரு கேள்யாக நம்மையே கேட்டு அவற்றுக்கு விடை காண முயன்றால் தூய ஆவி நமது உண்மை நிலையை நாமே உணர நமக்கு உதவி செய்வார்.

நமது அயலானோடு பழகும் போதெல்லாம் என் இடத்தில் இயேசு இருந்தால் என்ன செய்வார் என்று நம்மையே கேட்டுப் பார்த்து கிடைக்கும் பதில்படி நாம் செயல் பட்டால் நாம் இயேசுவை முழுமையாகப் பிரதிபலிப்போம்.

விண்ணகப் பாதையில் இயேசுவோடே நடந்து விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

இயேசுவோடு கைகோர்த்து நடப்போம்.

அவரோடு ஒன்றித்து நித்திய காலமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Friday, July 11, 2025

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். (திருப்பாடல்கள். 51:13)



அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 
(திருப்பாடல்கள். 51:13)

தாவீது கடவுளால் இஸ்ரேல் மக்களின் மன்னராகத் தேர்வு செய்யப் பட்டார்.

அவர் நல்லவர் தான்.    ஆனால் அவரது கண்களை அடக்கி வைக்காததால் விவச்சாரம் என்னும் பாவத்தில் வீழ்ந்தார்.

பொதுவாக பாவம் தனியாக வராது. அதன் குழந்தை குட்டிகளோடு வரும். கவனம் இல்லாதிருந்தால் பலுகிப் பெருகும்.

தாவீது விசயத்திலும் விபச்சாரத்தைத் தொடர்ந்து
பொய், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் கொலை போன்ற எல்லைமீறிய பாவங்கள் வந்தன.

ஆயினும் கடவுளின் அளவில்லாத இரக்கத்தின் காரணமாக தாவீது மனம் திரும்பினார்,

 பாவங்களுக்காக மனத்தாபப் பட்டார், கடவுளிடம் மன்னிப்புக் கேட்டார், கடவுளும் மன்னித்தார்.

மனத்தாபத்தின் போது அவர் பாடிய பாடல்களைப் பாடி நமது பாவங்களுக்காக நாம் மனத்தாபப்பட வேண்டும் என்பதற்காகத் தாய்த் திருச்சபை அவற்றை பைபிளின் ஒரு நூலாக சேர்த்துள்ளது.

அவர் பாடிய பாடல்களில் ஒரு வசனத்தை மட்டும் நாம் தியானிக்க எடுத்திருக்கிறோம்.


பாவம் செய்தார். ஆனால்,  செய்த பாவங்களுக்காக மனத்தாபப் பட்டு, கடவுளிடம் தனது பாவங்களை அறிக்கையிட்டார். 

இந்தச் சங்கீதம் அவரது மனந்திரும்புதல் மற்றும் அறிக்கையிடுதலின் ஒரு பகுதி.

"அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்."
(திருப்பாடல்கள். 51:13)

அவரது வீழ்ச்சியைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, கடவுளின் இரக்கத்தின் மீது அவருக்கு இருந்த பிடிப்பு எத்தகையது என்று ஆச்சரியப்படுகிறோம்;

 ஏனெனில், வெறும் மனந்திரும்புதலோடும் மன்னிப்போடும் திருப்தியடையாமல், 

கடவுளுக்கான தனது ஊழியத்தையும் சேவையையும் தொடர உதவும்படி  இறைவனிடம் வேண்டுகிறார்.

தாவீதைப் போல நாமும் பாவம் செய்தவர்கள்தானே.
 
நாம் மனந்திரும்பிய பிறகு பாவ சங்கீர்த்தனம் செய்து பாவ மன்னிப்புப் பெற்றுக் கொள்கிறோம்.

அப்புறம்?

மன்னிப்புப் பெற்ற திருப்தியில் மௌனமாக நமது வேலையை மட்டும் தொடர்கிறோமா?

பாவிகள் மனம் திரும்ப இறை ஊழியத்தில் உற்சாகமாக ஈடுபடுகிறோமா?

தாவீது கடவுளிடம் என்ன வேண்டுகிறார்.

"உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 

அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 

கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்."
(12-15)

"என்னைப் போல குற்றம் செய்தவர்களும் நான் மனம் திரும்பியது போல் மனம் திரும்ப வேண்டும்.

குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பித்து, அவர்களும் உம்மை நோக்கித் திரும்ப நான் உழைக்கத் தேவையான ஆர்வத்தையும், அருளையும் தாரும்.

அனைவரும் கேட்டு ஆன்மீகப் பயன் அடையும் வகையில் உமது நீதியைப் பாட உதவியருளும்.

எல்லோர் முன்னிலையிலும் உமது புகழைப் பாட என் இதழ்களைத் திறந்தருளும்."

என்று வேண்டுகிறார்.

 அவரே மனந்திரும்பும் நிலையிலிருந்தபோதிலும், மற்றவர்களையும் மனம் திருப்ப ஆசிக்கிறார்.

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்."

அவர் தன்னை நேசித்தது போல தன் அயலானையும் நேசித்ததின் பயன் இது.
 
தாவீது இரகசியமாகப் பாவம் செய்தாலும் அவர் மன்னராகையால் அது பலருக்குத்
தெரியவரும்.

அவரது பாவ நிலையை அறிந்தவர்களிடையே 
தனது ஊழியத்தைத் தொடர்வது 
கடினம்தான்.

 உண்மையில் அது ஒரு சிலுவையைச் சுமக்கும் அனுபவம்.

மற்றவர்களிடமிருந்து அவருக்கு என்ன பட்டங்கள் கிடைத்திருந்தாலும்,

 மனந்திரும்பிய பிறகு அந்தப் பட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், 

கடவுளின் இரக்கத்தின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து 
இறை ஊழியம் செய்யத் தீர்மானிக்கிறார்.

இறை இரக்கத்தின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த நம்பிக்கை நமக்கு ஒரு பாடம்.

தன் வாழ்நாள் முழுவதும் தன் பாவத்தின் விளைவுகளை அவர் அனுபவித்திருக்கலாம், 

ஆனால் அவர் தொடர்ந்து போதித்தார், பாடினார், துதித்தார்.


உண்மையான மனந்திரும்புதலுக்கு அதுதான் அடையாளம்.

நாமும் ஒரு பாடம் கற்றுக் கொள்வோம்.

நாமும் பாவிகள் தான். பாவ மன்னிப்பு பெற்றபின் இறைப் பணியில் தொடர இறைவனின் இரக்கத்தை வேண்டுவோம்.


தாவீதைப் போல் இறை இரக்கத்தில் நம்பிக்கை வைப்போம்.

கடவுள் நம்மைப் பலப்படுத்தி, அவருடைய வேலையைச் செய்ய புதிய வழிகளைக்  காண்பிப்பார்.

தூய ஆவியில் மறு பிறவி அடைந்துள்ள அனைவருக்கும் தாவீது அரசரின் அனுபவம் ஒரு பாடம்.

பாவிகள் என்று கருதப்பட்ட தாவீது பெத்சபா வம்சத்தில் தான் பாவமாசில்லாத அன்னை மரியாளும், நமது மீட்பர் இயேசுவும் பிறந்தார்கள்.

பாவம் பெரியது தான், ஆனால் கடவுளின் இரக்கம் அதை விடப் பெரியது.

"இயேசுவே! குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்."

லூர்து செல்வம்

Thursday, July 10, 2025

புற‌‌ உதவியின்றி, சுயமாக, நம்மால் வாழ முடியாது.



புற‌‌ உதவியின்றி, சுயமாக, நம்மால் வாழ முடியாது.

நம்மைப் படைத்தவர் உதவியின்றியும்,

அவர் நமக்காகப் படைத்த நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் உதவியின்றியும் நம்மால் வாழ முடியாது.

கடவுள் சுயமாக வாழ்பவர். அன்பு மயமானவர். அன்பு அவருடைய சுபாவம். அவர் தன்னையும் அன்பு செய்கிறார், தன்னால் படைக்கப்பட்டவர்களையும் அன்பு செய்கிறார். 

அவருடைய அன்பு நிபந்தனை அற்றது, மாறாதது. 

அவர் மேல் அன்பு உள்ளவர்களையும், அவரை அன்பு செய்ய மறுப்பவர்களையும் அவர் அன்பு செய்கிறார்.

கடவுள் சர்வ‌ ஞானம் உள்ளவர்.

அவர் மனிதனைப் படைக்க நித்திய காலமாகத் திட்டமிட்டபோதே அவன் கட்டளைகளை மீறுவான், பாவம் செய்வான் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனாலும் தனது அன்பின் மிகுதியால் அவனைப் படைத்தார்.

 அவனைப் படைக்கும் முன்பும் நேசித்தார். 

படைத்த போதும் நேசித்தார்.

 படைத்த பின்பும் நேசித்தார்.

 அவன் பாவம் செய்த போதும் நேசித்தார். 

அவர் மாறாதவர்.

அவரது அளவு கடந்த நேசத்தின் காரணமாகத்தான் மனிதனாகப் பிறந்து பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அவனது பாவங்களுக்குப் பரிகாரம் செய்தார்.

இது நமக்கு அறிவு பூர்வமாகத் தெரியும், உணர்வு பூர்வமாகத் தெரியுமா?

தெரிந்தால் எப்படி பாவம் செய்ய மனது வரும்?

அவரது அன்பு மாறாதென்றால் நரகத்துக்குச் சென்றவர்களை?

அவர்களையும் நேசிக்கிறார். அவரை எதிர்த்து நரகநிலையைத் தேர்வு செய்த சாத்தானையும் பசாசுக்களையும் நேசிக்கிறார்.

ஆனால் நரகவாசிகளால் பதிலுக்கு அன்பு செய்ய முடியாது.

அறிவு பூர்வமாக நமக்குத் தெரிந்த இந்த உண்மைகளைத் தியானத்தின் மூலம் உணர்வுப் பூர்வமானவைகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாவம் செய்யச் சோதனை வரும் போதெல்லாம் கடவுளுடைய அளவு கடந்த மாறாத அன்பை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அது சோதனையை வெல்ல உதவும்.

நமது அன்பும் நிபந்தனை அற்றதாக இருக்க வேண்டும்.

நலமாக இருக்கும் போது மட்டுமல்ல நோய் நொடிகளால் துன்பப் படும்போதும் இறைவனை அன்பு செய்ய வேண்டும்.

நாம் கேட்பது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் அன்பு செய்ய வேண்டும்.

வெற்றிகள் ஏற்பட்டாலும், தோல்விகள் ஏற்பட்டாலும் அன்பு செய்ய வேண்டும்.

அன்பு ஒன்று தான் நமக்கு நிலை வாழ்வைப் பெற்றுத் தரும்.

லூர்து செல்வம்.

Wednesday, July 9, 2025

"மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" . (அரு.3:3)



 "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" . 
(அரு.3:3)

  நிக்கதேம் ஒரு பரிசேயர். அவர் யூத மதத் தலைவர்களுள் ஒருவர். 

பரிசேயராக இருந்தாலும் இயேசுவை விசுவசித்தவர்.

அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, 

"ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது" என்றார். 

இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார். 

நிக்கதேமுக்கு மறுபடியும் பிறத்தல் என்றால் என்ன என்று புரியவில்லை.

தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறத்தல் தான் மறுபடி பிறத்தல் என்று இயேசு அவருக்கு விளக்கம் அளிக்கிறார்.

இயேசு குறிப்பிடுவது திருமுழுக்குப் பெறுவதை.

திரு முழுக்கு பெறும் போது பெறுபவர் மீது தூய ஆவி இறங்கி பாவ நிலையிலிருந்து அவருக்கு விடுதலை கொடுக்கிறார்.

பாவ நிலையிலிருந்து விடுதலை பெறுவது தான் ஆன்மீக மறு பிறப்பு.

நமது முதல் பெற்றோர் பாவம் செய்ததால்,
உடல் ரீதியாக வாழ்ந்தாலும்  ஆன்மீக ரீதியாக மரணம் அடைந்தனர். 

அவர்களுடைய வாரிசுகள் பாவ இயல்போடு பிறக்கின்றனர்.

ஆன்மீக மரணநிலையில், அதாவது, பாவத்தோடு பிறக்கும் நாம்,

 திரு முழுக்குப் பெறும்போது தூய ஆவியின் வல்லமையால் 

 ஆன்மீக ரீதியாக பாவ மாசின்றி பரிசுத்தத்தனத்தில் பிறக்கிறோம்.

நமது பெற்றோரிடமிருந்து பாவ நிலையில் பிறந்த நாம்  

தூய ஆவியால்  பிறப்பது ஆன்மீக ரீதியானது.

மனித இயல்பை உடையவர்களாக இருந்த நாம் தூய ஆவியால் பிறக்கும் போது தூய ஆவியின் இயல்பை உடையவர்களாக மாறுகிறோம். 

இதை விளக்க இயேசு ஒரு உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

காற்று எங்கிருந்து வீசுகிறது என்பதைப் பற்றிய அறிவு நம்மிடம் இல்லாவிட்டாலும் அதன் பயனை நாம் அனுபவிக்கிறோம்.

அதுபோல ஆன்மீக ரீதியாக தூய ஆவி நம்மிடம் செயல் புரிகிறார் என்பது நமது மனித அறிவுக்கு எட்டா விட்டாலும் அவருடைய செயலை ஆன்மீக ரீதியாக அனுபவிக்கிறோம்.

வெளிப்பார்வைக்கு லௌகீக வாதிகளும், ஆன்மீக வாதிகளும் ஒன்று போல் தான் தோன்றுவார்கள்.

ஆனால் ஆன்மீக வாதிகள் தூய ஆவியால் ஆன்மாவில் ஏற்படுகிற மாற்றத்தை அனுபவிப்பார்கள்.

இயேசு நிக்கதேமோடு பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நமக்காவும்தான்.


பாலைநிலத்தில் மோசேயால்  உயர்த்தப்பட்ட பாம்பைப் பார்த்தவர்கள் சாகாமல் பிழைத்தது போல 

சிலுவையில் உயர்த்தப்பட்ட மனுமகனை விசுவாசத்தோடு பார்ப்பவர்கள் மீட்புப்‌ பெறுவர், அதாவது, நிலைவாழ்வு பெறுவர். 

தந்தை இறைவனின் அன்பைப் புரிந்து கொண்டு நாம் நிலை வாழ்வு பெறுவதற்காக அவரால் அனுப்பப் பட்ட அவரது ஒரே  மகன் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, 

தம் மகன் வழியாக அதை மீட்கவே தந்தை அவரை உலகிற்கு அனுப்பினார். 

மனம் திரும்ப விரும்பாதோர் தங்களுக்குத் தாங்களே தீர்ப்பளித்துக் கொள்கிறார்கள்.

ஏனெனில் முழுமனச் சுதந்திரத்தோடு தான் பாவம் செய்கிறார்கள்.

தெரிந்தே செய்தால் வேண்டுமென்றே செய்வதாகத்தான் அர்த்தம்.

சாவான பாவம் செய்தால் நரகம் என்பது தெரிந்தும் சாவான பாவம் செய்பவன் நரகத்தைத் தேர்ந்து கொண்டான் என்று தான் அர்த்தம்.
 
இயேசுவை விசுவசிப்பவர்கள் பாவத்தைத் தேர்வு செய்ய மாட்டார்கள்.

இயேசுவாகிய ஒளியை விரும்பாதவர்கள் இருளின் மக்கள், அதாவது பாவத்தின் மக்கள்.

இயேசுவே உண்மை.

உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் இயேசுவோடு வாழ்கிறார்கள்.

அதாவது,

இயேசுவோடு இணைந்து வாழ்பவர்கள் உண்மைக்கேற்ப வாழ்வார்கள்.

நிக்கதேமோடு இயேசு பகிர்ந்து கொண்ட செய்தி நமக்கும் பொருந்தும்.

அவர் யூதர்களின் தலைமைச் சங்கத்தின் (Sanhedrin) உறுப்பினர்.

சங்க உறுப்பினர்கள் இயேசுவைக் கைது செய்வது பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்த போது நிக்கதேமு,

"ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?" என்று கேட்டார். (அரு.7:51)

இயேசுவின் மரணத்துக்குப் பின் 
அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டு போனபோது 

நிக்கதேம்  வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். 

அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டி அடக்கம் செய்தார்கள். (19:40)

நிக்கதேமின் செயல்கள் அவரது ஆழமான விசுவாச வாழ்வுக்கு,
அதாவது செப வாழ்வுக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.

அவர் இயேசுவின் வார்த்தைகள் காட்டிய வழியில் வாழ்ந்தது போல நாமும் வாழ்வோம்.

லூர்து செல்வம்

Tuesday, July 8, 2025

எங்கோ கேட்ட கதை.



எங்கோ கேட்ட கதை.

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. 

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதுமாய் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். 

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அது எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருந்ததால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், 

“என்னால் பஞ்சாயத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். 

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும்.

 அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். 

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களைச் சங்கிலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது.

 யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, 

வேட்டைக்காரன் தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் . 

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். 

பிரச்சனை தான் வேறு வேறு. 

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக் கூடாது.

பொருட்கள் முக்கியம் தான். 

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

லூர்து செல்வம்.

🎨  🗞

Monday, July 7, 2025

சண்டைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல்!!

‌ 

சண்டைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் காதல்!!


ஒரு பெரிய அரங்கம் 

25 வருடங்களுக்கு மேல் சேர்ந்து வாழ்ந்த தம்பதிகளில் சிறந்த தம்பதிகளைத்  தேர்ந்தெடுத்து
ஒரு கார் பரிசு வழங்குவது என்று ஒரு நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்தது.


நூற்றுக்கணக்கான தம்பதிகள் கலந்துகொண்டார்கள்.

அதில் ஒரு மனைவி 

''அப்படி என்னத்த பெருசா வாழ்ந்து கிழிச்சிட்டோம்னு சொல்லச் சொல்லக் கேக்காம இந்த போட்டிக்கு கூட்டிட்டு வர்றீங்க '' என்றபடி சண்டையிட்டு கொண்டே உள்ளே வந்தாள்! 


கொஞ்ச நேரத்தில் 
போட்டி தொடங்கியது, 

கணவன் மனைவியை தனித்தனியாக அழைத்து நிறைய கேள்விகள் கேட்டார்கள் 

கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஓரளவுக்கு சரியான பதிலை சொன்னார்கள் 


அதில் ஒரு சோடி 
சொன்ன பதில்கள் அரங்கத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின.


யாரிடமும் இல்லாத அளவிற்கு அவர்களிடத்தில் அவ்வளவு ஒற்றுமையும் பரஸ்பர புரிதலும் விட்டுகொடுத்தலும் எல்லாமே நிறைந்திருந்தது.


அவர்களுக்கு கிடைத்த மதிப்பெண் 100/100! 

 எல்லோருக்குமே தெரிந்துவிட்டது அவர்கள் தான் ஜெயிக்கப்போகிறார்கள் என்று, 


எல்லோரிடமும் கேள்வி கேட்டு முடித்தபின் நூறு மதிப்பெண்கள் வாங்கிய  சிறந்த தம்பதிகளையும்


மிகக்குறைவாக பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கிய 
தம்பதிகளையும் மேடைக்கு அழைத்தார்கள்! 


பூஜ்ஜியம் வாங்கியது வேறுயாரும் இல்லை, வரும்போதே சண்டைபோட்டுக்கொண்டு வந்தார்களே அவர்கள் தான்.

 இருவரும் மேடைக்கு வந்தார்கள், 

ஜீரோ மதிப்பெண் பெற்றவர்களைப் பார்த்து  "காதல் திருமணமா?" என்று கேட்க,

 "இல்லை, arranged marriage' என்றார்கள் .


"எத்தனை குழந்தைகள்?" என்றதற்கு

 நான்கு என்றார்கள், 

"திருமணம் ஆகி எத்தனை வருடங்கள் ஆகிறது"

 என்றதற்கு 

"35 வருடங்கள்" என்று சொல்ல,

 எல்லோரும் சிரித்துவிட்டார்கள்!


35 வருடங்களாகியும் 
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவில்லையே
என்று ஏளனமாய் கேலி பேசினார்கள், 

அவமானம் தாங்கமுடியாமல் அவர்களுக்கு அழுகை வர கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டார்கள்.

ஆனால் போட்டியின் நடுவர் 
இந்த போட்டியில் கலந்துகொண்ட 500 தம்பதிகளில்

ஜீரோ மார்க் வாங்கிய தம்பதிகளுக்குதான் 
காரைப் பரிசாக அளித்தார்! 


காரணம்...

எல்லாவித மனப் பொருத்தங்களோடும் புரிதல்களோடும் 25 வருடங்கள் வாழ்வது பெரியவிஷயம் கிடையாது, 

எந்த ஒரு மனஒற்றுமையும் புரிதலும் இல்லாவிட்டாலும் 
35 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்களே 

இதுதான் உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை என்று பாராட்டினார்! 

இருவரும் 
ஆனந்தக்கண்ணீரோடு 
கார்ச் சாவியை வாங்கிக்கொண்டு செல்ல, 

எல்லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்! 

எல்லோரும் வெளியேறினார்கள்.


சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து செல்ல, தூரத்தில் யாரோ சண்டை போடுவது போல் சத்தம் கேட்டது.

எல்லோரும் திரும்பி பார்க்க,

காரைப் பெற்றவர்கள் சண்டை போட்டுக் கொண்டே காரை சுற்றிச் சுற்றி வந்து வந்து கொண்டிருந்தார்கள்.

 மனைவி:

 "நானும் எத்தனையோ நாள் தலைப்பாடா அடிச்சிகிட்டேன்,

 சும்மா இருக்கிற நேரத்துல எதாவது உருப்படியா பண்ணுங்கன்னு, 


டிரைவிங் கத்திருந்தாலாவது இந்நேரம் உபயோகமா இருந்திருக்கும்...


உங்கள கட்டிகிட்டு என்ன சுகத்தைக் கண்டேன்?"

"காருக்குள் உட்கார். சுகமாக இருக்கும்."

"உட்கார்ந்து?"

"நடந்து கொண்டு போடும் சண்டையை உட்கார்ந்து கொண்டு போடுவோம்."

"கொஞ்சமாவது மூளை இருக்கா?
எதாவது டிரைவரைப் பார்த்து வாருங்கள். வீட்டுக்குப் போவோம்.

எதுக்கு இப்படி குட்டிபோட்ட பூனை மாதிரி என் பின்னாடியே சுத்தறீங்க?!

உங்களுக்கு  மூட்டுவலி வேற.

பேசாம ஒரு இடத்துல உட்காருங்க.. 

அப்புறம் ராத்திரிபூரா லட்சுமி லட்சுமின்னு பொலம்புவீங்க

 நான்தான் என்னவோ ஏதோன்னு எண்ணை தேச்சி விடனும்...

எனக்குன்னு பாத்து கட்டிவச்சான் பாரு எங்கப்பன்..

.சீமையில இல்லாத மாப்பிள்ளைய,

அவனச் சொல்லனும்."

"உட்கார்ந்தா எப்படி டீ  ட்ரைவரைப் பார்ப்பது?"


வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒரு ட்ரைவர் இருந்தார்.

"சரி, காருக்குள் ஏறுங்கள். நான் வீட்டில் கொண்டு விடுகிறேன்.

(தன் மனைவியைப் பார்த்து)

நீயும் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து கொள். உன்னை நமது வீட்டில் இறக்கி விடுகிறேன்."

கார் புறப்பட்டது.
..........................................
அன்பையும் காதலையும் வெளிப்படுத்த அழகான வார்த்தைகள் தான் வேண்டும் என்று யார் சொன்னது? 

மானங்கெட்ட சண்டைகளிலும்  காதல் மறைந்திருக்கும்!!

உண்மையான காதல்.

சண்டைகளுக்கு மத்தியில் சாகாத காதல்தான் உண்மையான காதல்.

லூர்து செல்வம்.

Sunday, July 6, 2025

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)



நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். 
(கலாத்தியர் 6:9)


ஒரு நாள் முடக்குவாதமுற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்த நால்வர் 

மக்கள் திரண்டிருந்ததன் காரணமாக வழி இல்லாததால்   அவர் இருந்த இடத்திற்கு மேலே வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதமுற்றவரைப் படுக்கையோடு கீழே இறக்கினர். 

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, இரங்கி
முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கினார். 

 "நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ" என்றார். 

அவனும் எழுந்து  படுக்கையை எடுத்துக்கொண்டு, கடவுளைப் புகழ்ந்து கொண்டு வீட்டுக்குப் போனான்.

கடவுளுக்கு நன்றி.

இப்போது நாம் தியானிக்கப் போவது நோயாளியைத் தூக்கி வந்த நால்வரைப் பற்றி.

முன்முயற்சி எடுத்து, தங்கள் நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்து,

 தங்கள் சொந்த சுகபோகத்தைத் தியாகம் செய்து, விசுவாசத்துடன்

 அந்தத் திடீரவாதக்காரனை இயேசுவிடம் கொண்டு வந்த நான்கு பேரும் தங்கள் சேவைக்குப் பதிலாக என்ன பெற்றார்கள் என்று யாரும் கேட்டால் நாம் பதில் எதுவும் சொல்ல முடியாது.

ஏனெனில் பைபிளில் அது பற்றி எதுவும் கூறப்படவில்லை.


ஒன்று சொல்லலாம், அவர்கள் பிரதிபலன் எதுவும் எதிர் பாராமல் சேவை செய்தார்கள்.

இயேசு கடவுள்.  அவருடைய விண்ணக வீட்டில் பிறரன்பு பணி செய்பவர்களுக்கான சன்மானத்தை தயாராக வைத்திருப்பார்.


"என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள். 


, "மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்" 
(மத்தேயு நற்செய்தி 25:34,40)

இப்படி இயேசு அவர்களிடம் இறுதி நாளில் சொல்வார்.

ஆக, முடக்குவாதமுற்றவரைக் குணமாக்குவதற்காக இயேசுவிடம் அழைத்து வந்தவர்களுக்கு அவருடைய சன்மானம் நித்திய பேரின்ப வாழ்வு.

நாம்  சிந்தித்துக் கொண்டிருக்கும் நால்வரும் இப்போது விண்ணகத்தில் நித்திய பேரின்ப வாழ்வு அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

நமக்கு புனித சின்னப்பர் கூறுகிறார்,

"ஆகையால் இன்னும் காலம் இருக்கும்போதே எல்லாருக்கும், சிறப்பாக, நம்பிக்கை கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன்வருவோம்."
(கலாத்தியர் 6:10)

நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் யார் யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உதவி செய்வோம்.

லூர்து செல்வம்.

Saturday, July 5, 2025

எதெற்கெடுத்தாலும் பைபிளில் இருக்கிறதா என்று கேட்கும் சகோதரர்கள் கவனத்துக்கு.



எதெற்கெடுத்தாலும் பைபிளில் இருக்கிறதா என்று கேட்கும் சகோதரர்கள் கவனத்துக்கு.

நாம் நமது பெயரை எழுதும் போது நமது பெயருக்கு முன்னால் நமது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை எழுதுகிறோம்.

தாயின் பெயரின் முதல் எழுத்தை எழுதுவயதில்லை.

அப்படியானால் நமக்குத் தாய் இல்லை என்று அர்த்தமா?

புனித அருளப்பர் கி.பி 90 ஆம் ஆண்டுவாக்கில் நற்செய்தியை எழுதினார்.

அவர் போதிக்க ஆரம்பித்தது 
கி.பி 33ல்.

57 ஆண்டுகள் வாய் மொழியாக நற் செய்தியைப் போதித்து 
விட்டுதான் தனது போதனைக்கு எழுத்து வடிவம் கொடுத்தார்.

இந்த ஆண்டுகளில் அன்னை மரியாளைத் தன் தாயாக ஏற்றுக் கொண்டு கவனித்து வந்தார்.

அவருடைய நற்செய்தி நூலில் இயேசுவின் பிறப்பை ஒட்டிய நிகழ்வுகள் எழுதப்படவில்லை.

எழுதப்படாததால் இயேசு பிறக்கவில்லை என்ற முடிவுக்கு வந்து விடலாமா?

பைபிளில் இல்லாதது நடக்கவில்லை என்றால் இயேசு பிறக்கவில்லை என்று தானே அர்த்தம்!

நாம் அன்னை மரியாளை முக்காலமும் கன்னி என்று விசுவசிக்கிறோம்.

ஆனால் நமது பிரிவினை சகோதரர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்படி பைபிளில் எங்கும் எழுதப்படவில்லை என்பது அவர்களுடைய வாதம்.

மேலும்,

"இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? "
(மத்தேயு நற்செய்தி 13:55)

என்ற வசனத்தை எடுத்துக் கொண்டு,

"யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? "

என்ற வார்த்தைகளைக்கூறி இயேசுவுக்குச் சகோதரர்கள் இருந்ததாகக் கூறுகிறார்கள்.

ஆனால் அவர்கள் யாருடைய பிள்ளைகள் என்பதற்கு பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது.

அவர்கள் அன்னை மரியாளின் தங்கை மக்கள்.

இந்த வசனத்தில்தான்,

"இவர் தச்சருடைய மகன் அல்லவா?" வார்த்தைகளும் உள்ளன.

அப்படியானால் இயேசுவைத் தச்சனின் மகன் என்று ஏற்றுக் கொள்கிறார்களா?

தாங்கள் ஒரு கருத்தை முதலில் மனதில் வைத்துக் கொண்டு அதற்கு ஆதாரம் தேடுவது தான் இவர்கள் வேலை.
 
கன்னி மரியாள் திருமண ஒப்பந்தத்துக்கு முன்பே கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்தவள் என்று நாம் நம்புகிறோம்.

கபிரியேல் தூதர் மரியாளுக்குத் தோன்றி,

'இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்."
(லூக்கா நற்செய்தி 1:31)

என்று சொன்னபோது மரியாள் எப்படி எதிர்வினை புரிந்தாள்?
(How did Mary react?)


"அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார்."
(லூக்கா நற்செய்தி 1:34)

நமது குடும்பத்தில் திருமண நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட ஒருவர் வாழ்த்துரை வழங்கும் போது,

''சகோதரிக்கு தலைப்பிள்ளையாக ஆண் குழந்தை பிறக்கும்" என்று வாழ்த்தினால் அவள் மகிழ்வாளா, அல்லது அது எப்படி நடக்கும் என்று கேட்பாளா?

மரியாளுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது.

கபிரியேல் தூதர் 

'கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்." என்று வாழ்த்தியபோது,

"இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே" என்று சொன்னதிலிருந்தே நாம் புரிந்து கொள்ள வேண்டும் அவள் கன்னிமை வார்த்தைப்பாடு கொடுத்தவள் என்று.

தூதர் அவளது கன்னிமைக்குப் பழுது ஏற்படாது, தூய ஆவியின் வல்லமையால் நிகழும் என்று சொன்னவுடன்,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்'' 
என்று பதில் அளித்தாள்.

இயேசு தன் தாயின் கன்னிமைக்குப் பழுது ஏற்படாமல் உற்பவித்தார்,

கன்னிமைக்குப் பழுது ஏற்படாமல் பிறந்தார்.

ஒளி கண்ணாடிக்குப் பழுது ஏற்படாமல் அதன் வழியே ஊடுருவி ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்துக்குச் செல்வது போல 

இயேசுவும் கன்னிமைக்கு பழுது ஏற்படாமல் தாயின் வயிற்றை விட்டு வெளியே வந்தார்.

உலகில் பிரசவ வலியே ஏற்படாமல் குழந்தை பெற்ற ஒரே பெண்மணி மரியாள் தான்.

இயேசு உற்பவிக்கும் போதும் மரியாள் கன்னி.

இயேசு பிறக்கும் போதும் மரியாள் கன்னி.

இயேசு பிறந்த பின்னும் மரியாள் கன்னி.

முக்காலமும் கன்னி.

              **********

கத்தோலிக்கத் திருச்சபையின் விசுவாசம் பைபிளையும் பாரம்பரியத்தையும் ஆதாரமாகக் கொண்டது.

இயேசு போதித்தவை, செய்தவை எல்லாம் பைபிளில் எழுதப்படவில்லை.

தூய ஆவி இறங்கி வந்த பின் சீடர்கள் வாய் மொழியாக போதிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

போதனையை ஏற்றுத் திருமுழுக்குப் பெற்ற மக்கள் போதனையை வாழ ஆரம்பித்து விட்டார்கள்.

சீடர்களுடைய போதனைக்கு அவர்களுடைய வாய்மொழி தான் ஆதாரம்.

அவர்கள் போதனையில் தவறாதபடி பார்த்துக் கொண்டவர் தூய ஆவி.

அவர்களுடைய வாய்மொழிப் போதனையைத் தான் பாரம்பரியம் என்கிறோம்.

பாரம்பரியத்திலிருந்து தான் பைபிள் பிறந்தது.

பாரம்பரியத்தை ஏற்றுக் கொள்ளாத நமது பிரிவினை சகோதரர்களுக்கு நமது விசுவாச சத்தியங்களைப்பற்றி என்ன சொன்னாலும் புரியாது.

வாய்பாடு தெரியாதவனுக்கு எப்படி கணக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.

மரியாள் சென்மப் பாவ மாசு இல்லாமல் உற்பவித்தாள் என்று பைபிளில் நேரடியாகச் சொல்லப் படவில்லை.

ஆனால் அது தாய்த் திருச்சபையின் போதனை.

"அவள் உன் தலையை நசுக்குவாள்"

"அருள் நிறைந்தவரே வாழ்க."

என்ற பைபிள் வசனங்களை ஆதாரமாகக் காட்டியது தாய்த் திருச்சபை.

ஆனால் "பொது பைபிள் மொழி பெயர்ப்பாளர்கள் அதிலும் கைவைத்து விட்டார்கள்.

ஆனாலும் நாம் பாப்பரசரின் தவறா வரத்தின்மீது அசையா நம்பிக்கை வைத்திருப்பதால் கத்தோலிக்கத் திருச்சபையின் போதனைகளை ஏற்றுக் கொள்கிறோம்.

அன்னை மரியாளின் ஆன்மசரீரத்தோடு விண்ணேற்பு விழா ஆதித் திருச்சபையிலேயே கொண்டாடப் பட்டு வந்தது.

பாப்பரசர் பன்னிரெண்டாம் பத்திநாதர் அதை விசுவாச சத்தியமாகப் பிரகடனம் செய்தார்.

பாப்பரசரை நம்பாதவர்கள் பற்றி நமக்குக் கவலையில்லை.

நாம் பைபிளையும், பாரம்பரியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள ஏக, பரிசுத்த, அப்போஸ்தலிக்க, கத்தோலிக்கத் திருச்சபையை ஏற்றுக் கொள்கிறோம்.

ஏற்றுக் கொள்ளாதவர்களுக்காக வேண்டிக் கொள்வோம்.

லூர்து செல்வம்

Friday, July 4, 2025

ஆவியில் ஆன்மீக வாழ்வு.



ஆவியில் ஆன்மீக வாழ்வு.

தூய ஆவியில் நாம் வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு.

தூய ஆவியானவர் நம்மில் வாழும் வாழ்வே ஆன்மீக வாழ்வு.

அதாவது,

ஆவியானவர் நம்மிலும், நாம் ஆவியானவரிலும் வாழும் வாழ்வு.

நமது வாழ்வில் தூய ஆவியின் வெளிப்பாடு தான் செபம்.

செபம் நாம் செய்வதல்ல, தூய ஆவி நம்மில் செய்வது.


 "தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது."
(1 கொரிந்தியர் 12:3)

இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 

உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார். 
(உரோமையர் 8:26,27)

புனித சின்னப்பரின் கருத்துப்படி தூய ஆவி நம்மில் செயல்புரியா விட்டால் நம்மால் இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்ள முடியாது.

திருமுழுக்கு பெற்றபின் தான் நாம் கிறிஸ்தவர்கள், திருமுழுக்கின் போது தூய ஆவி நம்மில் இறங்கி வந்து நம்மைக் கிறிஸ்தவர்களாக மாற்றுகிறார்.

தூய ஆவியைப் பெற்றபின் தானே சீடர்கள் இயேசுவை உலகுக்கு அளிக்கப் புறப்பட்டார்கள்.

கடவுள் நம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கை தான் நமது ஆன்மீக வாழ்வின் ஆரம்பம்.

பழைய ஏற்பாட்டில் கடவுள் யூதர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றி, சுதந்திர வாழ்வை நோக்கி வழிநடத்தினார்.

யூதர்களைப் பொறுத்த மட்டில் நமக்காகக் கடவுள்.
(God for us)

புதிய ஏற்பாட்டில் இறைமகன் மனிதனாகப்  பிறந்து, வளர்ந்து, பாடுகள் பட்டு , மரித்தார்.

நம்மைப் பொறுத்தவரை கடவுள் நம்மோடு.(God with us)

இயேசு விண்ணகம் சென்றபின் தூய ஆவி திருமுழுக்கின்போது நம்முள் இறங்கி, ஒவ்வொரு தேவ திரவிய அனுமானத்தின் போதும் நம்முள் செயல் புரிகிறார்.

இப்போது நம்மைப் பொறுத்த மட்டில் கடவுள் நம்முள்.
(God within us)

 நமக்காகக் கடவுள்.
 நம்மோடு கடவுள்.
 நம்முள் கடவுள்.

ஆக, கடவுள் நமக்காகச் செயல்புரிகிறார்,

நம்மோடு செயல்புரிகிறார்,

நம்முள் செயல்புரிகிறார்.

தந்தை, மகன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களில் பழைய ஏற்பாட்டில் தந்தை செயல் புரிந்தாக குறிக்கப்பட்டிருக்கும்.

புதிய ஏற்பாட்டில் மகன் செயல் புரிந்தாக குறிக்கப்பட்டிருக்கும்.

இக்காலத்தில் தூய ஆவி செயல் புரிவதாக குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனாலும் எக்காலமும் மனிதரிடையே செயல் புரிபவர் பரிசுத்த தம திரித்துவக் கடவுள்.
ஏனெனில் கடவுள் ஒருவரே.

நம்முள் தூய ஆவி எப்படிச் செயல் புரிகிறார்?

ஆன்மீக வாழ்வில் நமது உயிர் மூச்சாக செயல் புரிகிறார்.

நாம் மூச்சு விடும்போது தான் வாழ்கிறோம்.

ஆனால் சுவாசிப்பதைப் பற்றியும், இதயத் துடிப்பைப் பற்றியும் நாம் நினைப்பதில்லை.

நமது சுவாசப் பைகளில், இதயத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் மட்டுமே அவற்றைப் பற்றி நினைப்போம்.

நாம் நினைத்தாலும், நினைக்கா விட்டாலும் தூய ஆவி நம்முள் செயல் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்.

தந்தை, மகன், தூய ஆவி என்று சொல்லும் போது அவர்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறோமா?

ஆனாலும் தம திரித்துவக் கடவுள் தான் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் சிலுவை அடையாளம் போடும் போதும்,

தம திரித்துவத் தோத்திர செபம் சொல்லும் போதும் மனதில் தியானித்து சொல்ல வேண்டும்.

அப்போதுதான் அந்த செபத்துக்கான முழு அருள் வரமும் கிடைக்கும்.

உணவை பல்லால் அரைத்து உண்டால் சீக்கிரம் சீரணமாகும்.

வாயில் போட்டு அப்படியே விழுங்கினால் சீரணமாக நேரமாகும்.

ஒவ்வொரு முறை சிலுவை அடையாளம் போடும் போதும் நம்மைப் படைத்த தந்தையையும், மீட்ட மகனையும், 
வழி நடத்தும் தூய ஆவியையும் நினைத்துக் கொண்டே போட வேண்டும்.

ஆவியானவர் அன்பு, இரக்கம், மன்னிப்பு,   சாந்தம், சமாதானம், மகிழ்ச்சி ஆகிய,

மரணத்தால் கூட அளிக்க முடியாத பரிசுப் பொருட்களால் நமது இதயத்தை நிறப்புவார்.

தூய ஆவியின் வல்லமையால்  கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற்றுக் கொள்கிறோம். 

நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு ஆதாரமாக,  அவர் தனது தூய ஆவியானவரை நம் இருதயங்களுக்குள்  அனுப்பியுள்ளார். 


தூய ஆவியானவர் இறைவனை, "அப்பா, தந்தையே" 'என்று அழைக்கும் படி நம்மைத்  தூண்டுகிறார். 

இறைவனை நாம், "அப்பா, தந்தையே" என அழைப்பதற்கு தூய ஆவியின் தூண்டுதல் தான் காரணம்.

இதை விட நெருக்கமான உறவு வேறு இல்லை.

சில சமயங்களில் என்ன ஜெபிப்பதென்று தெரியாதபோதுகூட, தூய ஆவியானவர் நமக்கு உதவி செய்வதோடு 

கடவுளுக்குப் பிரியமான வழியில் நம்மை வழிநடத்துகிறார்.

நாம் தூய ஆவி காட்டுகிற வழியே நடப்போம்.

அதுதான் செப வாழ்வு.

லூர்து செல்வம்.

Thursday, July 3, 2025

"ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."(மத்தேயு நற்செய்தி 6:6)



"ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."
(மத்தேயு நற்செய்தி 6:6)

மனம் ஒரு குரங்கு என்பார்கள்.

அது கிளை விட்டு கிளை தாவிக் கொண்டேயிருக்கும்.

நமது மனதைச் சுதந்திரமாக விட்டால் நினைப்புகள் மாறிக் கொண்டேயிருக்கும்.

மனதால் தான் ஆண்டவரைத் தியானிக்க வேண்டும்.

தியானித்துக் கொண்டிருக்கும் போதே சம்பந்தமே இல்லாத ஒரு எண்ணத்தைத் தொற்றிக் கொள்ளும்.

கையில் செபமாலை இருக்கும்.
வாயில் மங்கள வார்த்தை செபம் இருக்கும்.
மனதில் அலுவலக வேலை இருக்கும்.

மனம் கற்பனை வளம் மிக்கது.

கோவிலில் திவ்ய நற்கருணை வாங்கியவன் மனது கசாப்புக் கடையில் இருந்தால் ஆண்டவரின் அருள் எப்படிக் கிடைக்கும்?

சீக்கிரம் போனால் தான் நல்ல கறி கிடைக்கும் என்று எண்ணி ஆண்டவருடனே கசாப்புக் கடைக்கு ஓடுவான்


மனதைக் குரங்கு போல் அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்த முடிந்தவனால் தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.

கணிதத் தேர்வு எழுதும்போது கணக்கில் மனதை ஒரு நிலைப்படுத்தா விட்டால் சரியான விடை வராது.

செப வாழ்வின் முக்கியமான பண்பு மனதை ஆண்டவரில் ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

அதில் நம்மைப் பயிற்சிப் படுத்த தான் ஆண்டவர் நம்மைத் தனி அறையில் தனியாகக் கடவுளிடம் பேசச் சொல்கிறார்.

பொது இடத்தில் அதாவது மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் செபிக்க ஆரம்பித்தால் ஐம்புலன்களும் சென்ற இடமெல்லாம் மனமும் செல்லும்.

மனதை கடவுளில் ஒரு நிலைப்படுத்த முடியாது.

ஒரே நேரத்தில் பல விதமான எண்ணங்கள் அலை மோதும்.

பல விதமான எண்ணங்கள் மத்தியில் இறைவனைப் பற்றி தியானிப்பது கடினம்.

அப்படியானால் கோவிலில்?

கோவில் பொது இடம் தானே, நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் ஒன்று கூடித்தானே திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

எப்படி மனதை ஒரு நிலைப்படுத்த முடியும் என்று கேட்கலாம்.

இதற்குப் பதில் கூறுமுன் இதோடு சார்புடைய விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக பெரியவர்கள் கூறிய கருத்துக்கள்:

1. கோவிலை, குறிப்பாக பீடத்தை கண்களைக் கவரும் வகையில் அளவுக்கு அதிகமாக அலங்கரிக்கக் கூடாது.

 அலங்கரித்தால் திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் மீது இருக்க வேண்டிய கவனம் அலங்காரத்தின் மீது சிதறும்.

2. திருப்பலிக்கு வருபவர்கள் கண்ணியமான  (Decent) உடை அணிந்து வர வேண்டும். 

பெண்கள் தலையில் முக்காடு அணிந்து வர வேண்டும்.

மற்றவர்களின் கண்களுக்கு சோதனை கொடுக்கும் உடை அணிந்து வரக் கூடாது.

3. திருப்பலி ஆரம்பிக்கு முன்பு கோவிலுக்குள் வந்து விட வேண்டும். திருப்பலி முடிந்த பின் நம்முள் நற்கருணை ஆண்டவருக்கு நன்றி செலுத்தி விட்டு தான் வெளியேற வேண்டும்.

திருப்பலி நேரத்தில் வருவதும் போவதுமாய் இருந்தால் அது மற்றவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும்.

இப்போது திருப்பலி நேரத்தில் வித்தியாச‌ வித்தியாசமான ஆட்கள் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம் எப்படி தனிமையில் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்ற வினாவுக்கு வருவோம்.

எவ்வளவு கூட்டத்தின் மத்தியிலும் நாம் தனிமையில் இருக்கலாம்.

வீட்டில் தனி அறையில் மனதை ஒரு நிலைப்படுத்திய பயிற்சி கோவிலில் உதவும்.

நமது நினைப்பை ஒட்டித்தான் நமது ஐம்புலன்களும் செயல்படும்.

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

9 மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டும்.

மணி 8.50‌ ஆகிவிட்டது. இன்னும் ஒரு கி.மீ தூரம் இருக்கிறது.

சைக்கிளை வேகமாக மிதிப்போம். அக்கம் பக்கம் பார்க்க மாட்டோம். யார் கூப்பிட்டாலும் கேட்க மாட்டோம்.
யார் நிறுத்தினாலும் நிற்க மாட்டோம்.‌நமது ஐம்புலன்களும் பள்ளிக்கூடத்தில் இருக்கும்.

அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் எந்த சூழ்நிலையிலும் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ள நம்மால் முடியும்.

கோவிலில் ஆயிரக் கணக்கான பேர் இருந்தாலும் நமது கண்ணும் கருத்தும் திருப்பலியில் மட்டும் இருந்தால் நமக்கு வேறு ஒன்றும் தெரியாது.

நமது கருத்து எங்கு இருக்கிறதோ அங்கு நாம் இருப்போம்.

சம்பந்தம் இல்லாத சத்தங்கள் கேட்டாலும், பார்வைகள் பட்டாலும் நாம் அவற்றைப் பற்றிக் கவலைப் பட மாட்டோம்.


நாம் இறைவனிடம் வேண்டும் பொழுது நமது உள்ளமாகிய அறைக்குச் சென்று, 

ஐம்புலன்களாகிய கதவை அடைத்துக் கொண்டு, 

மறைவாய் உள்ள நமது தந்தையை நோக்கி வேண்டுவோம்.

நமது உள்ளத்தில் உள்ளதைக் காணும் நமது தந்தையு நமக்குத் தேவையானதை அளிப்பார்.


"மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்."
(மத்தேயு நற்செய்தி 14:23)

இயேசு எதைச் செய்தாலும் நமக்கு முன் மாதிரியாகச் செய்தார்.

இயேசு கடவுள். மனித சுபாவத்தில் ஒரு இடத்தில் இருந்தாலும்,  தேவ சுபாவத்தில் எங்கும் இருப்பவர்.

24 மணி நேரமும் தந்தையோடு ஒன்றித்து வாழ்பவர். 

தந்தையோடு ஒன்றித்து வாழ்வதுதான் செப வாழ்வு.

ஆகவே அவர் தனிமையைத் தேடிப்  போக வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் நமக்கு முன் மாதிரிகை காண்பிப்பதற்காக ஒவ்வொரு போதனையையும் வாழ்ந்து காண்பித்தார்.

நாமும் தனியாகச் செபித்தாலும்,

நாமும் உலக ஆரவாரங்களுக்கு மத்தியிலும் தனிமையில் இறைவனைச் சந்தித்து, அவரோடு ஒன்றிப்போம்.

லூர்து செல்வம்

Wednesday, July 2, 2025

"எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்."(கலாத்தியர் 2:20)



"எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்."
(கலாத்தியர் 2:20)

புனித சின்னப்பரைப் போல செப வாழ்வு வாழ்பவர் யாராக இருந்தாலும் துணிந்து சொல்லலாம்,

"நான் இயேசுவால் நிறைந்திருக்கிறேன்.  எனது ஒவ்வொரு அணுவிலும் இயேசு வாழ்கிறார்.

எனது உயிரும் அவரே!
உயிர் மூச்சும் அவரே!

உண்மையில் நான் வாழவில்லை, இயேசுவே என்னில் வாழ்கிறார்.

என்னில் வாழ்வதற்காகவே விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார்.

என்னில் வாழ்வதற்காகவே நற் செய்தியை அறிவித்தார்.

என்னில் வாழ்வதற்காகவே பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.

என்னில் வாழ்வதற்காகவே மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.

என்னில் வாழ்வதற்காகவே திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.

என்னில் வாழ்வதற்காகவே எனக்குள் உணவாக வருகிறார்.

என்னில் வாழ்வதற்காகவே
என் ஆன்மா முழுவதையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

என்னில் வாழ்வதற்காகவே
இரவும் பகலும் என்னை எதிர் பார்த்து திவ்ய நற்கருணைப் பேழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

என்னில் வாழ்வதற்காகவே
என் உள்ளும் புறமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பழ வகைகளை விரும்பி சாப்பிடுகிறோம்.

ஏன்?

அவற்றிலுள்ள ருசிக்காக.

இனிப்பு ருசியுள்ள மாம்பழங்களும் இருக்கின்றன, புளிப்பு ருசியுள்ள மாம்பழங்களும் இருக்கின்றன.

நாம் விரும்புவது இனிப்பான மாம்பழங்களை மட்டும் தான்.

ஆக, மாம்பழங்கள் இருவகை, இனிப்பானவை, புளிப்பானவை.

அதேபோல மனிதனர்களும் இருவகை.

இயேசுவால் நிறைந்தவர்கள்.

சாத்தானால் நிறைந்தவர்கள்.

முதல் கையினருள் இயேசு வாழ்கிறார்.

இரண்டாம் கையினருள் சாத்தான் குடியிருக்கிறான்.

மனிதர்களில் யார் வாழ்கிறார் என்பதை அவர்கள் வாழும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இயேசுவைப் பார்க்கும் வகையில் நாம் வாழ வேண்டும்.

மற்றவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.

அவர்கள் நம்மில் வாழும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் வாழ வேண்டும்.

நம் வழியாக இயேசு மற்றவர்களிடம் செல்லும் வகையில் வாழ வேண்டும்.

புனித சின்னப்பர் அப்படி வாழ்ந்தார்.

இயேசு உலகில் முதன் முதலில் வாழ்ந்தது அன்னை மரியாளின் வயிற்றில்.

அன்னை மரியாள் சாத்தானின் தலையை நசுக்கியவள்.

பாவ மாசற்றவள்.

அவளில் வாழ்ந்தது போல நம்மிலும் வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு நம்மிடம் வந்திருக்கிறார்.

நாம் வாழவில்லை, இயேசுதான் நம்மில் வாழ்கிறார்.

நாமும் இயேசுவில், இயேசுவாக வாழ்வோம்.

லூர்து செல்வம்.

Tuesday, July 1, 2025

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."(மத்தேயு நற்செய்தி 11:28)




 "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, 
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."
(மத்தேயு நற்செய்தி 11:28)

இன்பச் சுற்றுலா (Excursion) வாக வெளியூர் சென்று விட்டு புகை வண்டியில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.

எதிர் இருக்கையில் எனது நண்பர் ஒருவர், எங்கள் ஊர்க்காரர் அமர்ந்திருந்தார்.

இறங்க வேண்டிய நிலையம் வந்தவுடன் நண்பர் என்னைப் பார்த்து, 

"மேலேயுள்ள Luggage (சுமை)ஐக் கொஞ்சம் இறக்கேன்" என்றார்.

"என்ன Luggage?" என்று கேட்டேன்.

"நண்பர் ஒருவர் சுமார் ஆறு கிலோ எடையுள்ள முந்திரிப் பருப்பைப் பரிசாகக் கொடுத்தார்.

முந்திரிப் பருப்பு சுவையாக இருக்கிறது.

ஆனால் மூட்டை கனமாக இருக்கிறது." என்றார்.

நானும் கட்டப்பட்டு சுமையை இறக்கி, அதோடு புகை வண்டியை விட்டு இறங்கினேன்.

"அப்படியே தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டேன். Porter  யாரையும் காணவில்லை."

வேறு வழியின்றி தூக்கிக்கொண்டு நடந்தேன்.

சுமையோடு நடக்க மிகவும் கட்டமாக இருந்தது.

"வா, அப்படியே நடப்போம். வண்டி எதையும் காணவில்லை."

"அட பாவி! நீ சாப்பிட நான் கட்டப்பட வேண்டுமா?" மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன்.

அவன் வீடு முதலில், அடுத்து என் வீடு.

அவன் கையை வீசி வர, நான்  கட்டப்பட்டு நடந்தேன்.

அவன் வீட்டை நெருங்கியதும்,

"சரிடா, முந்திரிப் பருப்பு முழுவதையும் நீயே வைத்துக் கொள். மனைவி மக்களுக்குக் கொடு."

அவன் அப்படிச் சொன்னதும் பருப்பு மூட்டையின் கனம் பறந்து போய் விட்டது.

சுமை இன்பகரமாகி விட்டது.

நான் வைத்திருப்மது என் மனைவி மக்களுக்கு.

மனைவி மக்களுக்காகச் செய்யும் எந்த வேலையும் கட்டமாகத் தெரியாது.

இப்போது இறைவாக்கைத் தியானிப்போம்.

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, 
எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

இயேசு நம்மைப் பார்த்துச் சொல்கிறார்,

"பாரமான சுமையைச் சுமந்து களைத்துப் போயிருப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 

என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்கிறார்.

நாம் சுமக்கும் சுமைகள் பல வகை.

உடல்நலத்தைப் பாதிக்கும் நோய் நொடிகள் போன்ற துன்பங்கள்.

மனநலத்தைப் பாதிக்கும் அவமானங்கள், நிறைவேறாத ஆசைகள், கடன் தொல்லைகள் போன்ற துன்பங்கள்,

நம்மை வெறுப்பவர்களால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் (இயேசு யூதர்கள் கையில் பட்ட பாடுகளைப் போல.)

நாம் சுமக்கும் சுமைகளால் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைக்கும் போது அவை மிகவும் கனமாக இருக்கின்றன, நமக்குச் சோர்வைத் தருகின்றன.

சுமை சுமந்து சோர்ந்திருக்கும் நம்மை இயேசு அழைக்கிறார்.

எதற்கு?

நமக்கு இளைப்பாற்றி தருவதற்காக.

எப்படி?

களைப்பை ஏற்படுத்தும் சுமைகளை நமக்கு இன்பம் தருவனவாக மாற்ற.

எப்படி?

இயேசுவை ஒரு வண்டியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

வண்டிக்கு நுகக்கால் ஒன்று இருக்கும்.

வண்டியில் பாரத்தை ஏற்றி, நுகக்காலை ஒரு மாட்டின் கழுத்தில் ஏற்றி விட்டால் மாடு இலகுவாக பாரத்தை இழுத்துச் செல்லும்.

நாம் நமது துன்பங்களாகிய சுமையுடன் இயேசுவிடம் சென்றால் துன்பப் பாரத்தை அவர் ஏற்றுக் கொண்டு,

அவரது நுகத்தை நம் கழுத்தில் ஏற்றி விடுவார்.

துன்பச் சுமையின் பாரம் குறைந்து இழுப்பதற்கு எளிதாக இருக்கும்.


"என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்று இயேசு சொல்கிறார்.

நாம் இழுத்துச் செல்ல‌ வேண்டியது இயேசுவை.

நமது சுமையை இயேசு சுமக்கிறார்.

இயேசுவை நாம் இழுத்துச் செல்கிறோம்.

நமக்குப் பிடிக்காத ஆளை இழுத்துச் செல்வது கடினம்.

ஒரு காதலன் காதலியை இழுத்துச் செல்வது இன்பம்.

நமது துன்பங்களை இயேசு ஏற்றுக் கொண்டார்.

இயேசு இனிமையானவர்.

அவரை இழுத்துக் கொண்டு போவது இன்பகரமானது.

இயேசுவை நேசிப்பவர்களுக்கு சிலுவைப் பாதை இன்பகரமானது.

நமது சிலுவைப் பாரத்தை இயேசு சுமந்து விட்டார்.

இப்போது நாம் சுமந்து கொண்டிருக்கும் சுமையை அன்றே இயேசு பாடுகள் மூலமும், சிலுவையாகவும் சுமந்து விட்டார்.

இன்று நாம் இயேசுவை அணுகி நமது கனமான சுமையை அவர்முன் இறக்கி வைக்க வேண்டும்.

இயேசு நம்மை நோக்கி,

"மகனே, நீ இறக்கி வைத்துள்ள சுமையை நான் அன்றே சிலுவை வடிவில் சுமந்து உனது பாவங்களுக்குப் பரிகாரமாக ஒப்புக் கொடுத்து விட்டேன்.

அதனால் இன்று உனது சுமை உனக்கு விண்ணக வாழ்வைப் பெற்றுத் தரும் சிலுவையாக மாறியுள்ளது.

இன்று நீ சுமப்பது உனக்காக சிலுவையில் அறையப்பட்ட என்னை, உனக்கு நித்திய பேரின்ப வாழ்வைத் தரப் போகும் என்னை.

நீ அனுபவிக்கப் போகும் நித்திய பேரின்ப வாழ்வை நினைத்துக் கொள்.

உன் மேலுள்ள என் நுகம் இனிமையாக இருக்கும்.

உனக்காக சிலுவையைச் சுமந்த நான் எவ்வளவு இனிமையானவர் என்று சுவைத்துக் கொண்டே நட மோட்ச வாழ்வை நோக்கி."

என்று கூறுகிறார்.

இப்போது புரிந்திருக்கும் துன்பங்கள் நிறைந்த நமது வாழ்வு பேரின்பத்தைப் பெற்றுத் தரப்போகும் சிலுவை.

நமது துன்பங்களை செபமாக அனுபவிப்போம்.

சிலுவை அடையாளம் போடும் போதெல்லாம் இதை நினைத்துக் கொள்வோம்.

லூர்து செல்வம்

Monday, June 30, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.(தொடர்ச்சி)



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.
(தொடர்ச்சி)

"நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது." (அரு.15:5)

"உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.''

என்று சொன்ன இயேசு,

"நான் திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்.'' என்றும் சொல்கிறார்.

தந்தையின் பண்புகளை மக்களும் பெற்றிருப்பர்,

செடியில் இருக்கும் சத்துக்களைக் கொடிகளும் பெற்றிருக்கும்.

செடி வேர்கள் மூலமாக நிலத்திலிருந்து சத்துக்களை எடுத்து கொடிகள் மூலமாக கனிகளுக்கு அனுப்பும்.

கொடிகளில்தான் திராட்சை காய்த்துப் பழுக்கும்.

இறைமகன் இயேசு தனது சீடர்களின் மூலமாகத்தான், அதாவது, நமது  மூலமாகத்தான் தனது மீட்புச் செய்தியை உலகெங்கும் அறிவிக்கிறார்.

அவர் நம்முள்ளும், நாம் அவருள்ளும் இருந்தால் தான் நற் செய்தி அறிவிப்பு நடக்கும்.

நமது வாழ்வு = நற் செய்தி அறிவிப்பு.

வாழ்வு சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் கணம்.

சிந்தனையில் ஆரம்பத்து சொல் வழியாக செயலில் இறங்குவது தான் நற் செய்தி அறிவிப்பு வாழ்வு.

சிந்தனை என்றால் தியானம், எண்ணிப் பார்த்தல்.

தியானம் இன்றி ஆன்மீக வாழ்வு இல்லை.

துவக்க நிலையில் உள்ள ஆன்மீக வாழ்வுக்கு சாதாரண தியானம் போதும்.

ஆனால் ஆழமான ஆன்மீக வாழ்வுக்கு ஆழ்நிலைத் தியானம் (Contemplation) அவசியம்.

ஆழ்நிலைத் தியானம் தியானம் என்றால்?

கடலில் குளிப்பவர்கள் கடலில் இறங்கினால் போதும்.

ஆனால் முத்து எடுக்க விரும்புபவர்கள் கடலின் ஆழத்துக்கு மூழ்க வேண்டும்.

அப்படியே ஆழமான விசுவாசத்தின் அடிப்படையில் வாழ விரும்புவர்கள் ஆழ்நிலைத் தியானத்தில் இறங்க வேண்டும்.

சாதாரண தியானத்தில் ஏதாவது ஒரு ஆன்மீக நிகழ்வை நினைப்போம்.

ஆனால் ஆழ்நிலைத் தியானத்தில் நம்மில் வாழும் அனைத்துக்கும் ஆதி காரணரான மூவொரு தேவனை உற்று நோக்க வேண்டும்.

நமது எண்ணம் ஒரு புள்ளியில் குவிய வேண்டும்.

அந்தப் புள்ளி பரிசுத்த தம திரித்துவக் கடவுளாக இருக்க வேண்டும்.

நமது சிந்தனை இறைவனில் நூற்றுக்கு நூறு குவிந்து விட்டால் நமது மனதில் திரி ஏக கடவுள் மட்டும் இருப்பார்.

அவரைத் தவிர வேறு எந்த எண்ணமும் துளி கூட இருக்காது.

ஐம்புலன்கள் அனைத்தும் ஆண்டவரில் குவிந்திருக்கும்.

நமது கண்களுக்கு புறத்தில் உள்ள எதுவும் தெரியாது.

நமது காதுகளுக்கு வேறு யார் பேசினாலும் கேட்காது.

வாய்க்கு வேறு எந்த ஒரு வேலையையும் இல்லை.

உடலில் தொடுதல் உணர்வே இருக்காது.

யாரும் நம்மை அடித்தால் கூட அதை உணர மாட்டோம்.

கடவுள், கடவுள், கடவுள் மட்டும் தான் நம்மில் இருப்பார்.

நமது சிந்தனை முழுவதிலும் தம திரித்துவக் கடவுள் மட்டும் வாழ்வார்.

 நித்திய காலமும் தன்னை அறிந்து சிந்திக்கிற தந்தை,

 நித்திய காலமும் தந்தையின் சிந்தனையில் பிறக்கிற வார்த்தை, மகன்,

தந்தையும் மகனும் நித்திய காலமும் செய்கிற அன்பு 

ஆகிய கடவுள்  கடவுள் நம்மில் நிறைந்து வாழும்போது நமது ஐம்புலன்களுக்கு கடவுள் மட்டுமே தெரியும்.

நமது அகத்தில் மட்டுமல்ல புறத்திலும் முழுமையாக கடவுள் நிறைந்திருப்பார்.

எந்தப் பொருள் கண்ணில் பட்டாலும் அதில் கடவுள் தான் தெரிவார்.

யார் கண்ணில் பட்டாலும் அவரிலும் கடவுள் தான் தெரிவார்.

உலகின் ஒவ்வொரு பொருளிலும் ஆளிலும் கடவுள் தெரிவதால் நம்மால் எல்லா பொருட்களையும்,
பிராணிகளையும், மனிதர்களையும் நேசிக்க மட்டுமே முடியும்.

இறைவனையும், அவரால் படைக்கப் பட்டவர்களையும்
நேசித்து வாழ்வதே செபவாழ்வு.

ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆழ் நிலைத் தியானத்தில் ஈடுபட்டால்

உலகப் பொருட்களை அநாவசியமாக அழிக்க மாட்டோம்,

யாரையும் பகைக்க மாட்டோம்,

யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம்.

புனித பிரான்சிஸ் அசிசி மிருகங்களையும், பறவைகளையும் கூட சகோதர, சகோதரிகளாகக் கருதினார்.

இயேசு தன்னை முத்தமிட்டு காட்டிக் கொடுத்த யூதாசைக் கூட "நண்பனே" என்று தான் அழைத்தார்.

நமது உள்ளத்தில் மட்டுமல்ல உலகிலும் இறைவன் நிறைந்திருப்பதால்

படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் இறைவனுள், இறைவன் மூலமாகவே பார்ப்போம்.

இறைவன் மூலமாகவே பார்ப்பதால் படைப்புகளிலுள்ள‌ நன்மைகள் அனைத்தும் நமக்குத் தெரியும்.

அனைத்தையும் இறைவனில் இறைவனுக்காக நேசிப்போம்.

அன்பு மயமானவர் நம்மையும் அன்பு மயமானவர்களாக மாற்றி விடுவார்.

இனி அன்பு, அன்பு, அன்பு மட்டுமே நமது எல்லாமாக இருக்கும்.

அன்பு தான் செபம்.

நாமே செபமாக மாறிவிடுவோம்.

அதில் தானே பேரின்பம் இருக்கிறது.

செப வாழ்வு வாழும் போது விண்ணக வாழ்வை மண்ணகத்திலேயே ஆரம்பித்து விடுவோம்.

லூர்து செல்வம்.

Sunday, June 29, 2025

இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.



இறைப் பிரசன்னத்தில் வாழ்வதுதான் செப வாழ்வு.

"தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்."
(லூக்கா நற்செய்தி 10:42)

மார்த்தாள், மரியாள் வீட்டுக்கு இயேசு சென்றிருந்த போது மார்த்தாள் அவருக்கு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள்.

 மரியாள்    ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். 

அதாவது ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருந்தாள். 

ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பது தான் செபம்.

நமது வீட்டில் சிறு பிள்ளைகள் தாயின் மடியில் அமர்ந்திருக்கும்.

அல்லது தாயின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்.

தெருவில் போய் விளையாடினாலும் அடிக்கடி வீட்டுக்குள் வந்து அம்மாவைப் பார்த்து விட்டு விளையாடப் போகும்.

அதாவது தாயின் பிரசன்னத்தில், சந்நிதியில் விளையாடிக் கொண்டிருக்கும்.

அதேபோல, நாம் கடவுளுடைய சந்நிதியில் வாழ்வது தான் செபம்.


எப்படி ஒரு குழந்தை தனது தாயின் சந்நிதியில் வாழ்கிறதோ

அப்படியே பிள்ளைகளாகிய நாம் நமது தந்தையாகிய இறைவன் சந்நிதியில் வாழ்வோம்.

அதுதான் செபம்.

செபம் இல்லாத வாழ்க்கை இயேசு இல்லாத பைபிள்.

Life without prayer is Bible without Jesus.

இயேசுவைப் பற்றியதுதான் நற் செய்தி. இயேசு இல்லாவிட்டால் அது வெறும் செய்தி.

செபம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல.

உயிர் இல்லாத உடல்.

சிலர் செபத்தைப் பற்றி ஒரு தவறான கருத்து கொண்டுள்ளார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை செபம் என்றால் இறைவனிடம் கேட்டல்.

அவர்கள் "கேளுங்கள் கொடுக்கப்படும்" என்ற இறைவாக்கை மட்டும் பிடித்துக் கொள்கிறார்கள். அது செபத்தின் ஒரு பகுதி.

நடக்க முடியாமலிருக்கும் போது ஊன்றுகோல் உதவுவது போல செபம் உதவுகிறது என்பது அவர்கள் எண்ணம்.

Some people wrongly think that prayer is a support system which is used when we  can no longer help ourselves

அவர்கள் கட்டங்கள் வரும் போது மட்டும் கடவுளைத் தேடுவார்கள்.

கடவுளைத் தேடுவது செபம் அல்ல.  கடவுளில் வாழ்வதுதான் செபம். 

சர்வ வல்லமை வாய்ந்த, சர்வ ஞானமுள்ள கடவுளில், கடவுளோடு வாழும் போது நாம் ஏன் உதவியைத் தேட வேண்டும்?

நடந்து செல்பவன் வேகமாகச் செல்ல காரைத் தேட வேண்டும்.

காரில் பயணிப்பவன் எதைத் தேட வேண்டும்?

கடவுளில் வாழ்பவன் தன் தேவைகளை நினைத்தாலே போதும்.

நமது நினைவுகளை அறியும் கடவுள் அவற்றை நிவர்த்தி செய்வார்.

செபம் உதவி கேட்கும் கருவி அல்ல. உதவி செய்பவருக்குள் வாழ்வதுதான் செபம்.

அநேகர் காலை செபம், இரவு செபம், செபமாலை, திருப்பலி ஆகியவற்றை மட்டுமே செபம் என்று நினைக்கிறார்கள்.

எல்லாவற்றையும் சேர்த்தாலே ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் தான் ஆகும்.

ஆனால் 24 மணி நேரமும் செப நேரம்தான். சுவாசிப்பது தொடங்கி தூங்குவது ஈறாக அனைத்து செயல்களும் செபம் தான்.

இறைவன் எங்கும் இருக்கிறார். அனைத்தும் அவருக்குள் நடைபெறுகின்றன.

நாம் செய்யும் அனைத்தும் நமது சம்மதத்துடன், உணர்வு பூர்வமாக நடைபெறும் போது செபம்.

 வெறுமனே வாழ்வது
 மிருகங்களுடைய வாழ்க்கைக்குச் சமம்.

மிருகங்களால் செபம் செய்ய முடியாது.

இறைவன் சர்வ வல்லபர், நாம் ஒன்றுமில்லாதவர்கள்.

இயேசு நம்மை இறைவனை நோக்கி, "விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே!" என்று அழைக்கச் சொன்னார்.

இயேசுவின் அருளால் ஒன்றுமில்லாத நாம் தந்தை இறைவனின் பிள்ளைகளாகும் பாக்கியம் பெற்றிருக்கிறோம்.

நம்மை நாம் நேசிப்பதுபோல நமது அயலானையும் நேசிக்கச் சொன்ன கடவுள் தன்னை நேசிப்பது போல நம்மை அளவில்லாத விதமாய் நேசிக்கிறார்.

அவரது நேசத்தினால் நாம் அவருடைய பிள்ளைகள் நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்.

 "உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்."
(மத்தேயு நற்செய்தி 5:48)

இது நமது ஆண்டவரின் அறிவுரை.

ஆற்றுத் தண்ணீரின் அளவு கடல் நீரின் அளவை விடக் குறைவாக இருந்தாலும் ஆறு கடலில் கலக்கும் போது அது கடல் நீரோடு ஒன்றித்து விடுவது போல 

நிறைவில்லாத நாம் நிறைவான இறைவனோடு ஒன்றிக்கும் போது நமது நிறைவின்மை இறைவனின் நிறைவோடு ஒன்றித்து விடுகிறது.

நாம் இறைவனோடு ஒன்றிப்பது தான் செபம்.

ஒன்றித்து வாழ்வது செப வாழ்வு.

(தொடரும்)

லூர்து செல்வம்

Saturday, June 28, 2025

''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."(மத்தேயு நற்செய்தி 16:18)



''எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா."
(மத்தேயு நற்செய்தி 16:18)

" நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?" என்று இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது,

சீமோன்  மறுமொழியாக, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று உரைத்தார். அதற்கு இயேசு, "யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன். 

ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 

எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு;(பாறை)  இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 
.
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்"

 என்று கூறி சீமோன்தான் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக நியமிக்கப் படுவார் என்பதை முன்னறிவிக்கிறார். 

பேதுரு என்றால் இராய் (பாறை).
தமிழில் பேதுருவை இராயப்பர் என்று அழைக்கிறோம்.

"உன் பெயர் பேதுரு; (பாறை)

இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்."

இதை விடத் தெளிவாக யாரும் கூற முடியாது.

ஆனால் பைபிள் வசனங்களுக்கு தங்கள் விருப்பம் போல் பொருள் கொடுப்பதில் நமது பிரிவினை சகோதரர்கள் கில்லாடிகள்.

அவர்கள் இராயப்பரைத் திருச்சபையின் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை.

பாப்பரசரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளாமல் அவரவர்கள் தங்களைத் தாங்களே தலைவர்களாக நியமித்துக் கொள்வதால் தான் இன்று 40,000க்கும் மேற்பட்ட பிரிவினை சபையினர் உலகெங்கும் பரவிக்கிடக்கிறார்கள்.

இயேசுவை ஏற்றுக் கொள்ளும் அவர்கள் இயேசு எதற்காக உலகுக்கு வந்தாரோ அதை நடைமுறைப்படுத்த மறுக்கிறார்கள்.

இயேசு பாடுகள் படுவதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று திவ்ய நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

அவர்களிடம் குருக்களும், திருப்பலியும், திவ்ய நற்கருணையும் கிடையாது.

இயேசு உலகுக்கு வந்தது நமது பாவங்களை மன்னிக்க.

பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை தனது சீடர்களுக்குக் கொடுத்தார்.

ஆனால் பிரிந்து சென்றவர்களிடம் பாவ சங்கீர்த்தனம் கிடையாது.

பாப்பரசரின் கட்டுப்பாட்டுக்குள் வாழ விரும்பாத ஒரு சிலர், சபையை விட்டு வெளியேறி, தங்களை Pastor என அறிவித்துக் கொண்டு செபக் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

செபக் கூட்டங்களின் தலையாய நோக்கம் காணிக்கை வசூலிப்பது.

நம்மவர்களில் சிலர் நமது திருப்பலியில் கலந்து கொள்வதோடு பிரிந்து சென்றவர்களின் செபக் கூட்டங்களிலும் கலந்து கொள்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் அங்கேயும் இயேசு தானே இருக்கிறார் என்பார்கள்.

திருப்பலியும், திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்தில் இயேசு எப்படி இருப்பார்?

நற் செய்தி அறிவிப்பவர்கள் இயேசுவின் சீடர்களின் நேரடி வாரிசுகளா இருக்க வேண்டும்.

பிரிந்து சென்றவர்கள் திருப்பலி நிறைவேற்ற முடியாது, பாவ சங்கீர்த்தனம் கேட்க முடியாது.

திவ்ய நற்கருணையும், பாவ மன்னிப்பும் இல்லாத இடத்திற்கு வேறு எதற்காக இயேசுவைப் பின்பற்றுபவர்கள் போகிறார்களோ தெரியவில்லை.

கடன் தொல்லை தீரும், வருமானம் அதிகரிக்கும், வியாதி வருத்தமெல்லாம் நீங்கும் என்று ஆசை வார்த்தை காட்டி மக்களைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள் Pastors.

ஆனால் இயேசு அப்படி வாக்களிக்கவில்லை.

"என்னைப் பின்பற்றுபவர்கள் நான் சுமந்தது போல் தங்கள் சிலுவைகளைச் சுமந்து வர வேண்டும்" என்றுதான் கூறியுள்ளார்.

இராயப்பராகிய பாறை மேல் கட்டப்பட்ட திருச்சபையின் வழி காட்டுதலின்படி வாழ்வோம்,

நிலை வாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

Friday, June 27, 2025

"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத்தேயு நற்செய்தி 8:8)



"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."
(மத்தேயு நற்செய்தி 8:8)

நாம் திவ்ய நற்கருணை நாதரை நாவில் உணவாக வாங்குமுன் செய்யும் செபம் இந்த வசனம் தான்.

சிந்தித்துச் சொல்கிறோமா, அல்லது,  வாயினால் மட்டும் சொல்கிறோமா?

நாம் அடிக்கடி சொல்லும் செபங்கள் மனப்பாடமாகி விடுவதால் சொல்ல ஆரம்பித்தவுடன் வாய் மடமடவென்று சொல்லி விடும்,
ஆரம்பக் கல்வி மாணவர்கள் வாய்பாடு சொல்வது போல.

ஒரு சிறுவனிடம் "ஆறெட்டு எத்தனை" என்று கேட்டால்,

அவன், "ஓரெட்டு எட்டு" என்று ஆரம்பிப்பான்.

அது வாய் பாடு!

செபம் உள்ளத்திலிருந்து வர வேண்டும்,  உதட்டிலிருந்து மட்டும் அல்ல.

உள்ளத்திலிருந்து வந்தால் உள்ளம் , "நான் எப்படித் தகுதியற்றவன்?" என்று சிந்திக்கும், தியானிக்கும்.

''இயேசு அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர். என்னால் அந்த அளவுக்கு பரிசுத்தமாக முடியாது.

ஆனாலும் இயேசு தனது அளவு கடந்த இரக்கத்தின் காரணமாக, தனது சிலுவை மரணத்தின் மூலம் தகுதி இல்லாத என்னை தகுதியானவனாக ஏற்றுக் கொண்டு என்னிடம் வருகிறார்.

நமது பாவங்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவரே ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் மரித்தார்.

தனது தவறான நடத்தையால் பிள்ளை என்ற தகுதியை இழந்த பிள்ளையைத் தாய் தன் அன்பின் காரணமாக பிள்ளையாக ஏற்றுக் கொள்வது போல

தகுதி இல்லாத நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்கிறார்."

தியானத்தின் மூலமாக இந்த உண்மையை அறிந்து கொண்ட நாம் இயேசு ஏற்றுக் கொண்ட தகுதியை இழக்காமல் இருக்க,

அதாவது, பாவம் செய்யாது வாழ முயற்சி செய்வோம்.

அடுத்து நாம் இயேசுவை நினைக்கும் போதெல்லாம் நமது பாவங்களுக்காக மனத்தாபப்படுவோம்.

இயேசுவை நினைக்கும் போதெல்லாம், 

"ஆண்டவரே, உமது மன்னிப்பை பெற நான் தகுதி அற்றவன்.  ஆயினும் உமது இரக்கத்தின் காரணமாக, என்னை மன்னியும். 

தகுதியற்ற என்னை தகுதி உள்ளவனாக மாற்றும்."
என்று வேண்டுவோம்.

திருப்பலியின்போது மட்டுமல்ல வீட்டுக்கு வந்த பின்னும் இயேசுவின் ஞாபகமாகவே இருப்போம். 

நூற்றுவர் தலைவன் இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே  தன் பையன் குணமாவான் என்று உறுதியாக விசுவசித்தான். 

அந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா? 

நமது வேண்டுதல் உறுதியாக நிறைவேறும் என்று விசுவசிக்கிறோமா? 

விசுவசித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிறாமல் 
இயேசுவின் விருப்பப்படி வாழ்வதில் அதிக கவனம் செலுத்துவோம். 

நமது விருப்பம் நிறைவேறுவதில் காட்டும் ஆர்வத்தை விட இயேசுவின் விருப்பம் நிறைவேறுவதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.

நமக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்வோம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் இறைவனைத் தந்தை என்று அழைக்கும் தகுதியை இழந்து விட்டான். 

ஆனாலும் இறைவன் தனது அன்பின் மிகுதியால் மனிதனாகப் பிறந்து மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னைத்தானே பலியாக்கி

பிள்ளை என்று ஏற்றுக்கொள்ளப் பட தகுதியற்ற நம்மை பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நாம் பாவத்தை விலக்கி, கிடைத்த தகுதியை தக்க வைத்துக் கொள்வோம். 

லூர்து செல்வம்