Saturday, June 21, 2025

சினிமா ரசிகர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.



சினிமா ரசிகர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

இயேசுவின் வாழ்க்கையிலிருந்து தான் நாம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால் நம்மில் சிலருக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. மீசை உள்ளவர்கள் கூழ் குடித்தால் கூழ் மீசையில் ஒட்டிக் கொள்ளும். கூழும் குடிக்க வேண்டும், மீசையிலும் ஒட்டக் கூடாது. இது இயலாத காரியம்.

ஆன்மீக வாழ்க்கை வாழ வேண்டும் என்று தீர்மானித்து ஆரம்பித்த சிலருக்கு ஆன்மீக வாழ்க்கையுடன் லௌகீக வாழ்க்கையும் வாழ வேண்டும் என்று ஆசை.

ஆனால் இது இயலாத காரியம்.

இரண்டு தலைவர்களுக்கு சேவை செய்ய முடியாது என்று இயேசுவே கூறியிருக்கிறார்.

கடவுளுக்கு சேவை செய்பவனால் உலகத்துக்கு சேவை செய்ய முடியாது.

உலகத்துக்கு சேவை செய்பவனால் கடவுளுக்குச் சேவை செய்ய முடியாது.


ஞாயிற்றுக்கிழமை.

புதுப் படம் வெளியாகிறது.

காலை எட்டு முதல் பகல் காட்சி.

அதே எட்டு மணிக்கு ஞாயிறு திருப்பலி.

ஒரே நேரத்தில் ஒருவன் திருப்பலிக்கும், படத்துக்கும் போக முடியுமா?

இறைவனுக்கு சேவை செய்பவன் திருப்பலிக்குச் செல்வான்.

உலகத்துக்குச் சேவை செய்பவன் படத்துக்குச் செல்வான்.

இயேசுவிடமிருந்து தான் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் சினிமா ரசிகனிடமிருந்து கூட ஆன்மீக பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

சினிமா ரசிகர்கள் தாங்கள் ரசிக்கும் கதாநாயகன் நடித்த சினிமாவை பார்ப்பதற்காக மற்ற அனைத்தையும், தங்கள் உடல் நலன் உட்பட, தியாகம் செய்து விடுவார்கள்.

ஒன்று சினிமா தியேட்டர் முன் தவம் கிடப்பார்கள்,

அல்லது,

வீட்டில் TV முன் தவம் கிடப்பார்கள்,

சினிமா வேண்டுமா, மனைவி மக்கள் வேண்டுமா என்று கேட்டால், சினிமாவுக்குக்குப் பிறகு மற்ற அனைத்தும்.

வாழ்க்கையில் கூட தங்கள் அபிமான நடிகர்களின் நடை உடை பாவனைகளை அப்படியே பின்பற்றுவார்கள்.

எந்த அளவுக்கு ரசிகர்கள் சினிமா கலைஞர்களை தங்கள் வாழ்வின் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால்,

நடிகர்கள் அவர்களின் உதவியுடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பையே கைப்பற்றிக் கொள்கிறார்கள்.

தமிழ் நாட்டை ஆண்ட இரண்டு முதல்வர்கள் அதற்கு எடுத்துக்காட்டு.

மூன்றாவதாக ஒருவர் அதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

ஆன்மீக ரீதியாக ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தைத் தவறான பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் அவர்களுடைய பாதையில் செல்லாமல் ஆர்வத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

அதற்காகத்தான் நமது ஆண்டவர் நேர்மையற்ற  வீட்டுப் பொறுப்பாளர் உவமையைக் கூறினார்.

உவமையின் இறுதியில் நமது ஆண்டவர் 

"ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள்"
(லூக்கா நற்செய்தி 16:8) என்கிறார்.

நாம் அவர்களுடைய நடைமுறையை விட்டு விட்டு முன்மதியை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே.

ஆன்மீக வாழ்வில் நாம் அநேக புனிதர்கள் மீது பக்தி உள்ளவர்களாக இருக்கிறோம்.

அவர்களுக்கு விழா எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறோம்.

ஆனால் சினிமா ரசிகர்கள் தங்கள் கதாநாயகர்களைப் பின்பற்றுவது போல்,

நாம் புனிதர்களைப் பின்பற்றுகிறோமா?

பதிமூன்று நாட்கள் புனித அந்தோனியாருக்கு விழா எடுத்தோம்.

விழா நாட்களில் அவருடைய புதுமைகளைப் பற்றி பேசி மகிழ்ந்தோம்.

ஆனால் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைத் தியானித்து முடிந்தபின் அவரைப் போல வாழ முயற்சி எடுத்திருக்கிறோமா?

உதாரணத்திற்கு, அவர் நற்கருணை நாதர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்.

திவ்ய நற்கருணையில் மெய்யாகவே ஆண்டவர் இருக்கிறார், திவ்ய நற்கருணை என்றாலே இயேசுதான் என்பது நமது விசுவாசம்.

அந்தோனியார் காலத்தில் அநேக பதிதர்கள் (Heretics) திவ்ய நற்கருணையில் இயேசு இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்களை ஏற்றுக் கொள்ள வைப்பதற்காக அந்தோனியார் ஒரு புதுமை செய்தார்.

பட்டினி போடப்பட்ட ஒரு கழுதையை பதிதர்கள் கொண்டு வந்தார்கள்.

அதன் முன் அந்தோனியார் திவ்ய நற்கருணையைக் கொண்டு வர வேண்டும்.

அவர்கள் உணவைக் கொண்டு வர வேண்டும்.

திவ்ய நற்கருணை முன் கழுதை எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

அந்தோனியார் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு,

திவ்ய நற்கருணையைக் கொண்டு வந்தார்.

கழுதை உணவைப் பற்றிக் கவலைப் படாமல் திவ்ய நற்கருணை முன் முழங்கால் படியிட்டது.

இந்தப் புதுமையைப் பிரசங்கத்தில் கேட்ட எத்தனை பேர் அன்றுமுதல் திருவிருந்தின்போது திவ்ய நற்கருணையை இறைவனுக்குக் கொடுக்க வேண்டிய ஆராதனை உணர்வோடு முழங்கால் படியிட்டு வாங்குகிறார்கள்?

எப்போதும் போல நட்டமாய் நின்று கொண்டு ஆரஞ்சு வில்லையை வாங்குவது போல் கையில் வாங்கி வாயில் போடுகிறார்கள் தானே.

அந்தோனியார் பக்தி நமது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டால் அந்த பக்தியால் என்ன பயன்?

திவ்ய நற்கருணையை நின்று கொண்டு கொண்டு கையில் வாங்குபவர்கள் அந்தோனியார் பக்தர்கள் அல்ல.

அதேபோல மாதா பக்தர்கள் என்று கூறுபவர்கள் மாதாவைப் போல் வாழா விட்டால்  மாதா பக்தர்கள் அல்ல.

இயேசு கிறிஸ்து காட்டிய வழியில் நடக்காதவர்கள கிறிஸ்தவர்கள் அல்ல.

"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். 
(லூக்கா நற்செய்தி 9:23)

தங்கள் நலனைப் பற்றிக் கவலைப் படாமல் தங்களுக்கு வரும் துன்பங்களை சிலுவைகளாக ஏற்றுக் கொண்டு இயேசுவின் சிலுவைப் பாதையில் நடப்பவர்கள்தான் உண்மையான கிறிஸ்தவர்கள்.

துன்பங்களை ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் இயேசுவை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.

சிந்திப்போம், செயல்படுவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment