Sunday, June 22, 2025

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? (மத்தேயு நற்செய்தி 7:3)



உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? 
(மத்தேயு நற்செய்தி 7:3)

மனிதன் கண்ணாடியைக் கண்டு பிடித்தான்.

எதற்காக?

தன்னைப் பார்ப்பதற்காக.

ஆனால் கண்ணாடியில் நமது புறத் தோற்றம் தான் தெரியும்.

புறத்தோற்றத்தை அழகு படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் மனிதன் தனது அகத் தோற்றத்தைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

புறத்தோற்றத்தை அழகு படுத்த வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு தனது அகத் தோற்றத்தை அழகு படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றவில்லை?

அது அவனது பாவத்தின் விளைவு.

அகத்தில் இருப்பது பாவம்.

பாவம் நீங்கினால் தான் அகம் அழகு பெறும்.

புறத்தை அழகு படுத்த வேண்டும் என்று தோன்றும் மனிதனுக்கு அகம்  பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.

அதற்கு நமது அகக் கண் கொண்டு அகத்தை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

நாம் நமது புறக் கண்ணைக் கொண்டு மற்றவர்களது அகத்தை ஆய்வு செய்ய முயல்கிறோம்.


இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நமது புறக்கண்ணைக் கொண்டு மற்றவர்களின் அகத்தை ஆய்வு செய்ய நமது கற்பனையைப் பயன்படுத்துவது தான்.

ஒருவன் தனது அலுவலகப் பணிக்காக ஒரு தெரு வழியே போய்க் கொண்டிருப்பான்.

அந்த தெருவில் ஒரு மதுக் கடை இருக்கும்.

நாம் நமது கற்பனை வளத்தால் அவனுக்கும், மதுக் கடைக்கும் முடிச்சுப் போட்டு விடுவோம்.

புறக்கண்களைக் கொண்டு மனதைப் பார்க்க முடியாது.

நம்மால் பார்க்க முடிவதெல்லாம் மற்றவர்களுடைய வெளிப்புறச் செயல்களை மட்டும் தான்.

வெளிப்புறச் செயல்களை வைத்து மனதில் உள்ள சிந்தனைகளை ஆய்வு செய்தால் அது சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

எல்லோருடைய சிந்தனை சொல் செயல் மூன்றும் ஒன்றாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

செயல்களை வைத்து மனதை ஆய்பவர்கள் செய்யும் முக்கிய தவறு சிறு தவறுகளை பெரிது படுத்திப் பார்ப்பதுதான்.

அதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்படி ஆய்வு செய்பர்களுடைய கண்களுக்குத் தங்களுடைய பெரிய தவறுகள் தெரியாது.

தங்கள் கண்ணிலுள்ள மரக்கட்டை தெரியாது, மற்றவர்கள் கண்ணிலுள்ள சிறு துரும்பு பெரிய மரக்கட்டை போல் தெரியும்.

"உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்?" ‌என்று ஆண்டவர் கேட்கிறார்.

மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பது கிறித்தவர்களாகிய நமது கடமை.

நற்செய்தியை அறிவிப்பதன் நோக்கம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் மற்றவர்களை மனம் திருப்பி சரியான பாதைக்குக் கொண்டு வருவதுதான்.

அதற்கு நாம் முதலில் சரியான பாதையில் நடக்க வேண்டும், அதாவது நாம் அறிவிக்கும் நற்செய்தியின்படி நாம் நடக்க வேண்டும்.

நமது சிந்தனையிலும், செயலிலும் நற்செய்தி இல்லாமல் வாயில் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவித்தால் எந்த பயனும் ஏற்படாது.

முதலில் நாம் திருந்த வேண்டும்.

"வெளிவேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்."
(மத்தேயு நற்செய்தி 7:5)

முதலில் நாம் திருந்த வேண்டும். அதன்பின் மற்றவர்களைத் திருத்த முயற்சிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் மேடையில் பேசும் போது எதிர்க் கட்சியினரிடம் சுட்டிக்காட்டும் தவறுகள் எல்லாம் பேசுகின்றவர்களிடமும் இருக்கும்.

இது கேட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கும் தெரியும்.

ஆன்மீகவாதிகளாகிய நாம் அரசியல்வாதிகளைப் போல் இருக்கக் கூடாது.

இயேசு நம்மை பாவத்திலிருந்து மீட்கவே மனிதனாகப் பிறந்தார்.

இயேசு கடவுள், பரிசுத்தர்.

நம்மால் இயேசுவின் அளவுக்கு பரிசுத்தர்களாய் வாழ முடியாது.

ஆனாலும் நாம் நற் செய்தியை அறிவிக்க ஆரம்பிக்குமுன் பாவத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

நாம் முதலில் மனம் திரும்பினால்தான் மற்றவர்களை மனம் திருப்ப முடியும்.

அதனால்தான் ஆண்டவர் 


 "முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள்."

அதாவது,"நீங்கள் முதலில் பாவத்திலிருந்து விடுதலை பெறுங்கள்." என்கிறார்.

முதலில் நாம் நல்லவர்களாக மாறுவோம்.

நாம் நல்லவர்களாக வாழ்ந்தால் தான் மற்றவர்களை நல்லவர்களாக மாற்ற முடியும்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment