"அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்."
(லூக்கா நற்செய்தி 1:64)
சக்கரியா ஆண்டவரின் திருக் கோயிலில் தூபம் காட்டிக் கொண்டிருந்த போது கபிரியேல் தூதர் அவருக்குத் தோன்றி
அவருடைய மனைவி எலிசபெத் கருவுறவிருக்கும் செய்தியை அறிவித்த போது
அவர் அவர்களுடைய முதிர்ந்த வயதைக் காரணம் காட்டி செய்தியை நம்பவில்லை.
தூதர் அவரிடம், "உரிய காலத்தில் நிறைவேற இருக்கும் என்னுடைய வார்த்தைகளை நீர் நம்பவில்லை. ஆதலால் அவை நிறைவேறும் வரை நீர் பேச்சற்றவராய் இருப்பீர்; உம்மால் பேசவே இயலாது" என்றார்.
அவர் சொன்னபடியே குழந்தை பிறந்து, அதற்கு பெயரிடும் நாள் வரை பேச முடியாதிருந்தார்.
அவரிடம் சைகை காண்பித்து குழந்தைக்கு என்ன பெயரிடலாம் என்று உறவினர்கள் கேட்டபோது
அவர் ஒரு எழுதுபலகையில் "இக்குழந்தையின் பெயர் யோவான்" என்று எழுதினார்.
அப்பொழுதே அவரது வாய் திறந்தது; நா கட்டவிழ்ந்தது; அவர் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இது சக்கரியாவின் வாழ்வில் நடந்த நிகழ்வு.
இதை நமது வாழ்வை மையமாக வைத்து எப்படித் தியானிக்கலாம்?
பைபிள் வாசிப்பது எழுதப்பட்டிருக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நமது அறிவை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
அதாவது பைபிள் தேர்வில் வெற்றி பெறுவதற்காக அல்ல.
"இயேசு எங்கே பிறந்தார்?
பெத்லகேம் நகரில் உள்ள ஒரு மாட்டுத் தொழுவத்தில்."
தேர்வில் இப்படி ஒரு கேள்விக்கு இப்படி ஒரு பதில் எழுதினால் முழு மதிப்பெண் கிடைக்கும்.
ஆனால் மதிப்பெண் ஆன்மீக வாழ்வில் பயன்படாது.
அதேபோல கபிரியேல் தூதர் சொன்னதை நம்பாததால் சக்கரியாவால் பேச முடியவில்லை என்பதைத் தெரிந்திருப்பது மட்டும் நமக்கு மீட்பைப் பெற்றுத் தராது.
பைபிள் செய்தி நமது வாழ்வாக மாறினால் மட்டுமே நாம் ஆன்மீகத்தில் வளரலாம்.
இன்றைய நற்செய்தியை எப்படி நமது வாழ்வாக்குவது?
அதைப் பற்றித் தியானிப்போம்.
செபம் என்றால் இறைவனுக்கும் நமக்கும் நடக்கும் உரையாடல்.
உரையாடலில் இருவரும் ஒருவரோடொருவர் பேசவேண்டும் ஒருவர் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் அது உரையாடல் அல்ல, அதாவது, செபம் அல்ல.
வழக்கமாக நாம் மட்டும் தான் இறைவனோடு பேசுகிறோம்.
இறைவனுக்குப் பேச நேரம் கொடுப்பதில்லை, அவர் பேசினாலும் நாம் கேட்பதில்லை.
இறைவன் நமது உள்ளத்தில் பேசுவார். அவரது சொல்லைக் கவனிக்க வேண்டும்.
கவனித்து அவர் சொற்படி நடக்க வேண்டும்.
அவரது பேச்சைக் கவனிக்காவிட்டால் அவர் செயல் மூலம் பேசுவார்.
தூதர் மூலம் இறைவன் சொன்னதை நம்பாததால் இறைவன் அவரை ஊமையாக்கி விட்டார்.
சிந்தித்துப் பார்த்தால் ஒவ்வொருவர் வாழ்விலும் இத்தகைய அனுபவங்கள் இருக்கும்.
நமது வாழ்வில் சில நிகழ்வுகள் தற் செயலாக நடப்பதாக எண்ணுகிறோம்.
ஆனால் எந்த நிகழ்வும் தற்செயலாக நடப்பதில்லை.
இறைவனின் திட்டத்தால் தான் நடக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கல்யாண மண்டபத்தில் உறவினருக்குத் திருமணம்.
அதே நேரம் ஞாயிறு திருப்பலி.
இறைவன் மன சாட்சி மூலம் பேசினார், திருப்பலிக்குப் போ.
நண்பர் அதற்குச் செவி கொடுக்காமல், திருமணத்துக்குச் செல்ல சைக்கிளை எடுத்தார்.
சைக்கிளில் காற்று இல்லை.
இறைவன் சைக்கிள் மூலம் பேசியதைப் புரிந்து கொண்டு, திருப்பலிக்குச் சென்றார்.
வேண்டியதைக் கேட்பது மட்டும் செபமல்ல, இறைவன் சொல்வதைக் கேட்பதும் சேர்த்து தான் செபம்.
திவ்ய நற்கருணை உட்கொண்டவுடன் நற்கருணை நாதரின் குரலுக்குச் செவி கொடுக்க வேண்டும்.
இறைவன் நமது உள்ளுணர்வுகள் மூலம் பேசுகிறார்.
இயற்கைப் பொருட்கள் மூலம் பேசுகிறார்.
நமது செயல்கள் மூலம் பேசுகிறார்.
நமக்கு ஏற்படும் நோய் நொடிகள் மூலம் கூட நம்மோடு பேசுகிறார்.
இறைவன் சித்தப்படி நடப்பவர்களுக்கு அவரது குரல் கேட்கும்.
இறைவன் குரலுக்குச் செவி கோடுப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment