தன்னிலைத் தியானம்.
******************--********
இலக்கணத்தில் தன்னிலை,
(First person)
முன்னிலை
(Second person)
படர்க்கை
(Third person)
பற்றி படித்திருக்கிறோம்.
நான்,என்னை, என்னுடைய (I, me, my) என்பவை பேசுகின்றவர் தன்னைக் குறிக்கப் பயன்படுத்தும் பிரதிப் பெயர்கள்.(First Person Pronouns)
நீ, உன்னை, உன்னுடைய-
முன்னிலை.(Second Person)
அவன், அவனை, அவனுடைய-படர்க்கை.
(Third Person)
யாராவது ஒருவரை அழைத்து
தன்னைப்பற்றி ஒரு அரை மணி நேரம் பேசச்சொல்ல வேண்டும்,
ஒரு நிபந்தனை,
தன்னைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசக்கூடாது.
உதாரணத்திற்கு,
என்னைப் பேசச் சொன்னால், "என் பெயர் லூர்து" என்று சொல்லலாம்.
ஆனால், "என் மனைவி செல்வம்" என்று சொல்லிவிடக் கூடாது.
உலகில் நாம் சமூகப்பிராணியாகையால்
முற்றிலுமாக நம்மைப் பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம்.
அப்படிப் பேசுவதற்கான விசயத்தை முதலில் நினைத்துப் பார்ப்பது தன்னிலைத் தியானம்.
அதாவது தன்னைப் பற்றி மட்டுமே தியானிப்பது.
நான் முயன்று பார்க்கட்டுமா?
இதை நான் உங்களிடம் சொல்லவில்லை.
சொன்னால், Second person உள்ளே நுழைந்து விடுவார்.
ஆகவே நினைக்கிறேன்.
என்னைப்பற்றி மட்டுமே நினைக்கிறேன்.
"என் பெயர் லூர்து.
நான் உற்பத்தியானது நான் பிறந்ததற்கு 280 நாட்களுக்கு முன்னால்.
நான் பிறந்தது 1938ஆம் ஆண்டு, பெப்ருவரி மாதம், 12 ஆம் தேதி.
நான் உற்பத்தி ஆகுமுன் நான் ஒன்றுமில்லாமல் இருந்தேன்.
I was nothing before I was conceived.
நான் உற்பவிக்கும்போதோ, பிறக்கும்போதோ,
குழந்தையா யிருக்கும்போதோ
எப்படி இருந்தேன்,
என்ன நினைத்தேன் என்பது நினைவில் இல்லை.
ஆனாலும் இன்றைய நிலையிலிருந்து சில உண்மைகள் புரிகின்றன.
எனது உடல் கண்ணுக்குத் தெரிகிறது.
உடலில் உணர்ச்சி இருக்கிறது.
உடல் வளர்ச்சிக்கும் தளர்ச்சிக்கும் உட்பட்டது.
ஆனால் 'நான்' என்பது எனது உடல் இல்லை என்பது புரிகிறது,
ஏனெனில் அதை எனது கட்டுப்பாட்டில் வைக்க முயன்றாலும்
என்னையும் மீறி அதில் வரும் நோய் நொடிகள்,
வரவிருக்கும் மரணம் இவற்றை எண்ணும்போது
உடல் நான் இல்லை என்பது புரிகிறது.
எனது இருதயமே என் கட்டுப்பாட்டில் இல்லை,
சுயமாகத்தான் இயங்குகிறது.
சுருக்கமாகச் சொன்னால் உடல் என் பொறுப்பில் உள்ளது, அது நான் அல்ல.
ஆன்மாதான் நான்.
ஆன்மாவாகிய நான்
சிந்திக்கிறேன், Think
அறிகிறேன்,know
ஞாபகத்தில் வைக்கிறேன்,
Remember
நேசிக்கிறேன் Love
இறைவனது கட்டளைகட்குக் கீழ்ப்படிகிறேன், Obey
அல்லது கட்டளையை மீறுகிறேன், Disobey
மீறியதற்காக வருந்துகிறேன், Feel sorry
மன்னிப்பு வேண்டுகிறேன், Beg for forgiveness
மன்னிக்கப்படுகிறேன்,Am forgiven.
இவை எல்லாம் ஆன்மாவாகிய நான் செய்கிறேன்.
இதற்காக என்னிடம் புத்தி, அறிவு, ஞானம், அன்பு ஆகிய இயல்புகள் உள்ளன.
ஆன்மாவாகிய நான் உற்பவிக்கும்போதுதான் படைக்கப்பட்டேன்,
அதற்கு முன் நான் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை நான் இருந்தேன் என்பதும்.
அதாவது நான் ஒன்றுமில்லாதிருக்கும்போதே, இருந்தேன்.
அது எப்படி? எப்படி இல்லை என்பது இருப்பது ஆகும்?
நான் இந்தக் கட்டுரையை(Article) எனது Cell phoneல் Type செய்யும்போதுதான் அது உருப் பெறுகிறது.
ஆனால் அதை Type செய்யும் முன்னே
அதை என் மனதில் எழுதி வைத்திருந்தேன்.
எழுதுமுன் Idea வாக இருந்த கட்டுரை
எழுதியபின் உருவம் பெறுகிறது.
அவ்வாறு நான் கருவில் உற்பவிக்கும்போது உண்மையான உருப் (Real thing) பெற்ற என் ஆன்மா, அதாவது நான்
'எண்ணமாக'(Ideaவாக) நித்திய காலமாக இருந்தேன்.
நித்திய காலமாக Ideaவாக இருந்த நான்
12-02-38ல் உண்மையான உருவமாகப் பிறந்தேன்.
இப்போ ஒரு கேள்வி எழும்.
Ideaவாக எங்கே இருந்தேன்?
இப்போது நானே விதித்திருந்த நிபந்தனையை மீறப்போவதில்லை.
அதாவது Third person பற்றி பேசப்போவதில்லை.
நான் நித்தியமாக Ideaவாக இருந்தது
எல்லாம் வல்ல இறைவனின் உள்ளத்தில்தான்.
ஒன்றுமில்லாமையாய் இருந்த எனக்கு
உருக் கொடுத்த இறைவனது
உள்ளத்தில்தான் நான் நித்தியகாலமாக
Ideaவாகத்தான் இருந்தேன்.
நித்தியகாலமாக என்னைத் தன் உள்ளத்தில் Ideaவாகச் சுமந்த இறைவன்
எனக்கு 12-02-38ல் உண்மை உருக்கொடுத்தார்.
God made an idea real.
நான் அவரது உள்ளத்தில் எண்ணமாக மட்டுமே இருந்தேன்.
அவரோ இப்போது என் உள்ளத்தில் உண்மையாகவே, really, இருக்கிறார்.
அவர் எங்கும் இருப்பதுபோலவே உண்மையாகவே என்னில் இருக்கிறார்.
என் உள்ளத்திலும்,
என் ஒவ்வொரு அணுவிலும்,
ஒவ்வொரு அசைவிலும் இருக்கிறார்.
அவரின்றி அணுவும் அசையாது.
அவரில்லை என்றால் நானில்லை.
அவர் கோடியில் ஒரு பங்கு வினாடி என்னை மறந்தாலும்,
அந்த நொடியிலேயே நான் ஒன்றுமில்லாதவன் ஆகிவிடுவேன்.
அவர் நினைப்பதினால்தான் நான் உயிர் வாழ்கிறேன்.
யாரையும் அவரால் மறக்கமுடியாது.
மறதி அவரது பண்பு அல்ல.
எந்தப் பொருளும் கடவுள் இல்லை.
கடவுள் இன்றி எந்தப் பொருளும் இல்லை.
கடவுள் என் உள்ளத்தில் இருக்கிறார்.
அது நல்ல உள்ளமோ, கெட்ட உள்ளமோ,
சுத்தமான உள்ளமோ,அசுத்தமான உள்ளமோ,
அதில் இருக்கிறார்,
உள்ளத்தில் அவர் இல்லாவிட்டால் உள்ளம் out, காலி.
தியானத்தில் Third person பற்றி நினைக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தேன்.
மொழி இலக்கண விதிப்படி கடவுள் Third Person.
ஆனால்,
என்னுள் என் உயிராக உறையும் இறைவனை எப்படி Third Person என்பேன்!
வீட்டை நினைத்தால் அம்மா நினைவுக்கு வருவதுபோல்,
பள்ளியை நினைத்தால் ஆசிரியர் நினைவுக்கு வருவதுபோல்,
கடலை நினைத்தால் தண்ணீர் நினைவுக்கு வருவதுபோல்,
வேலையை நினைத்தால் சம்பளம் நினைவுக்கு வருவதுபோல்,
தமிழை நினைத்தால் இனிமை நினைவுக்கு வருவதுபோல்,
என்னை நினைத்தால் என்னில் என் உயிராய் வாழும் இறைவன் நினைவுக்கு வருகிறார்.
அவரது அன்பு நினைவுக்கு வருகிறது.
எனக்காக அவர் பட்ட பாடு நினைவுக்கு வருகிறது.
அவர் சிந்திய இரத்தம்
நினைவுக்கு வருகிறது.
சுருக்கமாக நான் என்னைப் பார்க்கும்போது என்னைப் படைத்தவரின் கைவண்ணம் தெரிகிறது.
............"
இப்படியே
ஒவ்வொருவரும்
தன்னையும் இறைவனையும் மையமாக வைத்து செய்யும் தியானம்
இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கும்.
நமது உள்ளத்தைச் சுத்தமாக்கும்.
பாவங்களைக் குறைக்கும்.
இறைவனை நம்மில் மட்டுமல்ல,
எல்லோரிடமும் காண ஆரம்பிப்போம்.
பிறறன்பு வளரும்.
சமாதானம் அதிகமாகும்.
சுருக்கமாக
நமது உள்ளத்தில் இறைவனோடு அவர் படைத்த மனுக்குலமே வாழ்கிறது.
நம்மை நினைக்கும்போது
நம்மில் நம்மில் வாழும் இறைவனை நினைப்போம்.
இறைவனை நினைக்கும்போது அவர் படைத்த மனுக்குலத்தையே நினைப்போம்.
நினைப்பில் அன்பு சுரக்கும்.
நமது அன்பில்
அன்பின் ஊற்றாகிய
இறைவன் இருப்பார்.
அவர் படைத்த மனுக்குலமும் இருக்கும்.
தன்னிலைத் தியானம்
உண்மையில்
சர்வ நிலைத் தியானம்.
தியானிப்போம்,
நேசிப்போம்,
நேசத்தில் வாழ்வோம்.
லூர்து செல்வம்.