"உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக."
*************************************
நமது விண்ணகத் தந்தையை நோக்கி நாம் தினமும் அடிக்கடி வேண்டும் செபம் இது.
'அவனன்றி அணுவும் அசையாது.
எல்லாம் இறைவன் சித்தப்படிதான் நடக்கும்' என்று நமக்குத் தெரிந்திருந்தும்
நாம் ஏன் எல்லாம் நமது சொற்படி நடப்பதுபோல
"உம்முடைய சித்தம்......... செய்யப்படுவதாக"
என்று வேண்டுகிறோம்?
நூற்றுக்கு நூறு உண்மை,
நாம் கேட்டாலும், கேட்காவிட்டாலும்
இறைவன் சித்தப்படிதான் எல்லாம் நடக்கும்.
தனது மட்டற்ற அன்பின் காரணமாக நம்மைக் கேட்காமல்தான் நம்மைப் படைத்தார்.
நாம்கூட நமது பிள்ளைகளைக் கேட்டு அவர்களது அனுமதியுடனா அவர்களைப் பெற்றோம்?
நம்மைப் படைக்க வேண்டுமென்பது அவரது நித்தியத் திட்டம்,
அவராகவே யாருடைய ஆலோசனையுமின்றி,
(அவருக்கு ஆலோசனை கொடுக்க அவரைத்தவிர வேறுயாரும் நித்திய காலமாக இல்லை.)
நித்திய காலமாக வகுத்தத் திட்டம்.
தன் மாறாத திட்டத்தின்படி செயல்படுபவரை நமது செபத்தின்மூலம் எப்படி மாற்ற முடியும்?
அவர் மாறாதவர், தன் சித்தப்படியே செயல்படுபவர்.
ஒரு சின்ன உதாரணம்.
ஒரு தகப்பனுக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.
அவன் அவர்களை அழைத்து,"உங்களுடைய எதிர் கால ஆசைகளை வெளிப்படையாகக் கூறுங்கள். அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை முன்கூட்டியே வகுக்கவேண்டும்." என்று கூறுகிறான். அவர்களும் கூறுகிறார்கள். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் திட்டங்களை வகுத்து திட்டப்படி செயல்படுத்துகிறான்.
இப்போது இறைத்திட்டத்திற்கு வருவோம்.
இறைவன் நம்மைப் படைக்கும்போது முழுச்சுதந்திரத்தோடு படைத்தார்.
நாம் செய்யவேண்டிய காரியங்களைத் தீர்மானித்துச் செயல்பட முழுச் சுதந்திரத்தைக் கொடுத்தார்.
God has given us full freedom of choice and action.
நமது சுதந்திரதில் அவர் தலையிடுவதில்லை.
நம்மை அவருக்காகவே
(அவரை அன்பு செய்யவும் அவரது கட்டளைப்படி நடந்து அவருக்குப் பணி புரியவும்)
படைத்தார்.
ஆனால் அவரை ஏற்றுக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளாதிருக்கவோ நமக்கு முழு உரிமை உண்டு.
ஏற்றுக்கொண்டால் பரிசு, ஏற்றுக்கொள்ளாவிட்டால் பரிசு இல்லை.
அவர் சர்வ வல்லவராகையால் நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்க முழு உரிமை உண்டு.
இறைவன் நித்திய காலமாக திட்டம் வகுக்கும்போது
நாம் நமது சுதந்திரத்தைப் பயன்படுத்தும் முறையையும்,
நாம் செய்யும் செபங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்.
ஆகவே அவரது நித்திய திட்டத்தில் நமக்கும் ஒரு பங்கு உண்டு.
இறைவன் தன் அளவில்லாத ஞானத்தால் முக்காலத்தையும் அறிகிறார்.
நமக்குதான் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று முக்காலங்கள் உண்டு.
நமது காலங்களுக்கு அப்பாற்பட்ட அவருக்கு நித்திய காலம் மட்டும்தான்.
நித்திய காலமாகவே அவருக்கு சகலமும்
(நமது சுதந்திர செயல்பாடுகள், நமது வேண்டுதல்கள் போன்றவை)
தெரியுமாகையால்
அந்த ஞானத்தின் அடிப்படையில் நித்திய திட்டம் (Eternal plan) வகுக்கப்பட்டு செயல்படுத்ப்படுகிறது.
ஆதாம், ஏவாளைப் படைக்க
இறைவன் நித்திய திட்டமிட்டபோதே
அவர்கள் தங்கள் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திப்
பாவம் செய்வார்கள் என்று இறைவனுக்குத் தெரியும்.
ஆகவே பாவத்திலிருந்து மனிதனை மீட்பதற்கான திட்டமும் நித்திய காலமாகத் தீட்டப்பட்டது.
நாம் இறைவனிடம் வேண்டுவது நித்திய காலமாக இறைவனுக்குத் தெரியும்.
அதற்கான பதிலும் நித்திய காலமாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நாம் இப்போது வேண்டாவிட்டால் நித்திய திட்டத்தில் அது இடம் பெற்றிருக்காது.
ஆகவே நாம் இறைவனிடம் வேண்டவேண்டும்.
நமது வேண்டுதலுக்காக நித்தியமாக இறைவனிடம் தயாராக இருக்கும் பதில் உரிய நேரத்தில் நமக்குக் கிடைக்கும்.
நமக்காக வேண்டுவது சரி, இறைவனது சித்தம் நிறைவேற ஏன் வேண்டுகிறோம்?
நமது வேண்டுதல் இன்றி அவரது சித்தம் நிறைவேறாதா?
நிறைவேறும்.
ஆனாலும் இவ்வாறு வேண்டும்போது
இறைவனது சித்தத்தை நாம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து,
அதற்கான அருள்வரத்தை வேண்டுகீறோம்.
"தந்தையே! விண்ணகவாசிகள் உமது சித்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
பாவிகளாகிய நாங்களும் உமது சித்தத்தை ஏற்று அதன்படி நடக்க ஆசிக்கிறோம்.
அந்த ஆசை நிறைவேற உமது அருள்வரம் வேண்டி மன்றாடுகிறோம்."
ஆசைப்பட்டால்மட்டும் போதாது, அதன்படி நடப்போமாக!
இறைவன் சித்தம், நமது பாக்கியம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment