Monday, October 8, 2018

காலம் மாறிப்போச்சி.

காலம் மாறிப்போச்சி.
*********************-***********

நாம் அடிக்கடி ஆதாம், ஏவாளுடைய பிள்ளைகள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது ஆதிப் பெற்றோர் விலக்கப்பட்ட கனியைத்i தின்றபின் கடவுள் ஆதாமிடம்,

"உண்ண வேண்டாமென்று நாம் உனக்கு விலக்கியிருந்த கனியைத் தின்றாயோ?"

எனக் கேட்டபோது ஆதாம்,

'எனக்குத் துணைவியாய் இருக்கும்படி நீர் எனக்குத் தந்தருளிய அந்தப் பெண்ணே அம்மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்."

என்று ஏவாள் மீது பழியைப் போட்டான்.

ஆண்டவர் ஏவாளிடம்,

"நீ ஏன் அவ்வாறு செய்தாய்?" என்று கேட்டார்.

அவள்: "பாம்பு என்னை வஞ்சித்ததால் தின்று விட்டேன்."

என்று பாம்பின்மேல் பழியைப் போட்டாள்.

நம்முடைய மூதாதையரின் இந்த பரம்மரைச் சொத்து  மாறாமல் அப்படியே நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

"என்னடா இருமல்?"

"சலதோசம் பிடிச்சிருக்கு."

சலதோசம் இவன் அழகில மயங்கி இவனப் பிடிச்சிருக்காம்!

ஐசையும், கூல்ட்ரிங்கையயும் கண்டமேனிக்குச் சாப்பிட்டுவிட்டு

பழி சலதோசம் மேல!

"ஏண்டா வேண்டாததெல்லாம் பண்ணிக்கிட்டிருக்க? "

"காலம் மாறிப் போச்சிங்க!  காலத்துக்குத் தகுந்தபடி நாமும் மாறணும்! "

காலம் என்ற ஒரு பொருளே இல்லை.

அது ஒரு கருத்து, Concept.

மாறுவது மனிதன்.

Conceptஐ மாற்றுவது மனிதன்.

மனிதன் தன் கருத்தை மாற்றிவிட்டு, பழியைக் கருத்தின்மேல்,காலத்தின் மேல் போடுகிறான்!

"நான் பையனாக இருந்தபோது கோவிலுக்கு வரும் பெண்கள் தலையில் முக்காடிட்டு வருவார்களே,

இப்போது ஏன் அப்படிச் செய்வதில்லை? "

இக்கேள்வியை ஒரு பெண்ணிடம் கேட்டேன்.

அவளுடைய பதில் என் வாயை அடைத்துவிட்டது.

"முதலில் சாமிமார் ஏன் அங்கி அணிவதில்லை என்று கேளுங்கள், அப்புறம்
முக்காட்டுக்கு வாங்க."

காலம் மாறிப்போச்சி.

காலத்தோடு கரைந்து போனவை ஏராளம்.

1."நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்"

"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."

இது இயேசு தம் சீடருக்கு இட்ட கட்டளை.

அதற்குப் பணிந்து சீடர்கள் உலகின் எல்லா பகுதிகட்கும் சென்று நற்செய்தியை அறிவித்தார்கள்.

தோமையார் இந்தியாவிற்கு வந்தார்.

பிற்காலத்தில் சவேரியார், அருளானந்தர்.வீரமாமுனிவர் போன்றோர் இந்தியாவுக்கு வேதம் போதிக்க வந்தார்கள்.

இவர்கள் மனம்திருப்ப வந்தார்கள் ;

ஏற்கனவே மனம்திரும்பியவர்களைக் கவனித்துக்கொள்ள மட்டும் வரவில்லை!

இப்போது அவர்களால் மனம்திருப்பப்பட்டோரின் வழிவந்த சீடர்கள் நிறையபேர் இருக்கிறோம்.

பிறமதத்தவரிடையே சென்று எத்தனை பேர் நற்செய்தியை அறிவிக்கிறோம்?

இருக்கிற கிறிஸ்தவர்களைக் காப்பாற்றிக்கொள்ளவே நம்மால் முடியவில்லை.

"யாருடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவை அவர்கட்கு மன்னிக்கப்படும்."

என ஆண்டவர் தம் அப்போஸ்தலர்கட்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தார்.

ஒரு காலத்தில் பாவசங்கீத்தனம் செய்யாமல் நன்மை வாங்குவதில்லை என்ற பழக்கம் இருந்தது.

கிராமங்களுக்கு பூசை வைக்க வரும்போது பூசைக்கு அரை மணி நேரத்துக்கு முன்பே சாமியார் பாவசங்கீத்தனத்தொட்டியில்
இருப்பார்.

மக்கள்  வரிசையும் நீளமாக இருக்கும்.

காலப்போக்கில் பாவசங்கீர்த்தங்களின்  எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

பாவசங்கீர்த்தங்களின்  எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதற்கு என்ன காரணம்?

ஒன்று பாவங்கள் குறைந்திருக்க வேண்டும்

அல்லது

பாவமன்னிப்புப் பெற ஆசை குறைந்திருக்க வேண்டும்.

அல்லது பாவங்களை மன்னிப்பவர்களின் அக்கரை குறைந்திருக்க வேண்டும்.

இதற்கான பழியை காலத்தின் மீது போடுவோமா அல்லது மக்கள் மீது போடுவோமா?

நற்செய்தியை  அறியாதவர்கட்கு அதை
அறிவிக்காமல் கோடிகள் செலவழித்து  கோவில் கட்டி என்ன பயன்?

"உலகெல்லாம் சென்று கோவில்கள் கட்டுங்கள்" என்றா இயேசு சொன்னார்?

நாம் ஒன்றுகூடவும்,

இறைவனை வழிபடவும்

கோவில்கள் கட்டாயம் தேவை.

ஆனால் பரிசுத்த ஆவியின் ஆலயமான

நமது இருதயத்தின் ஆன்மீக நலனுக்காகத்தான்

வழிபாடுகள், கோவில்கள்.

நற்செய்தியை அறிவித்து,

அதன்வழியே ஆண்டவருக்குச் சீடர்களை உருவாக்கி,

அவர்கள் வழிபட ஆலயங்களை உருவாக்கினால் சரி.

அதை விடுத்துவிட்டு,

ஏற்கனவே நல்ல நிலையிலுள்ள ஆலயங்களை இடித்துவிட்டு,

கோடிகள் செலவழித்து

புதிய ஆலயங்கள் எழுப்புவதில் என்ன பயன்?

அதில் காட்டும் ஆர்வத்தை

மக்களின் இதய ஆலயங்களைச் செப்பனிட்டு,

ஆண்டவர் அருள்கொண்டு அழகுபடுத்துவதில் காண்பித்தால்

எவ்வளவு நலமாக இருக்கும்?

இலட்சங்கள் செலவழித்து நடத்தப்படும் பள்ளிக்கூடஙகளால்

பிற மதத்தவர்க்கு கிறிஸ்துவைத்தான் அளிக்கமுடியவில்லை,

கிறிஸ்தவ மதிப்பீடுகளையாவது (Christian values) கொடுக்கிறோமா?

Result centum எடுப்பதில் தானே குறியாக இருக்கிறோம்.

2. திவ்ய நற்கருணையில் இயயேசு மெய்யாகவே இருக்கிறார் என்பது விசுவாச சத்தியம்.

உண்மையிலேயே விசுவசிக்கிறோமா? அல்லது வெறும் சொல்லளவில்தானா?

காலப்போக்கில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்கும்போது இக்கேள்வியை கேட்கத் தோன்றுகிறது.

திவ்யநற்கருணையை இயேசு என ஏற்றுக்கொண்டால்

அவருக்குக் கொடுக்கவேண்டிய

ஆராதனை கலந்த மரியாதையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.

ஒரு காலத்தில்

திவ்யநற்கருணையை பார்த்த உடனே

இறைவனுக்கு மட்டுமே உரிய முழந்தாள் படிதலைச் (Genuflection) செய்தோம்.

இப்போது மனிதனுக்குரிய தலைவணக்கத்தைச் (bowing our head) செய்கிறோம்.

ஒரு காலத்தில் குருவானவர் இறைவிருந்தைத்

தாய்க்குரிய பாசத்தோடு

நமது நாவில் ஊட்டினார்.

நாமும் ஆராதனை உணர்வோடு

இறையுணவை முழந்தாள்படியிட்டு பெற்றுக்கொண்டோம்.

இப்போது நட்டமாய் நின்று

ஏதோ தின்பண்டம் வாங்குவதுபோல

இடது கையால் வாங்கி

வலதுகையால் எடுத்து

வாயில் வைக்கிறோம்.

சாதாரண பண்டத்தைக்கூட
இடது கையால் வாங்குவது
அநாகரிகம்.

இயேவையே இடது கையால் வாங்குமளவிற்கு நமது நாகரீகம் வளர்ந்திருக்கிறது!

ஒரு காலத்தில் பீடத்தில் மத்திய இடத்தில் இருந்த Tabernacle ஐ ஓரங்கட்டிவிட்டோமே,

இது இறை இயேசுவின்பால் நமக்கிருந்த விசுவாசம் அதிகரித்ததின் விளைவா?

ஒருகாலத்தில் எழுந்தேற்றத்தின்போது மக்கள் அனைவரும்

"என் ஆண்டவரே, என் தேவனே"

என்று சப்தமாகக் கூறும்போது விசுவாசமும், பக்தியும் இணைந்து பொங்கிவடியும்.

அந்நிமிடம் நமக்கு விண்ணகம் ஏகிய உணர்வு ஏற்படும்.

இப்போது அந்நேரத்தை ஏன் மௌனமாக்கினார்கள்?

நமது வீட்டுக்கு ஒரு தலைவர் வருகிறார் என்றால் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கிறோம்!

நாம் நன்மை வாங்கும்போது நம்மில் வருபவர் அகில உலகையும் படைத்த சர்வ வல்லப தேவன்.

அவரை வரவேற்க ஆன்மீக ரீதியாக, உடல் ரீதியாக ஏதாவது அக்கரை எடுக்கிறோமா?

நற்கருணை நாதரை வரவேற்க

நமது ஆன்மா சாவான பாவம் இல்லாமலிருக்கவேண்டும்.

இறைவனை வரவேற்கிறோம் என்ற உணர்வு இருக்கவேண்டும்.

உடல்ரீதியாக,

ஒரு காலத்தில் 'நடுச்சாமம் துவங்கி

நன்மை வாங்குமட்டும் ஒன்றும் சாப்பிடாமலும் ,

குடியாமலும் இருக்கவேண்டும்'

என்று இருந்த ஒழுங்கு

ஒரு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்து.

சிலர் இதைப்பற்றியெல்லாம்  இல்லை.

பூசைக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போதே ஏதாவது மென்று கொண்டிருக்கிறாகர்ள்!

அது தப்பு என்பதை உணர்வதே இல்லை!

ஆண்டவருக்குக் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான்!

இது நாம் செய்யும் தவறா?

காலம் செய்யும் தவறா?

பக்தி முயற்சிகளில் பழமையின்மீது புதுமை வளர வேண்டும்.

மாற்றவேண்டும் என்பதற்காக எதையும் மாற்றி, 'காலத்தின்'மேல் பழியைப் போடக்கூடாது.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment