Saturday, October 13, 2018

போர்க்களத்தில் நமது ஆன்மா.

போர்க்களத்தில் நமது ஆன்மா.
*******************************

கிறிஸ்தவ வாழ்வில் நாம் விண் நோக்கிச் செல்லும் பயணம் ஒரு உல்லாசப் பயணம் அல்ல.

உண்மையில் இது ஒரு ஆன்மீகப் போர்க்களம்.

இது ஒரு வித்தியாசமான போர்க்களம்.

நமது உண்மையான எதிரி சாத்தான்.

நமது நித்திய இல்லமாகிய மோட்சத்துக்கு நம்மைப் போகவிடாதபடி தடுப்பதே அவன் வேலை.

அதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதங்கள் கவர்ச்சிகரமான சோதனைகள்.

இதில் பயப்பவேண்டிய விசயமே ஆயுதங்களின் கவர்ச்சிதான்!

உண்மையில் சாத்தான் பயங்கரமானவன்.

பயங்கரமான சாத்தானால் எப்படி கவர்ச்சியாகச் சோதிக்கமுடிகிறது?

இந்தக் கேள்விக்குறிய பதில் ரொம்பப் பயங்கரமானது!

நமது உலக வாழ்விலும், ஆன்மீக வாழ்விலும்

நமக்கு உதவுவதற்கென்று இறைவனால் படைக்கப்பட்ட

நமது உடலையும், உலகையும் தந்திரமாகத்

தன் வசப்படுத்திக்கொண்டு

அவற்றின் உதவியுடன்

தனது கவர்ச்சிகரமான சோதனைக் கணைகளை

நம்மீது ஏவுகிறான்.

அந்தவகையில் நமது உடலும், உலகும் நமது எதிரிகளாக மாறிவிடுவதால்,

நாம், அதாவது, நமது ஆன்மா

அவற்றையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

உலகிலிருந்து நமது ஐம்புலங்களின் வழியேதான் சாத்தான் சோதனைகளை அனுப்புகிறான்.

அன்று ஏவாள் பாம்பு உருவத்திலிருந்த சாத்தானைப்

'பார்க்காதிருந்திருந்தால்',

அதோடு 'பேசாதிருந்திருந்தால்',

அதன் வார்த்தைகளைக்

'கேட்காதிருந்திருந்தால்'

அது கொடுத்த கனியைச்

'சாப்பிடாதிருந்திருந்தால்',

ஆதாமுக்கு அதைக் 'கொடுக்காதிருந்திருந்தால்'

உலகில் பாவம் நுழைந்திருக்காது!

ஏவாளின் கண், காது, கை,  வாய்  வழியாகவே பாவம் நுழைந்திருக்கிறது.

சென்மப்பாவத்தின் விளைவாக நமது சுபாவமும் பழுதடைந்துவிட்டமையால்

நமது ஐம்புலன்களும் பசாசின் சோதனைக்குள்

விழக்கூடிய அளவிற்கு பலகீனமாய் உள்ளன.

இப்பலகீனத்தைப் பசாசு பயன்படுத்திக்கொள்கிறது.

ஐம்புலன்களும் பாவத்தை நாடும்போது அவற்றை எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிறது.

கற்புக்கு எதிரான பாவங்கள், கொலை, கொள்ளை, பிறரைக் கெடுத்துப் பேசுதல், அசுசியான சினிமா, T. V காட்சிகள் பார்த்தல் -

பாவங்களின் எண்ணிக்கையை அடுக்கிக்கொண்டேபோனால் ஏடும் கொள்ளாது, நாடும் கொள்ளாது.

ஏனெனில் பெரும்பாலான பாவங்களை நம் புலன்கள் உதவியுடனே செய்கிறோம்.

நமது புலன்களுக்கெதிரான போராட்டம் நம் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

ஆனால் பாவத்தை விலக்க ஆசிப்பவர்கட்குதான் போராட்டம்.

போரில் வெற்றி பெற்றால் நித்திய பேரின்பம்.

போராடாமல் சோதனை வெள்ளத்தோடு போனால் உலகில் சிற்றின்பம்,

முடிவில் நித்திய நரகம்.

நமது எல்லா பாவங்களையும் நமது ஐம்புலன்களாலேயே செய்வதால்

அவற்றுக்குப் பரிகாரம் செய்ய வந்த இயேசு

தனது ஐம்புலன்களையும் சிலுவை மரத்தில் பலியாக்கினார்.

அவர் தரும் அருளாலேயே நம் ஐம்புலன்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.

"பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க 
நெறிநின்றார் நீடுவாழ் வார்.''

"சிலுவைப் பொறியில் தனது ஐந்து புலன்களையும் பலியாக்கிய

இயேசுவின் ஒழுக்கநெறிப்படி வாழ்பவர்களே
நித்திய வாழ்வு பெறுவர்"

இறைவன் நம்மைப் படைக்குமுன்னே உலகத்தைப் படைத்து நம்மை அதில் வாழவைத்தார்.

ஆனால் சாத்தான் உலகில் இருந்த, படைக்கப்பட்ட ஒரு மரத்தின் கனியைக் கொண்டே நமது முதல் பெற்றோரை ஏமாற்றி விட்டது.

இப்போதும் அது நமக்காகப் படைக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுதான் நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.

உணவு, உடை, இருப்பிடம்  ஆகிய மூள்றும் நாம் உலகில் வாழ அத்தியாவசியப் பொருட்கள்.

வாழ்வதற்காகத்தான் உணவு.

ஆனால் 'வாழ்வதே உண்பதற்காகத்தானே' என்பது போலல்லவா நமது உணவுப் பழக்கங்ஙளை வைத்திருக்கிறோம்!

போசனப் பிரியம் (gluttony) தலையான பாவங்களில் ஒன்று.

பயன் கருதி உண்ணாமல் ருசி மட்டும் கருதி உண்பவன் இப்பாவத்திற்குப் பலியாகத் தயாராகிறான்.

ருசியோடு சாப்பிடுறது தப்பில்லை,

ருசிக்காகச் சாப்பிடுறதும் தப்பில்லை,

ருசியாயிருக்க்கிறதென்று அளவுக்கு மீறிச் சாப்பிடுவதுதான்  தப்பு.

அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வேலையை ஒழுங்காகச் செய்யமுடியாது.

போசனப்பிரியன் சோம்பேறியாக மாறுவான்.

சோம்பேறித்தனம் சாத்தானின் பட்டரை.

Laziness is the workshop of the  devil.

சோம்பலாய் இருக்கும்போதுதான் வேண்டாத எண்ணங்களெல்லாம் மனதை ஆக்கிரமிகக்கும்.

திராட்சை இரசம் (Wine) ஒரு உணவுப்பொருள், மட்டோடு சாப்பிட்டால்,

மது, மட்டுக்கு மிஞ்சினால்.

ஒருநாள் ஒரு ஆண்மகனை

நிறைந்த நகைகள் அணிந்த ஒரு பெண் முன் நிறுத்தி,

அருகே ஒரு Wine நிறைந்த  bottle ஐயும் வைத்து

அவனிடம் இவ்வாறு கூறப்பட்டது:

உனக்கு மூன்று Options தரப்படுகின்றன.

ஏதாவது ஒன்றைமட்டும் தேர்வு செய்ய வேண்டும்.

வன்முறைபைப் பயன்படுத்தி பெண்ணின் நகைகளைக் கொள்ளையடிக்க வேண்டும்.

அல்லது

அந்தப் பெண்ணைக் கற்பழிக்க வேண்டும்.

அல்லது

ஓரு பாட்டில் Wine ஐயும் மிச்சம் வைக்காமல் குடித்துவிடவேண்டும்.

அவன் யோசித்தான்.

முதல் இரண்டும் பாவங்கள். செய்யக்கூடாது.

மூன்றாவது option உணவுப்பொருளைச் சாப்பிடுவது.

மது அருந்துவது குற்றம் என்றாலும் மற்ற இரண்டையும்விட கனம் குறைந்தது.

அதையேத் தேர்வு செய்து, ஒரு பாட்டில் Wineஐயும் குடித்துவிட்டான்.

விளைவு?

போதைத் தலைக்கு ஏறி,  மற்ற இரண்டையும் செய்ததோடு

சொல்லப்படாத நான்காவது ஒன்றையும் செய்துவிட்டான்,

போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டான்!

சாத்தான் இப்படித்தான் சோதிக்கும்.

இது கொஞ்சம்தானே, சாப்பிட்டால் பரவாயில்லை.

ஒரு ரூபாய்தானே, எடுத்தால் பெரிய பாவமில்லை.

கன்றுதான் மரமாய் வளரும்.

துளிகள்தான் வெள்ளமாய் மாறும்.

சின்ன சண்டைகள்தான் யுத்தமாய் மாறும்.

சிறிய குற்றங்கள்தான் பெரிய பாவங்களாய் வளரும்.

பசாசின் 'இவ்வளவுதானே'க்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

உணவைப் போலவே நமக்கு எதிராகச் சாத்தான் திருப்பிவிடும் இன்னொரு பொருள் உடை.

உணவு விசயத்தில் அளவுக்குமிஞ்சி ஆசை ஊட்டும் சாத்தான்,

அதற்கு எதிரான ஆசையை,

அதாவது எவ்வளவு குறைந்த அளவு உடுக்க முடியுமோ அவ்வளவு உடுக்கச் சோதிக்கிறது.

நமது உடல் பரிசுத்மானது.

பரிசுத்த ஆவியின் ஆலயம்.

அது ஒரு கவர்ச்சிப் பொருளோ, காட்சிப் பொருளோ அல்ல.

ஆலயத்தைப் பார்த்தவுடன் பக்தி உணர்வு தோன்றவேண்டுமே தவிர

கவர்ச்சி உணர்ச்சி
தோன்றக்கூடாது.

உடற்கவர்ச்சி காமத்துக்கு வழி வகுக்கும்.

கற்பு நெறி காக்க Decent ஆக உடை அணியவேண்டும்.

உடை மானத்தைக்  காக்கவேண்டும்.

மானத்தை வாங்கக்கூடாது.

சாத்தான் அளவுக்கு மீறிக் குறைந்த உடைக்கு Fashion என்று பெயர் வைத்திருக்கிறான்.

குறைந்த உடையுடன் பொது இடங்களுக்கு, குறிப்பாகக் கோவிலுக்கு வருவோர் மற்றவர்களைக் கெடுக்கின்றனர்.

உடை விசயத்தில் சாத்தானின் சோதனைக்கு இடம் கொடுப்போர்

தாங்களும் கெட்டு பிறரையும் கெடுக்கின்றனர்.

உலகில்  சாத்தானுக்குப் பிடித்த முக்கியமான ஒரு பொருள் பணம்.

பண ஆசைதான் யூதாசைக் கெடுத்தது.

இப்போது நம்மையும் அதுதான் சோதித்துக் கொண்டிருக்கிறது.

ஊழலுக்கு வழி வகுக்கும் லஞ்சம் கொடுக்க, வாங்கப் பயன்படுவது பணம்தான்.

நமது ஆடம்பர, ஊதாரித்தனமான வாழ்வுக்குப் பயன்படுவதும் பணம்தான்.

நல்லவனைத் திருடனாக மாற்றுவதும் பணம்தான்.

திருமணம்,கல்வி,  மருத்துவம், பிறர் பணி போன்ற நல்ல காரியங்களை வியாபாரமாக மாற்றுவதும் பணம்தான்.

கலப்படம் அற்ற அன்போடு கொடுக்கப்படும் பணம் காணிக்கை, பிறருக்கு உதவி, நன்கொடை எனப்படும்.

அன்பு இல்லாவிட்டால் பணம் வியாபாரமாகிவிடும்.

நல்ல காரியத்துக்காக நாம் பணத்தைப் பயன்படுத்துவது சாத்தானுக்குப் பிடிக்காது.

அது தற்பெருமை உணர்வை நம்முள் புகுத்தி நற்செயலை வியாபாரமாக்க முயலும்.

நாம் கவனமாக இருக்கவேண்டும்.

இப்போதும் உலகில் கிடைக்கும்

புகழ், வசதிகள், அதிகாரம் போன்றவற்றைக் காண்பித்து,

ஆசையூட்டி நம்மை பாவம் செய்யத் தூண்டுவான்.

இவற்றை அடைய

நமது இறைநோக்குப் பயணத்தை நிறுத்தும்படி சோதிப்பான்.

"வேண்டியது இறைவனா? இவ்வுலகப் புகழா?"

மனதில் ஒரு போரே நடக்கும்.

இறைவன் வென்றால் நமக்கு வெற்றி.

புகழ் வென்றால் நமக்குத் தோல்வி.

போரில் வெற்றிபெற சுயமுயற்சியால் முடியாது.

இறை அருள் உதவி இல்லாது அணுவைக்கூட அசைக்க முடியாது.

இறையருளைப் பெற

செபம்,

தவம், 

ஒறுத்தல் முயற்சிகள்,

தியானம், 

இறைவனால் அனுப்பப்படும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அவருக்கே ஒப்புக்கொடுத்தல்

  போன்ற பக்தி முயற்சிகளைச் செய்யவேண்டும்.

சாத்தானோடு நாம் செய்யும் போரில்

நமது ஆயுதங்களும் இவைதான்.

இறைவரம் வேண்டுவோம்.

"விண்ணகத் தந்தையே,

எங்களைச் சோதனையில் விழ விடாதேயும்,

தீமையிலிருந்து எங்களை இரட்சியும். ஆமென்"

எவ்வளவு பெரிய போராய் இருந்தாலென்ன

இறை அருளுடன்

வெற்றிவாகை சூடுவோம்,

இறையகம் ஏகுவோம்.

லூர்து செல்வம்.





No comments:

Post a Comment