Wednesday, October 10, 2018

அம்மாவிற்கு ஒரு கடிதம்.

அம்மாவிற்கு ஒரு கடிதம்.
*****************-********-******
விண்ணில் வாழும் அன்பு நிறை அம்மா,

சில நாட்களுக்கு முன்பு  எனது Facebookகில் தங்கள்  படம் ஒன்றைப் பகிர்ந்தேன்.

அதன் அடியில் தாங்கள் கூறியிருக்கும் பின்வரும் வசனம் இருந்தது:

"ஜெபமாலை வழியாக எதைக் கேட்டாலும் நான் தருவேன்-
அன்னை மாமரி."

இவ்வசனத்தை வாசித்துவிட்டு,  தாய்த்திருச்சபையை விட்டுப் பிரிந்து சென்ற சகோதரர் (எனது நெருங்கிய  உறவினர்) ஒருவர் பின்வருமாறு Comment செய்திருந்தார்,

"யேசுவே அவரது தாயான மரியாளோ செபமாலை சொல்லி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்றால் என்வழியாக கேளுங்கள் என்றோ மரியாள் சொல்லியிருப்பதாக ஆதாரமிருந்தால் தயவுசெய்து காட்டுங்கள்."

நான் அவருக்குப் பின்வருமாறு பதில் அளித்தேன்,

"அம்மாவிடம் நமக்கு வேண்டியதைக் கேட்க ஆதாரம் தேவையில்லை.

அம்மா மீது அன்பும், நம்பிக்கையும் இருந்தால் போதும்.

ஆசிரியரிடம் மாணவன் கேட்டான்,  "சார், நான் படிக்காவிட்டால் அடிப்பதற்கு சட்டபூர்வமாக ஆதாரம் இருக்கிறதா?"

ஆசிரியர் சொன்னார்.  "உன் மேல் கரிசனம் இருக்கிறது, அக்கரை இருக்கிறது. உன்னைக் கண்டித்து படிக்கவைக்க அது போதும். "

அன்னை மரியாள் நம் தாய். அவளிடம் வேண்டியதைக் கேட்க நமக்கு உரிமை இருக்கிறது.

அவளைத் தாயாக ஏற்றுக்கொள்ளாதவர்கட்கு என் பதில் புரியாது."

என்று பதில் அளித்திருந்தேன்

என் பதிலுக்குப் பின்வருமாறு பதில் அளித்தார்,

"இது உலகப்பிரகாரமான கருத்து. விவிலியமே கிறிஸ்துவத்தின் அடிப்படை. Sorry மாமா.நான் கிறிஸ்துவர்களிடம் சொல்ல வேண்டியதை கத்தோலிக்கர்களிடம் சொல்லி எதிர்பார்த்து சொல்லிவிட்டேன்."

இதற்கு நான் பதில் அளிக்கவில்லை.

ஏனெனில்,

அடிப்படை வாய்ப்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கட்கு எந்தக் கணக்கை எப்படி விளக்கினாலும் புரியாது.

இருந்தாலும் இதை இப்படியே விட்டு விட முடியாது.

இவர்கள் நம்மைவிட்டு பிரிந்துசென்றுவிட்டாலும் உம்முடைய பிள்ளைகள்தானே.

அவர்களுக்காகவும்தானே

நீர் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த,

பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்த

அன்புத் திருமகன் இரத்தம் சிந்தி

பாடுகள் பட்டு

சிலுவையில் தன் இன்னுயிரை பலியாக்கினார்.

அவர்கட்கு உமது மகன் வேண்டுமாம், நீர் வேண்டாமாம்.

இயேசுவை இறைவன் என்று ஏற்றுக் கொள்வார்களாம்,

அவரைப் பெற்ற உம்மை இறைவனின் தாய் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்.

எனக்கொரு சந்தேகம்,  அவர்களைப் பற்றி.

தங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுக்குமான உறவைக் குறிப்பிடும்போது 'இன்னாருடைய பெற்றோர்'னு சொல்வாங்களா?

'இன்னாருடைய உடலின் பெற்றோர்'னு சொல்வாங்களா?

அவர்கள் கருவுற்றது உடலைமட்டும்தானே!

அவர்கட்கு  இயேசு வேண்டுமாம், 

அவரால் நிருவப்பட்ட கத்தோலிக்க திருச்சபை வேண்டாமாம்.

அவர்கட்கு பைபிள் மட்டும் போதுமாம்,

'இதுதான் பைபிள்' என்று நிர்ணயித்த பாரம்பரியம் வேண்டாமாம்.

அம்மா,

பைபிள் உங்கள் மகனுக்கு  மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறதினால அவர் மட்டுமே  போதுமாம்.

எங்களுக்கும் தெரியும் மொத்த பைபிளின் மையமும்

உங்கள் மகனும், எங்கள் இரட்சகருமான இயேசு  கிறிஸ்துதான் என்று.

எங்களுக்கும் கிறிஸ்துதான் முக்கியம்.

அதனால்தான் கிறிஸ்து எதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தாரோ

அதற்கெல்லாம் அவருக்காக நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அவர் நற்செய்தியை போதிக்கமட்டும் செய்யவில்லை, அவரே வாழ்ந்தும் காட்டினார்.

இறைவன் நமக்கு அளித்த பத்துக் கட்டளைகளில்  முதல் மூன்றும் நமக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு பற்றியது.

நான்காவது  நமக்கும் நமது பெற்றோருக்கும் உள்ள உறவு பற்றியது.

4. "பிதாவையும் மாதாவையும் சங்கித்திருப்பாயாக !"

அம்மா, 'எதற்காக எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறாய்?' என்று கேட்டுவிடாதீர்கள்.

என் மனதில் உள்ளதையெல்லாம் அம்மாவிடம் கொட்டாமல்  வேறு யாரிடம் கொட்டுவேன்?

தங்கள் மகன் இறைவன்.

இறைத்தந்தையின் சித்தத்தை நிறைவேற்றவே உலகில் பிறந்தார் என்று எல்லோருக்கும் தெரியும்.

"என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்."(அரு.6:38)

மனித சுபாவத்தில் அவருக்குத் தந்தை இல்லை.

தாயாகிய உங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்று எங்களுக்குத் தெரியும்.

நான்காவது கட்டளையைக் கொடுத்தவர் அவர்தானே!

தங்களுக்கு உள்ள,

அவரே அளித்திருந்த,

சுதந்திரத்தை (Freedom of choice) மதித்து,

உங்கள் வயிற்றில் மனுவுரு எடுக்க தங்கள் அனுமதியைப்பெற

கபிரியேல் தூதரை

உங்களிடம் அனுப்பினார்.

 "இதோ! ஆண்டவருடைய அடிமை. உமது வாத்தையின்படியே எனக்கு ஆகட்டும்"

எனத் தாங்கள் கூறியபின்தான் தங்கள் வயிற்றில் மனுவுரு எடுத்தார்.

தாங்கள் இவ்வாறு கூறுவீர்களென்று

அவருடைய அளவற்ற ஞானம் காரணமாக

அவருக்கு நித்திய காலமாகத் தெரியுமாகையால்,

தனது நித்திய திட்டப்படி,

தாங்கள்

சென்மப்பாவமாசின்றி

தங்கள் தாயின் வயிற்றில் உற்பத்தியாக

வரம் அருளினார்,

இறைவனின் தாய் முற்றிலும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதற்காக.

மனுக்குலத்திலேயே

சென்மப்பாவ மாசின்றி உற்பவித்த

ஒரே பெண்மணி நீங்கள் மட்டுமே.

இயேசுவே தங்களுக்கு
இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க,

நாங்கள் கொடுக்கக்கூடாதாம்.

அம்மா, தங்கள் திருமகன்

உலகில் வாழ்ந்த 33

ஆண்டுகளில் 30 ஆண்டுகள்

தங்களுக்குக் கீழ்ப்படிந்து,

தங்களுக்கு உதவி செய்து வாழ்ந்தார்.

இதிலிருந்து தெரியவில்லையா தங்கள் மகன் தங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்று.

இயேசுவைப் பின்பற்றும் நாங்கள் அவர் வாழ்ந்து காட்டியதைப் பின்பற்ற வேண்டாமா?

அவர் நேசித்த உம்மை நாங்களும் நேசிக்க வேண்டாமா?

'பாரம்பரியம் வேண்டாம், பைபிள் மட்டும் போதும்' என்பவர்கள் அதில் உள்ளதையாவது ஏற்றுக் கொள்ளவேண்டாமா?

இயேசுவை வயிற்றில் சுமந்து  பெற்றெடுத்து பாலூட்டி வளர்த்த நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று அவர் காலத்தவரே புகழ்ந்ததை(லூக்.11:27)  இவர்கள் பைபிளில் வாசிக்கவில்லையா?

ஒருவரை மற்றொருவரோடு பெருமையாக ஒப்பிடும்போது
யாரோடு ஒப்பிடுகிறாரோ அவர் பெருமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.

தன்னைப் பின்பற்றும் தன் சீடரை, அம்மா, உங்களோடு ஒப்பிடுகிறார். (மத்.12:49)

ஏனெனில், நீங்கள் உங்கள் திருமகனைப் போலவே பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றுகிறீர்கள்.

ஆகவே பிதாவின் திருச்சித்தத்தை நிறைவேற்றும் சீடர்களும்

இயேசுவின் தாய் ஆகிறார்கள்.

இதிலிருந்து என்ன புரிகிறது?

எங்கெல்லாம் இயயேசுவுக்கு சீடர்கள் இருக்கிறார்களோ

அங்கெல்லாம் நீங்களும் இருக்கிறீர்கள்.

இயேசுவின் தாயாகிய நீங்கள் எப்படி நடந்தீர்களோ

அப்படியே நாங்களும் நடந்தால்

இயேசுவின்  சீடர்கள் ஆகிறோம்.

சுருக்கமாகச் சொல்வதானால்

உண்மையான கிறிஸ்தவனுக்கு நீங்களே முன்மாதிரி.

என்று நாங்களும் உங்களைப்போல,

"இதோ ஆண்டவருடைய அடிமை, உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகக்கடவது"

என்றுகூறி இறைவனிடம் சரணாகதி அடைகிறோமோ
அன்றுதான் நாங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள்.

நாங்கள் உங்கள் பாதுகாப்பில் உங்களைப்போல வாழ வேண்டும் என்பதற்காகத்தான்

தங்கள் மகன் தான் சிலுவையில் மரிக்குமுன்   உங்களை எங்கள் அன்னையாக்கினார்.

"இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.

27 பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்."
(அரு.19:226,27)

அருளப்பரைப்போலவே

நாங்களும் உங்களை

எம் வீட்டில்

ஏற்றுக்கொண்டோம்.

அம்மா, நம்மிடமிருந்து பிரிந்துபோன ககோதரர்கள் நம்மிடம் வந்து சேர உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்.

அவர்கட்கு செபமாலை என்றால் என்னவென்று புரியவில்லை போலிருக்கிறது.

அவர்கள் வழியாகப் பார்த்தாலும்கூட,

அவர்களும் ஏற்றுக் கொண்ட பைபிள் நிகழ்ச்சிகளைத்தானே தியானிக்கிறோம்.

அவர்கட்கு உங்களை வாழ்த்துவது பிடிக்கவில்லை.

"தூதர் அவளது இல்லம் சென்று, " அருள் நிறைந்தவளே வாழ்க, ஆண்டவர் உம்முடனே " என்றார்." (லூக். 1:28)

இறைவன் அனுப்பிய கபிரியேல் தூதர் உங்களிடம் சொன்ன வாழ்த்துரையைத்தானே சொல்லுகிறோம்.

இது ஏன் அவர்கட்குப் புரியவில்லை?

அம்மா,

அவர்கட்காகவும்,

எங்களுக்காகவும்

உம் திரு மகனிடம்

வேண்டிக்கொள்ளும்.

எனக்கு முன்பே மோட்சத்திற்கு வந்துவிட்ட
செல்வ பாக்கியத்திடம் என் அன்பைத் தெரிவியுங்கள்.

என்றும் தங்கள் அன்பில் வாழும் மகன்,

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment