Friday, March 30, 2018

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.
********************************

"நீங்கள் தீர்ப்புக்குள்ளாகாதபடி தீர்ப்பிடாதீர்கள்."(மத்.7:1)

"மனந்திரும்பும்படி பாவிகளையே அழைக்க வந்துள்ளேன்" (லூக்.5:32)

"நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" (அரு.8:11)

 "தந்தையே, இவர்களை மன்னியும்: ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை"(லூக்.23:34)

என்ற நம் ஆண்டவரின் அருள் வாக்கியங்களை மனதிற்கொண்டு,

எதையும் இயேசுவின் கண்ணோக்குப்படிதான் நோக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்,

இயேசுவின் 'அன்பு' என்ற கண்ணாடி மூலமே பைபிள் வசனங்கட்கு விளக்கம் காண வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையிலும் இவ்வரிகளை எழுதுகிறேன்.

யூதாஸ்

இயேசுவைக் காட்டிக்கொடுத்தது

மிகப்பெரிய பாவம்.

மறுப்பதற்கில்லை.

ஆனால் இராயப்பர் இயேசுவை
மூன்று முறை மறுதலித்தார்.

யூதாஸ் இயேசுவைத் தனக்குத் தெரியும் என்பதன் அடிப்படையில் காட்டிக் கொடுத்தான்.

இராயப்பர் இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மூன்று முறை மறுதலிதத்தார்.

மறுதலிப்பது மிகப் பெரிய பாவம்.

அதையே இயேசு மன்னித்து விட்டார், இராயப்பர் மனஸ்தாபப்பட்டு அழுததால்.

யூதாசும்

'மாசில்லாத இரத்தத்தைக்' காட்டிக் கொடுத்ததற்காக

வருந்தினான், 

வருத்த மிகுதியால்

தற்கொலை செய்துகொண்டான்.

தற்கொலை பாவம்.

ஆனால் யூதாஸ் 'பாவம் செய்யப்போகிரோம்' என்ற அறிவோடு செய்திருக்கமாட்டான்.

'தன் ஆண்டவரைக் காட்டிக்கொடுத்துவிட்டோமே' என்ற உணர்ச்சி வேகத்தில் செய்த   செயல் அது.

உணர்ச்சி கூட, கூட மூளையின் வேலை குறைந்துகொண்டே வரும்.

பாவத்தின் கனாகனம் மூளையின் சிந்திக்கும் ஆற்றலைப் பொறுத்தது.

மூளை முற்றிலும் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டால் நம்மால் பாவம் செய்யவவே முடியாது.

ஆகவே யூதாஸ் செய்த தற்கொலைப் பாவத்தின் கனாகனம் கடவுளுக்கு மட்டுமே தெரியும்,

அவர்தான் நமது ஆழ்மனத்தையும் அறிந்தவர்.

நமது கண்ணுக்கு செயலின் வெளிப்புறம் மட்டுமே தெரியும்,  உள் காரணம் தெரியாது.

ஒருமுறை ஒரு மாணவன் வகுப்பிற்குப் பிந்தி வந்தான்.

நான் காரணம் கேட்கவில்லை.

"கையை நீட்டு" என்றேன்.

நீட்டினான்.

பிரம்பினால் இரண்டு அடி கொடுத்தேன்.

முகம் சுழியாமல் வாங்கிக் கொண்டான்.

"ஏண்டா, பிந்தி வந்ததற்கு அடித்திருக்கிறேன். கொஞ்சம்  கூட உணர்ச்சி இல்லையா?  போ. இடத்தில போய் உட்கார்." என்றேன்.

புன்சிரிப்போடு போய் உட்கார்ந்தான்.

'என்னடா இந்தப் பய அடிவாங்கியும் சிரிச்சிக்கிட்டு  போரான். என்ன மன அழுத்தம்' என்று நினைத்துக் கொண்டேன்.

மதிய உணவு இடைவேளை நேரத்தில் என்னிடம் வந்தான்.

"என்னடா? "

ஒரு பையை என் கையில் தந்தான்.

"என்னடா இது? "

"உங்களுக்கு நார்த்தங்காய் ஊறுகாய்னா ரொம்பப் பிடிக்கும்னு அப்பாட்டச் சொன்னேன்.

அவர் தொட்டத்தில வந்து வேண்டிய அளவு பறிச்சிக்கன்னு சொன்னாரு.

அதனாலதான் தோட்டத்துக்குப்   போய்ட்டு வரக் கொஞ்சம் பிந்தி விட்டது."

"Sorryடா. ஆனாலும் எனக்காகக்கூட பிந்திவரக் கூடாது.  ரொம்ப நன்றி"

பையன் பிந்தி வந்தது தப்பு, ஒழுங்குப்படி.

ஆனால் அவன் மனதார தப்பு செய்யல.

ஆக,  யாரின் செயலையும் வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பீடு செய்துவிடக்கூடாது.

யூதாசைப் பொறுத்த மட்டில்

"தந்தையே, இவர்களை மன்னியும்:

ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று

இவர்களுக்குத் தெரியவில்லை"

என்ற இயேசுவின் வார்த்தைகள் அவனுக்கும் பொருந்தும்.

அவன் உயிர் பிரியுமுன் இயேசுவிடம் மன்னிப்புக் கேட்டிருப்பான்,

அவரும் கருணையோடு மன்னித்திருப்பார்

என்று நம்பினால்

என்ன குறைந்துபோவோம்?

யூதாசுக்கு இயேசுவின் மேல் எந்த வெறுப்பும் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அவனுக்கு இயேசு கடவுள், சர்வ வல்லவர் என்று தெரியும்.

"நமக்கு 30 வெள்ளிக்காசு கிடைத்துவிடும்.

இயேசு எப்படியும் தப்பித்து விடுவார்."

என்றுதான் நினைத்திருப்பான்.

ஆகவேதான் இயேசுவுக்கு மரணத்தீர்ப்பு ஆனவுடன்

"மனம் வருந்தி,

முப்பது வெள்ளிக் காசுகளையும்

தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,


"மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்"

என்றான்

ஆகவே அவன் நோக்கம் கொலை அல்ல,

பணம் மட்டும்தான்.

ஒரு செயலின் கனாகனத்தை அதன் நோக்கம்தான் தீர்மானிக்கிறது.

ஆகவே கடவுள் அவன்மீது இரக்கங்கொண்டு

அவன் உத்தம மனஸ்தாபப்பட வேண்டிய அருள்வரத்தைக் கொடுத்து,

அவனை மன்னித்திருப்பார் என நம்புவோம்.

மற்றவர்கள் பற்றி நல்லதையே நினைப்போம்.

லூர்து செல்வம்.



No comments:

Post a Comment