"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."(மாற்கு.16:15)
----------------------*--------------------------
பின் வரும் வரிகள் யார் மனதையும் நோகச் செய்யும் நோக்கோடு எழுதப்படவில்லை.
இறைமகன் இயேசுவின் விருப்பத்தை நாம் எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறோம் என்பதை ஆய்ந்து அறிவதே இதன் நோக்கம்.
பிழை இருப்பின் தயவுசெய்து சுட்டிக் காண்பிக்கவும்.
பள்ளியில் படிப்பவர்கள் இரண்டுவித செயல்பாடுகளில் ஈடுபடுவர்.
பாடத்திட்டம்
சார்ந்த செயல்பாடுகள்,
பாடத்திட்டம் சாராத செயல்பாடுகள்.
முதல்வகை செயல்பாடுளுக்காகத்தான் பள்ளிக்குப் போகிறார்கள்.
அவற்றில்தான் தேர்வுகள் நடக்கும்.
தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் அவர்களின் பள்ளிப்படிப்பின் வெற்றி, தோல்வி, தரம்
தீர்மானிக்கப்படுகிறது.
பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளில் விளையாட்டு, கலைப்பயிற்சிகள் போன்றவை அடங்கும்.
அவற்றில் தேர்வு இருக்காது, அவை மாணவனின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்காது.
பாடத்திட்டம் சாராத செயல்பாடுகளில் சிறந்து விளங்கிவிட்டு, பாடத்திட்டம் சார்ந்தவற்றில் தோற்றுப்போனால் அவனது பள்ளிப்படிப்பே தோல்விதான்.
நம் ஆண்டவராகிய இயேசு தனது சீடர்கட்காக வகுத்திருந்த பாடத்திட்டம் -
நற்செய்தியை அறிதல்,
அதன்படி நடத்தல்,
அதை மக்கள் எல்லோருக்கும் அறிவித்தல்
மட்டும்தான்.
அதற்காக
அவர்கட்கு
விசுவாசம் ,
நம்பிக்கை,
அன்பு
ஆகியவற்றில் பயிற்சி கொடுத்தார்.
தான் விண்ணகம் ஏகுமுன் அவர்களை முழுநேர
(Underline முழுநேர) ஆன்மீகப் பணியாளர்களாக மாற்றினார்.
இயேசு அவர்கட்கு பாடத்திட்டம் சாராத பயிற்சி எதுவும் அளிக்கவில்லை.
அவர் உலகிற்கு வந்தது மனிதரை இரட்சிக்க.
தன் வாழ்நாளை அதற்கு மட்டுமே அர்ப்பணித்தார்.
தனது சீடர்களை அதற்காகவே தயாரித்தார்.
அவர் விண்ணகம் ஏகுமுன் அவர் தன் சீடருக்கு இட்ட பணி,
"உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்."(மாற்கு.16:15)
அவருடைய சீடர்கள் அப்பணியை மட்டுமே செய்தார்கள்.
அப்பணிக்காக தம் உயிரையே தியாகம் செய்தார்கள்.
இன்று அவர்களின் இடத்திலிருந்து பணி புரியும் குருக்களுக்கும் அது ஒன்றுதான் முழுநேரப் பணி.
மக்களின் ஆன்மீக வாழ்விற்காக உழைப்பது மட்டுமே அவர்களின் பணி.
நன்கொடைகள் வசூலிப்பது, கோவில்கள் கட்டுவது, பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பது, நிலங்களை நிர்வகிப்பது போன்ற பணிகள் சத்தியமாக குருக்களின் பணி கிடையாது.
இவை எல்லாம் 'பாடத்திட்டம் சாராத' (Extra-curricular) பணிகள்.
அவை தவறான பணிகள் அல்ல,
அவர்களின் அழைப்பைச் சாராத பணிகள்.
அவர்களின் அழைப்பைச் சார்ந்த பணிகட்கு இடைஞ்சலாயிருப்பின், ஒதுக்கப்பட வேண்டியவை.
பல ஆண்டுகள் தேவசாஸ்திரம் கற்று குருப்பட்டம் பெற்றது மக்களின் ஆன்மாக்களைக் கவனிப்பதற்காகத்தான், கட்டடங்களையும் நிலங்களையும் கவனிப்பதற்காக அல்ல.
நற்செய்தியை அறிவிப்பது,
திருப்பலி நிறைவேற்றுவது,
பாவசங்கீத்தனம் கேட்பது,
பாவங்களை மன்னிப்பது,
இயேசுவை நமது ஆன்மீக உணவாகத்தருவது,
பாவிகளைத் தேடிச் செல்வது,
பாவ நிலையிலிருந்து அவர்களை விடுவிப்பது,
வீடுகளைச் சந்திப்பது,
சுகமில்லாதவர்கட்கு நற்கருணை ஆண்டவரை வழங்குவது,
அவர்கட்கு ஆறுதல் சொல்வது,
இவ்வுலக வாழ்க்கையின் இறுதி நிலையில் உள்ளவர்களை இறை இயேசுவின் கரங்களில் ஒப்படைப்பது,
தேவத்திரவிய அனுமானங்களை நிறைவேற்றுவது
போன்ற ஆன்மீகப் பணிகளைச் செய்யவே அவர்கள் குருப்பட்டம் பெற்றுள்ளார்கள்.
யாதாமொருவர் ஒருவர் ஒரு குருவை அணுகி,
"சுவாமி, என் மகள் மருத்துவ மனையில் இருக்கிறாள், தயவு செய்து அவளுக்கு நன்மை கொண்டு வாருங்கள்" என்று கூறும்போது,
"எனக்குக் கல்லூரியில் பணி இருக்கிறது, நீங்கள் பங்குச் சுவாமியைப் பாருங்கள்,"
என்று கூறினால்,
அழைத்தவர் என்ன நினைப்பார்?
"இயேசு இவரை குருவானவர் ஆக்கியது ஆன்மாக்களைச் சந்திக்கவா, அல்லது கல்லூரியில் பாடம் நடத்தவா?" என்று நினைப்பாரா? நினைக்க மாட்டாரா?
ஆண்டவர் கூறிய 'விருந்துக்கு அழைக்கப்பட்டோர்' உவமையில்,
" நான் ஐந்து ஏர் மாடு வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்"
(லூக்.14:19)
என்று கூறுபவர்க்கும்,
"நான் கல்லூரிப் பணிக்குச் செல்கிறேன். மன்னிக்க வேண்டுகிறேன்"
என்று கூறுபவர்க்கும் என்ன வித்தியாசம்?
ஆன்மீகப் பணிக்கு அழைக்கப்பட்டோர் அப்பணியை முழுநேரப் பணியாகச் செய்யவேண்டும்.
அப்படியானால் மற்ற நிர்வாகப் பணிகளை யார் செய்வது?
கோவில்கள் கட்டுவது, பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பது, நிலங்களை நிர்வகிப்பது போன்ற பணிகளை யார் செய்வது?
ஆன்மீகக் காரியங்களை முழுக்கமுழுக்க குருக்கள் கவனித்துக்கொண்டால்
ஆன்மீகக் காரியங்களுக்கு உறுதுணையான லௌகீக காரியங்களை விசுவாசிகள் (Tne laity) கவனித்துக் கொள்ள வேண்டும்.
பணியாள் நிருவாகம், பண நிர்வாகம் போன்ற சகல லௌகீக நிர்வாகங்களையும் விசுவாசிகள் வசம் ஒப்புவித்து விட்டு, குருக்கள் ஆன்மீக காரியங்களில் முழுக் கவனத்தையும் செலுத்தவேண்டும்.
உடலும், ஆன்மாவும் சேர்ந்து ஒரு ஆளாய்ச் செயல்படுவது போல்,
விசுவாசிகளும், குருக்களும் சேர்ந்து ஒரே திருச்சபையாய் இயங்க வேண்டும்.
விசுவாசிகளின் ஆன்மீகக் காரியங்களைக் குருக்களும், குருக்களின் லௌகீக காரியங்களை விசுவாசிகளும் கவனித்த்துக்கொண்டால்,
அதாவது ஒருவரை ஒருவர் சார்ந்து இயங்கினால்,
அதை விட மேன்மை தருவது வேறு என்ன இருக்க முடியும்?
பங்குக் குருக்கள்
பங்கு மக்களின் ஆன்மீக மருத்துவர்கள்.
பாவ வியாதியிலிருந்து மக்களைக் குணப்படுத்தி,
ஆன்மீக உணவை ஊட்டி,
நித்திய பேரின்ப வாழ்வை நோக்கி அழைத்துச் செல்பவர்கள்.
நாம் அவர்களை இயேசுவாகத்தான் பார்க்க வேண்டும்.
பாவ மன்னிப்பு பெறவும், ஆன்மீக வழிகாட்டுதலுக்காக மட்டுமே அவர்களை அணுகவேண்டும்,
வேலை கேட்கவும், சிபாரிசுக் கடிதம் கேட்கவும் அல்ல.
ஏனெனில் அவர்கள் நிர்வாகிகள் அல்ல.
அவர்கள் நமக்கு வேண்டிய. ஆன்மீக உணவைத் தர இயேசுவால் நியமிக்கப்பட்வர்கள்.
அவர்கட்கு வேண்டிய உணவு, உடை, இருப்பிடத்தை அமைத்துக் கொடுத்து அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டியது நமது கடமை.
அவர்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டிய உதவியை நாம் செய்வோம்.
அவரவர் பணியை அவரவர் ஒழுங்காகச் செய்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment