Friday, March 23, 2018

ஆடிக் கழிவு தவமுயற்சிகள்.

ஆடிக் கழிவு தவமுயற்சிகள்.
********************************

ஆடி மாதம் வந்தாலே போதும் நமது பெண்கள் பட்டாளம் ஜவுளிக் கடைகளை நோக்கி படை எடுத்துவிடும்.

அந்ந மாதம் முழுதும் பாதி விலையில் உயர் ரகத் துணிமணிகளை அள்ளி விடலாமே!

குறைந்த விலையில் நிறைந்த பொருட்கள் கிடைத்தால் யார்தான் வேண்டாமென்பார்கள்?

முடிவில்லா நித்திய பேரின்பத்தை அடைவதற்காக,

உலகை வெறுத்து,  காடுகட்குச் சென்று கடுந்தவம் புரிந்தவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், 10000 ரூபாய்ப் புடவையை வெறும் 100 ரூபாய்க்கு வாங்கிச் செல்லும் பெண்மணி போல,

வாழ்நாளெல்லாம் கடுந் தவம் புரிந்து முனிவர்கள் அடைந்த மோட்ச இன்பத்தை,

ஒரே ஒரு  வாக்கியத்தில் சம்பாதித்துவிட்ட ஒருவரின் வரலாரும் நமக்குத் தெரியும்.

"இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" 

என்று இயேசுவைக் கூறவைப்பதற்கு அவன் பயன்படுத்திய ஒரு வாக்கியம்,

"இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" 

அவன் நினைவு கூரத்தான் சொன்னான்,

இயேசுவோ உறுதிமொழியே கொடுத்துவிட்டார்!

குறைந்த விலை,  நிறைந்த பொருள்!

நல்ல கள்ளனுக்கு மட்டும்தான் மோட்சத்தைக் குறைந்த வார்த்தைகளில் களவாடத் தெரியுமா? 

நமக்குத் தெரியாதா?

"இயேசுவே! என்றென்றும் என்னை உம் நினைவில் வைய்யும். "

இயேசு உறுதியாகச் சொல்வார்,

"மகனே, உன்னை என்னால் எப்படி மறக்க முடியும்?

மறப்பதற்காகவா உனக்காகச் சிலுவையில் என்  உயிரைப் பலியாக்கினேன்?

பயப்படாதே,

நீ என்றென்றும் என்னோடுதான் இருக்கிறாய்."

உலகில் சமாதானத்தை ஏற்படுத்த என்னென்ன முயற்சிகளெல்லாமோ செய்கிறாகள்.

ஆனால் இறைவன் நமக்கு அளித்த விண்ணகச் செய்தி,

"நல் மனத்தோர்க்குச் சமாதானம்."

சமாதானதத்திற்கு வேண்டியதெல்லாம் நல்ல மனது மட்டும்தான்.

நல்ல மனதிருந்தால் மற்றவை தாமே வரும்.

"தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர்."   
இயேசுவே கூறிய வார்த்தைகள்.

குறைந்த விலை(நன்மனது), நிறைந்த பொருள் (சமாதானம்).

மனதிருந்தால் மார்க்கமுண்டு.

நல்ல மனதிருந்தால் விண்ணக வழி தானே திறக்கும்!

தவக்கால தவ முயற்சிகட்காக நிறைய கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.

காலையில் ஐந்து மணி.

நல்ல தூக்கம்.

அம்மா எழுப்புகிறார்கள்.

தூங்கணும் போலிருக்கிறது.

இருந்தாலும், 

"இயேசுவே! உமக்காக."

எழுகிறோம்.

"பிதா,  சுதன், பரிசுத்த ஆவியின்பெயராலே,
ஆமென்."

இயேசுவுக்குப் பிடித்த தவமுற்சி,  அவருக்காக எழுவது!

பகலில் நடப்பதெல்லாம் நமது   விருப்பப்படி நடக்கும் எதிர்பார்க்க முடியாது.

நமது விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடந்தால் நமக்கு என்ன வரும்?

கோபம் வரும்.

கோபம் வரும்போதெல்லாம்,  மனதை விண்ணோக்கி எழுப்பி,

"இயேசுவே உமக்காக."

என்று செபித்து,

இயேசுவின் பாடுகளை நினைத்துப் பார்த்தால் கோபம் மறைந்துவிடும்.

ஒரு புன்னகையோடு,  'இயேசுவே நன்றி'
என்று செபிப்பது மிகப் பெரிய தவமுயற்சி!

ஏனெனில் இயேசுவின் உதவியோடு நம்மை நாமே வென்றிருக்கிறோம்!

ஒரு நாள் முழுவதும் பிறரைப்பற்றி குறை கூறாதிருப்பதே மிகப்பெரிய தவ முயற்சி !

உணவில் ருசி இல்லையா?

பரவாயில்லை.

இயேசுவுக்காகப் புன்முறுவலோடு சாப்பிடுவோம்.

மிகப்பெரிய தவமுயற்சி.

நம்மேல் நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் உண்மையான புன்சிரிப்போடு உரையாடுவது மிகப்பெரிய தவமுயற்சி.

ஒரு நேர உணவை ஒறுப்பது தவமுயற்சிதான்.

அந்த உணவிற்கான விலையைத் தேவைப்படுவோர்க்குக் கொடுக்கும்போதுதான் அத்தவமுயற்சி முழுமைபெறும்.

மற்றவர்கட்கு உதவி செய்ய நினைப்பதே மிகப் பெரிய தவமுயற்சி.

இறைவன் நமது உள்ளத்தை நோக்குகிறார்.

நமது உள்ளத்தில் கள்ளம்,  கபடு இல்லாமலிருந்தால்,

அந்த இடத்தில் ஆண்டவரின் அருள் நிறைந்திருக்கும்.

நம் உள்ளத்தில் வாழும் இயேசுவுக்காக

எதை நினைத்தாலும்,

எதைப் பேசினாலும்,

எதைச் செய்தாலும்,

எவ்வளவு சிறியதாய் இருந்தாலும்

அது தவமுயற்சிதான்.

சிறிய சிறிய துளிகள் சேர்ந்ததுதான் பெரிய கடல்.

சிறிய சிறிய மணல்மணிகள் சேர்ந்ததுதான் பெரிய கடற்கரை.

சிறிய சிறிய நல்லெண்ணங்களும்,

சிறிய சிறிய அன்பு வார்த்தைகளும்,

சிறிய சிறிய தற்செயல்களும்

சேர்ந்ததுதான் மிகப்பெரிய தவ வாழ்க்கை.

நாம் மிகச் சிறியவர்கள்.

நமது சொத்தாகிய இயேசு மிகப் பெரியவர்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment