"எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.(அரு.20:23)
இயேசு உலகில் பிறந்தது நோயாளிகளைக் குணமாக்குவதற்காக அல்ல.
அவரது பொது வாழ்வின் போது ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் குணமாக்கினார்.
அவரது இரக்க சுபாவத்தினாலும், தனது புதுமைகளால்
தான் இறைமகன் என்பதை நிருபிக்கவும் அவர் புதுமைகள் செய்து நோயாளிகளைக் குணமாக்கினார்.
ஆனால் அவர் மனிதனாகப் பிறந்ததன் நோக்கம் அது அல்ல.
நமது பாவங்களுக்குப் பரிகாரம் செய்யவும், பாவங்களை மன்னிக்கவுமே அவர் உலகுக்கு வந்தார்.
உலகம் முடியும் மட்டும் நிரந்தரமாக நம்முடன் வாழ திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
இந்த இரண்டு நோக்கங்களுக்காகத்தான் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.
பாவ மன்னிப்பும், திவ்ய நற்கருணையும் இல்லை என்றால் கிறித்தவம் இல்லை.
ஆனால் நமது பிரிவினை சகோதரர்கள் இந்த இரண்டையும் பற்றி அக்கறைப் படுவதில்லை.
அவர்களுடைய வழிபாடுகளில் பாவ சங்கீர்த்தனமும், திருப்பலியும் இல்லை.
பைபிள் மட்டும் போதும் என்பவர்கள் பைபிளை ஒழுங்காக வாசிப்பதில்லை.
இயேசு உயிர்த்தெழுந்த பின் தனது சீடர்களுக்குக் காட்சி கொடுத்தபோது,
அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.
இயேசுவின் இந்த வார்த்தைகள் இரண்டு மறை உண்மைகளை நமக்குத் தெளிவு படுத்துகின்றன.
1. பரிசுத்த தம திரித்துவத்தில் மூன்று ஆட்களும் ஒருவருள் ஒருவர் இருக்கின்றனர்
மகன் தந்தையுள்ளும் தந்தை மகனுள்ளும் இருப்பது போல,
மகன் தூய ஆவியுள்ளும், தூய ஆவி மகனுள்ளும் இருக்கின்றனர்.
தூய ஆவி இயேசுவுக்குள் இருந்ததால்தான், இயேசு சீடர்கள் மீது ஊதி,
"தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்." என்றார்.
ஏழு தேவத் திரவிய அனுமானங்களிலும் செயல் புரிபவர் தூய ஆவியே.
நாம் திரு முழுக்கு பெற்றபோது தூய ஆவி நம்மீது இறங்கி வந்ததால்தான் நமது சென்மம் பாவம் மன்னிக்கப்பட்டு நாம் கிறித்தவர்களாக மாறினோம்.
உறுதிப் பூசுதலின் தூய ஆவி இறங்கி வந்ததால்தான் நாம் விசுவாசத்தில் உறுதியானோம்.
பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது தூய ஆவி இறங்கி வருவதால் தான் நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
ஆனால் தூய ஆவி தனியாக வருவதில்லை.
மூவரும் ஒருவருள் ஒருவர் இருப்பதால் பரிசுத்த தம திரித்துவ இறைவனே இறங்கி வருகிறார்.
குருவானவர் ஒவ்வொரு தேவத் திரவிய அனுமானத்தையும் தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் தான் நிறைவேற்றுகிறார்.
2. பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன் குருக்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
மன்னிப்பவர் இயேசுதான். குருக்கள் வழியாக மன்னிக்கிறார்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது யார்?
அரசு.
எப்படி கொடுக்கிறது?
வங்கியின் மூலமாக.
விவசாயிகளுக்கு கடன் கொடுப்பது யார்?
அரசு.
எப்படிக் கொடுக்கிறது?
வங்கியின் மூலமாக.
நமது பாவங்களை மன்னிப்பது யார்?
கடவுள்.
யார் மூலமாக?
தன்னுடைய குருக்களின் மூலமாக.
நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை இயேசு தன்னுடைய சீடர்களுக்கு கொடுத்தார்.
அதே அதிகாரம் அவர்களுடைய வாரிசுகளாகிய குருக்களுக்கும் இருக்கிறது.
எப்படி அப்பத்தை தன் உடலாகவும் ரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றும் வல்லமையை இயேசு தன்னுடைய குருக்களோடு பகிர்ந்து கொண்டாரோ
அதே போல் தான் நமது பாவங்களை மன்னிக்கும் வல்லமையையும் தனது குருக்களோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
நாம் பாவ சங்கீர்த்தனம் செய்யும்போது நாம் பாவங்களை அறிக்கையிடுவது இயேசுவிடம்தான்.
குருவானவர் மூலமாக.
பாவங்களுக்கான மனத்தாபத்தோடு அறிக்கையிட வேண்டும்.
குருக்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள்
இயேசு கொடுத்த அதிகாரத்தை மறுப்பவர்கள், அதாவது இயேசுவையே மறுப்பவர்கள்.
இயேசுவை மறுப்பவர்களை எப்படி கிறித்தவர்கள் என்று அழைக்க முடியும்?
கத்தோலிக்கர்களாகிய நாம் திருச்சபையின் பாரம்பரியத்தையும், பைபிளையும் ஏற்றுக் கொள்கிறோம்.
சீடர்கள் போதிக்க ஆரம்பித்த போது அவர்கள் கையில் புதிய ஏற்பாடு இல்லை.
அவர்களுடைய போதனைக்கு ஆதாரம் என்ன?
இயேசுவின் வார்த்தைகள். அதுவரை எழுதப்படாத வார்த்தைகள்.
வாய்மொழி வழியாக நமக்கு வந்து சேர்ந்த இயேசுவின் வார்த்தைகள்தான் பாரம்பரியம்.
பாரம்பரியத்திலிருந்துதான் பைபிள் பிறந்தது.
"வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை."
(அரு. 20:30)
எழுதப்படாத வார்த்தைகளும் இயைசுவின் வார்த்தைகள் தான்.
ஏழு தேவத் திரவிய அனுமானங்களையும் ஏற்படுத்தியவர் இயேசுதான்.
நாம் பாவ சங்கீர்த்தனம் செய்வதும்,
திருப்பலியிலும், திருவிருந்திலும் பங்கெடுப்பதும்
இயேசுவின் போதனைப்படிதான்.
இவற்றை ஏற்க மறுப்பவர்கள் இயேசுவின் போதனைகளை மறுப்பவர்கள் என்று தான் அர்த்தம்.
நமது பங்கு குருவுக்கு நமது பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறது.
அவரை நாம் முழுமையாகப் பயன்படுத்தி பரிசுத்தர்களாக வாழ்வோம்.
நம் நிமித்தம் விண்ணகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment