செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
15.மரியாள், வண்ணக, மண்ணக அரசி.
கபிரியேல் தூதர் அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்ன நிகழ்விலிருந்து அன்னையுடன் செபமாலைப் பயணத்தை ஆரம்பித்தோம்.
"இதோ ஆண்டவருடைய அடிமை" என்ற அன்னையின் நிலையிலிருந்து பயணம் தொடங்கியது.
"அடிமை அரசியான" நிலைக்கு வந்திருக்கிறோம்.
"தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். "
(லூக்கா நற்செய்தி 14:11)
இது இயேசுவின் வாக்கு.
தாழ்ச்சி புண்ணியங்களின் அரசி.
Humility is the queen of all virtues.
"அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று வாழ்த்திய கபிரியேல் தூதரிடம்,
"இதோ ஆண்டவருடைய அடிமை.'' என்று கூறியவள் அன்னை மரியாள்.
மனிதர்களில் இறைவன் அருளால் நிறப்பப்பட்டவள் மரியாள் மட்டுமே.
அருளால் நிறப்பப்பட்டிருப்பது ஆன்மீகத்தில் உச்சக்கட்டம்.
உச்சக்கட்டத்தில் இருப்பவள் தன்னை தன் உதிரத்தில் மனித உரு எடுக்கவிருக்கும் ஆண்டவரின் அடிமை என்கிறாள்.
சமூகத்தில் அடிமையாய் இருப்பதுதான் அடிமட்ட நிலை.
அடிமைக்கு சுய உரிமை இம்மியளவும் இல்லை.
இறைவனின் தாய் தன்னை அவருடைய அடிமை என்கிறாள்.
மரியாள் ஒவ்வொரு வினாடியும் தன் மகனுக்காக மட்டும் வாழ்ந்தாள்.
இறைமகன் மனுமகனாக அவளிடமிருந்து பிறந்தது தனது பாடுகளின் மூலம் உலகை மீட்கவே என்பது அவளுக்குத் தெரியும்.
அவள் கோவிலில் வளரும்போதே வேதாகமம் கற்றவள்.
இயேசு பிறந்த 40 வது நாளே
"உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்" என்று சிமியோன் சொன்னதைக் கேட்டவள்.
தன் மகன் கடவுள் என்று தெரிந்தும் அவரை ஏரோதுவிடமிருந்து காப்பாற்ற கபிரியேல் தூதர் சொன்னவுடனே மறு கேள்வி கேட்காமல் கீழ்ப்படிந்தவள்.
அவளது வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை இறைவன் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தவள்.
"தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்." என்று சொன்ன இயேசு
அடிமை நிலை வரைத் தன்னைத் தாழ்த்திய தன் அன் அன்னையை
விண்ணக மண்ணக அரசி ஆக்கியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
அடிமையாகத் தன்னைத் தாழ்த்தியவள் அரசியாக உயர்த்தப் பட்டாள்.
இறை மகன் இயேசு
தான் உலகில் வாழ்ந்த 33 ஆண்டுகளில் 30 ஆண்டுகள் தன் அன்னைக்குக் கீழ்ப்படிந்து வாழ்ந்தார்.
கீழ்ப்படிந்து என்றால் சித்தத்துக்குக் கட்டுப் பட்டு என்று பொருள்.
"என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்." (அரு. 6:38)
"தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்" . (லூக்கா.22:42)
என்ற இயேசுவின் வார்த்தைகள் இதைப் புரிய வைக்கும்.
.இயேசு தாய்க்குப் பணிந்து வாழ்ந்தார்.
மரியாள் மகன் விருப்பப்படி வாழ்ந்தார்.
இயேசு திருக்குடும்பத்தில் வாழும் போதே யோசேப்பு மரிக்க வேண்டும் என்பது இறைவன் திட்டம்.
மரியாள் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டாள்.
இயேசு அரசர், ஆனால் அவரது அரசு இவ்வுலகலச் சார்ந்தது அல்ல.
மரியாள் விண்ணக, மண்ணக அரசி, ஆன்மீக ரீதியாக.
பொருளை ஆள்பவர்கள் இவ்வுலக அரசர்கள்.
இயேசுவும், அவரது அன்னையும் அருளால் ஆள்பவர்கள்.
நமது தமிழ் இலக்கியத்தில் புலவர்கள் மன்னர் புகழ் பாடி பொருளைப் பரிசாகப் பெற்றார்கள்.
நாமும் விண்ணக அரசியின் புகழ் பாடுவோம், செபமாலை மூலமாக.
அருளால் நிறைந்த நம் அரசி தன் மகனிடம் பரிந்து பேசி, நமது ஆன்மீக வாழ்வுக்குத் தேவையான அருள் வரங்களைப் பெற்றுத் தருவாள்.
செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணித்தோம்.
ஆரம்பத்தில் அன்னை அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்தாள்.
இனி அரசியாக நம்மை நித்திய காலம் ஆள்வாள்.
நாம் அனைவரும் விண்ணக அரசியின் மக்கள்.
'வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்."
(திருவெளிப்பாடு 12:1)
என்ற இறை வாக்கு நம் அன்னையைப் பற்றியதுதான்.
"அருள் நிறைந்த மரியே வாழ்க. இறைவனின் தாயே வாழ்க.
எங்களையும் உங்கள் அரசில் சேர்த்துக் கொள்ளுங்கள், நித்திய காலமும்."
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம்.
நாம் விண்ணக அரசியின் மக்கள், அரச குடும்பத்தினர்.
ஆனால் அன்னையைப் போல நாமும் ஆண்டவரின் அடிமைகளாக வாழ்ந்தால்தான் அரச குடும்பத்தினராக நிலை வாழ்வு வாழ முடியும்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment