Sunday, May 11, 2025

"திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்." (அரு.10 :10)



"திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்." (அரு.10 :10)

"நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்." (10:11)

இயேசு நமது ஆயன், நாம் அவரது ஆடுகள்.

நமக்காகத் தனது உயிரைக் கொடுத்தவர்.

நமக்கு மண்ணில் வளரும் புல்பூண்டுகளை அல்ல, தனது உடலையே உணவாகத் தந்து நம்மை வளர்த்து வருபவர்.

கத்தோலிக்கத் திருச்சபை தான் இயேசுவின் மந்தை.

நாமெல்லாம் அதன் ஆடுகள்.

சிறு மந்தையாக (லூக்.12:32) ஆரம்பிக்கப் பட்ட மந்தை இன்று கோடிக்கணக்கான ஆடுகளைக் கொண்ட தந்தையாக வளர்ந்திருக்கிறது.

"வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர்."(10:2)

மந்தைக்கு வாயில் ஒன்றுதான் இருக்கும்.

கத்தோலிக்கத் திருச்சபையாகிய மந்தைக்கு வாயில் எது?

"நானே வழி."(14:6)

"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்."(10:1)

 இயேசு உயிர்த்த பின் திபேரியக் கடல் அருகே தம் சீடருக்குத் தோன்றிய போது

 அவர்களிடம், "உணவருந்த வாருங்கள்" என்றார். 

அவர்கள் அருந்த அவர் கொடுத்தது நற்கருணை உணவு.

"இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்."(21:13)

உண்டபின் இயேசு இராயப்பரைப் பார்த்து,

"யோவான் மகன் சீமோனே,  என் ஆட்டுக்குட்டிகளை பேணி வளர்,
என் ஆடுகளை மேய், என் ஆடுகளைப் பேணி வளர் " என்று கூறினார்.

வாயில் ஆகிய இயேசுவின் மூலம் 
ஆட்டுக்குட்டிகளையும்
ஆடுகளையும் கவனிக்க கட்டளை பெற்றவர் இராயப்பர்.

ஆட்டுக்குட்டிகள் சாதாரண விசுவாசிகளாகிய நம்மைக் குறிக்கும்.

ஆடுகள் நம்மைக் கவனிக்கும் குருக்களைக் குறிக்கும்.

அடுத்த ஆடுகள் குருக்களைக் 
கவனிக்கும் ஆயர்களைக் குறிக்கும்.

இராயப்பர் அனைவரையும் கவனிக்கும் பாப்பரசர்.

இயேசுவின் மந்தையாகிய கத்தோலிக்கத் திருச்சபையின் முதல் பாப்பரசர் இராயப்பர்.

14ஆம் சிங்கராயர் 267வது பாப்பரசர்.

வாயிலாகிய இயேசுவின் வழி வந்த பாப்பரசரும், அவரது ஆளுகையின் கீழ் உள்ளவர்களும்தான் இயேவுக்குச் சொந்தமான ஆட்டு மந்தையைச் சேர்ந்தவர்கள்.

மந்தை தங்கும் கொட்டிலின் வழி இயேசு, பூமியில் அவரால் நியமிக்கப்பட்டிருக்கும் பாப்பரசர்.

அந்த வழியே நம்மைப் பார்க்க வருபவர்கள் நமது நண்பர்கள்.

வழியே வராமல் சுவர் ஏறிக் குதித்து வருபவர்கள் திருடர்கள்.

"நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர்."(10:1)

திருடர்களுடைய வேலை ஆடுகளைத் திருடுவதுதான்.

ஏரி மீன்களின் இருப்பிடம். ஏரிக்கு வெளியே வாழ்பவர்கள் மீன்களைத் திருடுவதற்கு மண்புழுவைப் பயன்படுத்துவார்கள்.

நம்மைத் திருட வருபவர்கள் ஆசை வார்த்தைகளையும் பொய்யான வாக்குறுதிகளை 
அள்ளி வீசுவார்கள்.

"எங்கள் மந்தைதான் இயேசுவின் உண்மையான மந்தை.

எங்களிடம் வந்து விட்டால் வாழ்க்கை இன்ப மயமாக மாறிவிடும்.

கடன் பிரச்சினைகளே இருக்காது.

நோய் நொடிகளே வராது.

நீங்கள் கொடுக்கும் காணிக்கை பன்மடங்காகத் திரும்பி வரும்.

செல்வச் செழிப்போடு வாழலாம்"
என்று வாக்குறுதி கொடுப்பார்கள்.

உண்மையில் இயேசு,

"என்னைப் பின் பற்றுபவர்களுக்கு துன்பங்களே வராது, கடன் பிரச்சினைகளே இருக்காது, வாழ்க்கை இன்ப மயமாக இருக்கும்" என்று ஒருபோதும் வாக்குறுதி கொடுக்கவேயில்லை.

"தன் சிலுவையைச் சுமக்காமல் என் சீடனாக இருக்க முடியாது" என்று தான் கூறியிருக்கிறார்.

அவரை அதிகமாக நேசிப்பவர்களுக்குப் பரிசாகச் சிலுவைகளைத்தான் கொடுத்திருக்கிறார்.

விண்ணக வாழ்வுதான் பேரின்ப வாழ்வு.

துன்பங்களில் ஆறுதல் வேண்டுமா? நற்கருணை நாதரைத் தேடிப் போவோம்.

வழியே வராதவர்களோடு சென்று விடக் கூடாது.

இன்று நம்மில் அநேகர் எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை.

காலையில் நமது ஆலயத்தில் திருப்பலி கண்டு, திரு விருந்து அருந்திவிட்டு, மாலையில் செபக்கூட்டம் என்ற பெயரில் பிரிவினை சபையார் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்று விடுவார்கள்.

ஏன் என்று கேட்டால் அங்கேயும் இயேசுதான் இருக்கிறார் என்று கூறி விடுவார்கள்.

"அதற்கு இயேசு கூறியது; "உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக் கொண்டு வந்து, "நானே மெசியா" என்று சொல்லிப் பலரை நெறி தவறச் செய்வர். 
(மத்தேயு .24:4,5)

கவனமாக இருப்போம்.

இயேசு காட்டிய வழியே மட்டும் நடப்போம்.

அவர் பெயரால் அவர் நியமித்திருக்கிற பாப்பரசரும், ஆயர்களும், குருக்களும் இருக்கிறார்கள்.

அவர்கள் காட்டும் வழியே இயேசுவின் வழி.

அதை உறுதியாகப் பற்றிக் கொள்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment