Thursday, May 15, 2025

"தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். (அரு.14:5)



"தோமா அவரிடம், "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" என்றார். 
(அரு.14:5)

தோமாவின் இந்த வார்த்தைகள் எனது வகுப்பில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளை ஞாபகப்படுத்துகிறது.

வருடம் முழுவதும் பாடம் நடத்தி, விடுமுறை நாட்களிலும் Special class வைத்து தேர்வுக்குத் தயாரித்த பின் இறுதித் தேர்வுக்கு முந்திய நாள், 

"சார், தேர்வுக்கு உறுதியாக வரக்கூடிய கேள்விகளை மட்டும் சொல்லுங்க" என்பார்கள்.

அதேபோல இயேசு சீடர்களை மூன்று ஆண்டுகள் இரவும் பகலும் கூடவே வைத்திருந்து பயிற்சி கொடுத்திருந்தும்

அவர் மரித்து விண்ணகத் தந்தையிடம் செல்வதற்கு முந்திய நாள் வியாழக்கிழமை இரவு

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 

நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்" . 
(அரு.14:3,4)
என்று சொன்ன போது 

தோமையார் 

 "ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?" 
என்றார்.

வேடிக்கையாக இல்லை!

ஆனால் ஆண்டவருக்குக் கோபம் வரவில்லை.

இயேசு ஏற்கனவே பல முறை சொன்னதை திரும்பவும் இப்போது அமைதியாக சொல்கிறார்,
"வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 


"நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்" என்றார். 
(14:6,7)


நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" 
என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். 
(அரு. 10:30)

ஆனால் அதை மறந்து  பிலிப்பு, அவரிடம், "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்" என்றார். 

இயேசு மறுமொழியாக

 "பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, "தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று நீ எப்படிக் கேட்கலாம்? 

நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே."
(14:8,9,10)

இயேசு செய்த புதுமைகளிலே மிகப்பெரிய புதுமை 

அவரது வாழ்வின் இறுதிவரை மக்குகளாகவும், பயந்தாங்கொள்ளிகளாகவும் இருந்த சீடர்களைக் கொண்டுதான் 

தனது நற்செய்தியை உலகின் கடைசி எல்கை வரை பரப்பினார்!

அன்று முதல் இன்று வரை திருச்சபை வளர்ந்து கொண்டிருக்கிறது என்றால் 

அதை ஆள்கின்ற பாப்பரசர், ஆயர்கள், குருக்கள் ஆகியோரின் திறமையினால் அல்ல,

இயேசு அனுப்பிய தூய ஆவியின் வல்லமையால் தான்.

இயேசுவும் தூய ஆவியும் ஒரே கடவுள் தான்.

ஒவ்வொரு ஆலயத்திலும்  திவ்ய நற்கருணை பேழையில் ஆண்டவர் அமைதியாக இருப்பது போல் தெரிகிறது. 

ஆனால் குருக்களின் உழைப்புக்குப் பலன் கொடுப்பவர் அவர்தான்.

மறைந்த போப் பிரான்சிசின் திறமையைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறோம்.

அவரது திறமைக்கு உயிர் கொடுத்தவர் திரி ஏக கடவுள் தான்,

தந்தையும், , நற்கருணை ஆண்டவரும், தூய ஆவியும்தான்.

இன்றைய புதுத் தந்தை பதினான்காம் சிங்கராயரைத் தேர்ந்தெடுத்தவரும், இனி அவர் மூலம் திருச்சபையை வழிநடத்தப்  போகிறவரும் 
அதே தமதிரித்துவக் கடவுள்தான்.

நாமும் சொந்த திறமையினால் மீட்படைய முடியாது.

நமக்குள் இருந்து நம்மை வழி நடத்தும் திரி ஏக கடவுளின் அருளால் தான் மீட்புப் பெறுவோம்.

இயேசு புவிக்கு வந்தது விண்ணகத் தந்தையிடமிருந்து தான்.

போயிருப்பதும் அங்கேதான்.

நாம் போக வேண்டியதும் அங்கேதான்.

நற்கருணைப் பேழையில் தங்கியிருப்பதும் விண்ணகம் சென்று விட்ட அதே இயேசு தான்.

இப்போது கடைசி பெஞ்ச் மாணவர் தோமையாரைப் போல கேட்பார்,

"அதெப்படி சார் ஒரே இயேசு ஒரே நேரத்தில் விண்ணகத்திலும், பூமியிலும் இருக்க முடியும்?"


அவர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விண்ணகவாசிகள் இடத்துக்கும், நேரத்துக்கும் அப்பாற்பட்டவர்கள்.

இயேசு விண்ணக வாசி.

ஆனால் திவ்ய நற்கருணை வைக்க இடம் தேவைப்படுகிறது,
அது எப்படி?

திவ்ய நற்கருணையில் அப்ப, ரசக் குணங்களில் இயேசு இருக்கிறார்.

அப்பத்துக்கும், ரசத்துக்கும் நிறம், ருசி, இடத்தில் இருத்தல், அளவு போன்ற குணங்கள் உண்டு. அவை Accidents, வெளியே தெரியும் குணங்கள்.

திருப்பலியில் குருவானவர் அப்பத்தைக் கையில் எடுத்து,

"இது என் உடல்" என்று சொல்லும்போது 

அப்பத்தின் உட்பொருள் (Substance) இயேசுவின் உடலாக மாறி விடுகிறது.

அப்பத்தின் வெளிக் குணங்கள் அப்படியே இருக்கும், ஆனால் அதன் உட்பொருள் இயேசுவின் உடலாக மாறி விடுவதால் 

அது நமது கண்ணுக்கு அப்பம் போல் தெரியும், ஆனால் அது அப்பம் அல்ல, இயேசுவின் உடல்.

நாம் நாவில் வாங்குவது அப்பத்தை அல்ல, இயேசுவின் உடலை.

அதேபோல் குருவானவர் ரசத்தைக் கையில் எடுத்து,

"இது என் இரத்தம்" என்று சொல்லும் போது 

ரசம் இயேசுவின் இரத்தமாக மாறிவிடுகிறது.

நமது பார்வைக்கு ரசம் போல் தெரியும், ரசத்தின் ருசி இருக்கும், ஆனால் அது ரசம் அல்ல, இயேசுவின் இரத்தம்.

திவ்ய நற்கருணை வாங்கும் போது கடவுளுக்குச் செய்ய வேண்டிய ஆராதனை உணர்வோடு வாங்க வேண்டும்.

ஏதோ ஆரஞ்சு வில்லையை வாங்குவது போல கையில் வாங்கி வாயில் போடுவது நாம் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதை.

இயேசுவின் முன் முழங்காலில் இருந்து நாவில் வாங்குவோம்.

இயேசு நற்கருணைப் பேழையில் தங்கியிருப்பது நம்மை விண்ணகத்துக்கு அழைத்துச் செல்வதற்காகத்தான்.

"நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். (14:3)

நான் போகுமிடத்துக்கு வழி நானே.''
 
திருப்பலியிலும், 
திருவிருந்திலும் கலந்து கொள்வதன் மூலம் இயேசு வழியே விண்ணக வாழ்வுக்குள் நுழைவோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment