Sunday, April 20, 2025

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.

செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.

1. கபிரியேல் தூதர் கொண்டு வந்த இறைச் செய்தி.


ஜோக்கிமும் அன்னம்மாளும் முதிர்ந்த வயதில் பெற்ற தங்கள் மகள் மரியாளை இறைப் பணிக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

மூன்று வயது முதல் மரியாள் கோவிலில் இறை பக்தியில் வளர்கிறாள்.

பன்னிரண்டு வயது வரை கோவிலில் வளர்கிறாள்.

சிறு வயதிலேயே தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறாள்.

பன்னிரண்டு வயது ஆன பெண்களைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்பது கோவில் விதி.

மரியாள் தனது கற்பை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்ட படியால் 

அதற்குப் பங்கம்‌ ஏற்படுத்தாத மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்பதற்காக

கோவில் குரு தூய ஆவியின் ஏவுதலால் 

மனைவியை இழந்த விதவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவிலுக்கு வர அழைப்பு விடுக்கிறார்.

மற்றவர்களோடு விதவரான யோசேப்பும் கோவிலுக்கு வருகிறார்.

ஒவ்வொருவர் கையிலும் ஒரு கோல் கொடுக்கப் படுகிறது.

யோசேப்பின் கோல் பூத்ததுமன்றி, அதிலிருந்து ஒரு புறா வெளியேறி அவர் தலையில் அமர்கிறது.

தூய ஆவியானவர் யோசேப்பைக் கன்னிமரியின் கணவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்.

மரியாளின் கற்புக்குப் பாதுகாவலாக இருப்பதாக யோசேப்பு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் 

இருவரும் திருமண ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

யோசேப்பு வேலை விடயமாக வெளியூர் சென்றிருந்த போது 

மரியாள் வீட்டில் செபித்துக் கொண்டிருந்த போது கபிரியேல் தூதர் அவருக்குக் காட்சி கொடுக்கிறார்.

"அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்கிறார்.

இத்தகைய வாழ்த்தை எதிர்பாராத மரியாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இறைத் தூதர் உன்னத கடவுளின் மகன் அவள் வயிற்றில் மனித உரு எடுப்பார் என்ற இறைச் செய்தியை அவளுக்கு அறிவிக்கிறார்.

 மரியாள் வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்கிறார். 

வானதூதர் அவரிடம்,

"கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை. 

பரிசுத்த ஆவியின் வல்லமையால் இறைமகனை மனுமகனாக  நீர் கருத்தரிப்பீர்.

கருவுற இயலாதவர் என்று கருதப்பட்ட எலிசபெத் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார்.

அவருக்கு இது ஆறாம் மாதம்."
என்கிறார்.

இறைப்பணிக்காகத் தன்னைச் சிறு வயது முதலே அர்ப்பணித்து விட்ட மரியாள் 

அவள் கருத்தரிக்கவிருப்பது இறைவனின் சித்தம் என்று அறிந்தவுடன்,

 "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்கிறார்.

அவள் ஏற்றுக் கொண்ட வினாடியில் இறைமகன் மனுமகனாக உரு எடுக்கிறார்.

 நாம் அன்னை மரியாளை நமது தாயாக ஏற்று வாழ்பவர்கள்.

நாமும் இறைச் பணிக்கு நம்மையே அர்ப்பணித்து வாழ்வோம்.

லூர்து செல்வம்.

No comments:

Post a Comment