செபமாலை செபித்துக் கொண்டே அன்னையோடு பயணிப்போம்.
(தொடர்ச்சி)
11.இயேசு மரித்த மூன்றாம் நாள் உயிர்க்கிறார்.
வெள்ளிக்கிழமை மாலை மூன்று மணிக்கு மரித்து, அடக்கம் செய்யப் பட்ட இயேசு
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிர்த்து, முதலில் தனது தாய்க்குக் காட்சி அளிக்கிறார்.
இது பைபிளில் எழுதப்படவில்லை.
ஆனால் இயேசுவின் மீது முழுமையான விசுவாசம் கொண்டிருந்த அன்னை மரியாள் காலையில் மற்ற பெண்களுடன் கல்லறைக்கு வராததிலிருந்தே இதைத் தெரிந்து கொள்ளலாம்.
அவருடைய சீடர்கள் கூட அவர் உயிர்ப்பார் என்பதை விசுவசிக்கவில்லை.
மகதலா மரியாளும், அன்னை மரியாளின் தங்கை மரியாளும், சலோமி மரியாளும் இயேசு உயிர்ப்பார் என்பதைப் பற்றி நினைக்காமல்
இயேசுவின் உடலில் பூசுவதற்காக நருமணப் பொருட்கள் வாங்கிக் கொண்டு கல்லறைக்கு வருகின்றனர்.
அவர்களுக்கு இயேசு காட்சி தருகிறார்.
மகதலா மரியா சீடரிடம் சென்று, "நான் ஆண்டவரைக் கண்டேன்" என்றார்; தம்மிடம் இயேசு கூறியவற்றையும் அவர்களிடம் சொன்னார்.
(அரு. 20:18)
இயேசு உயிர்த்த நற் செய்தியை அவள் அப்போஸ்தலர்களுக்கு அறிவித்ததால்
அவள் அப்போஸ்தலர்களின் அப்போஸ்தலி என்று அழைக்கப் படுகிறாள்.
எம்மாவூஸ் நகருக்குச் சென்ற சீடர்களுக்குக் காட்சி கொடுத்ததோடு அவர்களுக்குத் திவ்ய நற்கருணையும் கொடுக்கிறார்.
அதன்பின் சீடர்களுக்கும் பல முறை காட்சி தருகிறார்.
ஒவ்வொரு முறை காட்சி தரும் போதும் "உங்களுக்குச் சமாதானம் உண்டாகுக" என்று வாழ்த்துகிறார்.
திபேரியாக் கடல் அருகே சீடர்களுக்குத் தோன்றியபோது
இராயப்பரை நோக்கி,
"எனது ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்."
"என் ஆடுகளை மேய்."
''என் ஆடுகளைப் பேணி வளர்"
என்று கூறியதன் மூலம் இராயப்பர்தான் திருச்சபையின் தலைவர் என்பதை உறுதி செய்கிறார்.
இயேசு உயிர்த்தது போல நம்மையும் உலக இறுதியில் உயிர்த்தெழச் செய்வார் என்பதை உறுதியாக நம்புவோம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment