Saturday, April 19, 2025

இயேசு உயிர்த்த பின்னும் எதற்காகத் தவக் காலம்?

இயேசு உயிர்த்த பின்னும் எதற்காகத் தவக் காலம்?

"தாத்தா, ஒரு சந்தேகம்."

"'இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாளில் விடியுமுன்பே என்ன சந்தேகம்?"

"சந்தேகம் எப்போ வேண்டுமானாலும் வரும். இப்போ பதில் சொல்லுங்க."

"'கேட்டாத்தானே சொல்ல முடியும்!"

"தாத்தா, இயேசு இப்போது எங்கு இருக்கிறார்?"

"'மோட்சத்தில் இருக்கிறார்."

"எப்படி இருக்கிறார்?"

'"மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறார்."

"ஒரு திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசும் போது மகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?
அல்லது, அவர்கள் 
சிறுவர்களாக இருக்கும் போது பட்ட கட்டங்களைச் சொல்லி அழ வேண்டுமா?"

"'நேரடியாகச் சொல்ல வந்ததைச் சொல்லு."

"இயேசு மோட்சத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறார். இனிமேல் அவரால் துன்பப்பட முடியாது.

அவருக்கு விழா எடுக்கும் நாம் நேரடியாக அவரது மகிழ்ச்சியில் பங்கேற்க வேண்டியது தானே, 

எதற்காக நாற்பது நாட்கள் அவர் 2025 ஆண்டுகளுக்கு முன்பு பட்ட பாடுகளை நினைத்து அழுதோம்?"

"'கடவுளைப் பற்றிய அடிப்படை உண்மைத் தெரியாததால் இந்த கேள்வியைக் கேட்கிறாய்."

"என்ன உண்மை?"

"'கடவுள் எப்படிப் பட்டவர்?"

"சகல நன்மைத்தனங்களையும் அளவில்லாத விதமாய்க் கொண்டவர்.

துவக்கமும் முடிவும் இல்லாதவர்.

அவருடைய பண்புகளில் அளவில்லாதவர்.

எப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியோடு வாழ்பவர்."

"' அவருடைய மகிழ்ச்சிக்கு யார் காரணம்?"

"அவர்தான் ஆதி காரணர். அவருக்கு யாரும் காரணமாய் இருக்க முடியாது. தன்னிலே மகிழ்ச்சியானவர்."

"'அவருடைய மகிழ்ச்சியைக் கூட்ட முடியுமா?"

"அளவில்லாததை எப்படி, தாத்தா, கூட்ட முடியும்?"

'"அவர் எதற்காக மனிதனைப் படைத்தார்?"

"அவரது அன்பைப் பகிர்ந்து கொள்வதற்காக."

"'அன்பைப் பகிர்ந்து கொள்ளும் போது அது குறையுமா?"

"எப்படி, தாத்தா, குறையும்? அளவில்லாததைக் கூட்டவும் முடியாது, குறைக்கவும் முடியாது."

'"அப்படியானால் அவரது மகிழ்ச்சிக்காக மனிதனைப் படைக்கவில்லை. மனிதன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவனைப் படைத்தார்."

"அதாவது மனிதனைப் படைத்ததால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை. சரியா?"

"'Super சரி. நீ ஒரு பொருளை உண்டாக்கினால் அது உனக்குப் பயன்படும். ஆனால் கடவுள் நம்மைப் படைத்ததால் அவருக்கு ஒரு பயனும் இல்லை."

"அதாவது நாம் இல்லாவிட்டாலும் கடவுள் வாழ்வார். 

ஆனால் அவர் உதவி இல்லாமல் நம்மால் வாழ முடியாது."

"'இறை மகன் ஏன் மனிதனாகப் பிறந்தார்?"

"நமக்காக. நம்மை மீட்பதற்காக. 
அவர் மனிதனாகப் பிறந்ததால் அவருக்கு எந்த ஆதாயமும் இல்லை."

"'மனிதன் பாவம் செய்ததால் கடவுளுக்கு என்ன நட்டம்?"

"அவருக்கு எந்த நட்டமும் இல்லை. பாவம் செய்தவனுக்குதான் நட்டம்."

"'இறை மகன் மனிதனாகப் பிறந்து, பாடுகள் பட்டு, சிலுவையில் அறையப்பட்டு மரித்ததால் யாருக்கு ஆதாயம்?"

"பாவம் செய்த நமக்குதான் ஆதாயம். கடவுளுக்கு எந்த ஆதாயமும் இல்லை.''

"'அதாவது?"

"இயேசுவின் அன்பு தன்னலம் அற்ற அன்பு. நம் மீது அவர் கொண்ட அன்பின் காரணமாகத்தான் அவர் பாடுகள் பட்டு மரித்தார்."

"' அம்மா சமைத்த உணவினால் பயனடைந்து யார்?"

"சாப்பிடும் பிள்ளைகள் தான்.
அதாவது, இயேசு பட்ட பாடுகளால் பயனடைவது அவருடைய பிள்ளைகளாகிய நாம் தான்."

"'இயேசுவின் பாடுகளைத் தியானிப்பதால் பயனடைவது?"

"நாம் தான்."

"'எப்படிப் பயனடைகிறோம்?"

"நமக்காக அவர் பட்ட பாடுகளைத் தியானிப்பதால் அவர் மீது நமது அன்பு வளரும். 

நமது பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்போம்.

 மன்னிப்புப் பெறுவதால் நமது ஆன்மா பரிசுத்தமாகும்.

ஆன்மீகத்தில் வளர்வோம்."

"'இப்போ சொல்லு, இயேசுவின் பாடுகளைப்பற்றி எப்போது தியானிக்கலாம்?"

"எப்போது வேண்டுமானாலும் தியானிக்கலாம். ஆண்டு முழுவதுமே தியானிக்கலாம்."

"'அப்படியானால் எதற்காகத் தபசு காலம்?"

"மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனாலும் பள்ளிக்கூடத்தில் அதற்கென்று நேரம் ஒதுக்குகிறார்கள். 

ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேறு வேலை செய்யாமல் படிக்க வேண்டும். 

ஆனால் அப்போது மட்டும் படிக்க வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்க வேண்டும்.

அதேபோல நாம் ஆண்டு முழுவதும் பாடுகளைப் பற்றித் தியானிக்கலாம்.

தபசு காலத்தில் கட்டாயம் தியானிக்க வேண்டும்." 

"'இப்போ சொல்லு. நாம் பாடுகளைத் தியானித்து, தவம் செய்வதால் பயன் அடைவது நாமா? கடவுளா?"

"தபசு காலத்தில் நாம் பாடுகளைத் தியானிக்காவிட்டால் கடவுளுக்கு எந்த நட்டமும் இல்லை. 

தவம் செய்தால் பயன்பெறுவதும் நாம் தான். செய்யாவிட்டால் இழப்பும் நமக்குதான்.

ஆன்மீகத்தில் வளர்வதற்காகவே தபசு காலம்.

ஆனாலும் வாழ்நாள் முழுவதும் ஆன்மீகத்தில் வளர வேண்டும்.

வளர்ந்தால் நிலை வாழ்வைப் பெறுவோம்."

"'சந்தேகம் தீர்ந்ததா?"

"தீர்ந்தது. தவக் காலத்தில் மட்டுமல்ல, ஆண்டு முழுவதுமே தவம் செய்ய வேண்டும்.

நமது தவத்தினால் பயன் பெறுவது நாம் தான்.

இயேசு நமக்காகத்தான் பிறந்தார், வாழ்ந்தார், மரித்தார், உயிர்த்தார்.

நாம் அவருக்காக வாழ்வதும் நமக்காகத்தான்.

நாம் நிலை வாழ்வு வாழ்வதற்காகத்தான்.''

"'ஆனாலும், பேரப்புள்ள, அன்னை மரியாள் வாழ்ந்தது அவளுடைய மகனுக்காக மட்டும்,

அடிமை தனக்காக வாழ முடியாது.

நாமும் அப்படியே வாழ்வோம்,
ஆண்டவருடைய அடிமைகளாக."

லூர்து செல்வம்

No comments:

Post a Comment