Thursday, July 3, 2025

"ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."(மத்தேயு நற்செய்தி 6:6)



"ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்."
(மத்தேயு நற்செய்தி 6:6)

மனம் ஒரு குரங்கு என்பார்கள்.

அது கிளை விட்டு கிளை தாவிக் கொண்டேயிருக்கும்.

நமது மனதைச் சுதந்திரமாக விட்டால் நினைப்புகள் மாறிக் கொண்டேயிருக்கும்.

மனதால் தான் ஆண்டவரைத் தியானிக்க வேண்டும்.

தியானித்துக் கொண்டிருக்கும் போதே சம்பந்தமே இல்லாத ஒரு எண்ணத்தைத் தொற்றிக் கொள்ளும்.

கையில் செபமாலை இருக்கும்.
வாயில் மங்கள வார்த்தை செபம் இருக்கும்.
மனதில் அலுவலக வேலை இருக்கும்.

மனம் கற்பனை வளம் மிக்கது.

கோவிலில் திவ்ய நற்கருணை வாங்கியவன் மனது கசாப்புக் கடையில் இருந்தால் ஆண்டவரின் அருள் எப்படிக் கிடைக்கும்?

சீக்கிரம் போனால் தான் நல்ல கறி கிடைக்கும் என்று எண்ணி ஆண்டவருடனே கசாப்புக் கடைக்கு ஓடுவான்


மனதைக் குரங்கு போல் அலைய விடாமல் ஒரு நிலைப்படுத்த முடிந்தவனால் தான் காரியங்களைச் சாதிக்க முடியும்.

கணிதத் தேர்வு எழுதும்போது கணக்கில் மனதை ஒரு நிலைப்படுத்தா விட்டால் சரியான விடை வராது.

செப வாழ்வின் முக்கியமான பண்பு மனதை ஆண்டவரில் ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

அதில் நம்மைப் பயிற்சிப் படுத்த தான் ஆண்டவர் நம்மைத் தனி அறையில் தனியாகக் கடவுளிடம் பேசச் சொல்கிறார்.

பொது இடத்தில் அதாவது மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் செபிக்க ஆரம்பித்தால் ஐம்புலன்களும் சென்ற இடமெல்லாம் மனமும் செல்லும்.

மனதை கடவுளில் ஒரு நிலைப்படுத்த முடியாது.

ஒரே நேரத்தில் பல விதமான எண்ணங்கள் அலை மோதும்.

பல விதமான எண்ணங்கள் மத்தியில் இறைவனைப் பற்றி தியானிப்பது கடினம்.

அப்படியானால் கோவிலில்?

கோவில் பொது இடம் தானே, நூற்றுக்கணக்கான பேர் ஒரே நேரத்தில் ஒன்று கூடித்தானே திருப்பலியில் கலந்து கொள்கிறோம்.

எப்படி மனதை ஒரு நிலைப்படுத்த முடியும் என்று கேட்கலாம்.

இதற்குப் பதில் கூறுமுன் இதோடு சார்புடைய விடயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக பெரியவர்கள் கூறிய கருத்துக்கள்:

1. கோவிலை, குறிப்பாக பீடத்தை கண்களைக் கவரும் வகையில் அளவுக்கு அதிகமாக அலங்கரிக்கக் கூடாது.

 அலங்கரித்தால் திருப்பலி நிறைவேற்றும் குருவானவர் மீது இருக்க வேண்டிய கவனம் அலங்காரத்தின் மீது சிதறும்.

2. திருப்பலிக்கு வருபவர்கள் கண்ணியமான  (Decent) உடை அணிந்து வர வேண்டும். 

பெண்கள் தலையில் முக்காடு அணிந்து வர வேண்டும்.

மற்றவர்களின் கண்களுக்கு சோதனை கொடுக்கும் உடை அணிந்து வரக் கூடாது.

3. திருப்பலி ஆரம்பிக்கு முன்பு கோவிலுக்குள் வந்து விட வேண்டும். திருப்பலி முடிந்த பின் நம்முள் நற்கருணை ஆண்டவருக்கு நன்றி செலுத்தி விட்டு தான் வெளியேற வேண்டும்.

திருப்பலி நேரத்தில் வருவதும் போவதுமாய் இருந்தால் அது மற்றவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும்.

இப்போது திருப்பலி நேரத்தில் வித்தியாச‌ வித்தியாசமான ஆட்கள் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நாம் எப்படி தனிமையில் மனதை ஒரு நிலைப்படுத்துவது என்ற வினாவுக்கு வருவோம்.

எவ்வளவு கூட்டத்தின் மத்தியிலும் நாம் தனிமையில் இருக்கலாம்.

வீட்டில் தனி அறையில் மனதை ஒரு நிலைப்படுத்திய பயிற்சி கோவிலில் உதவும்.

நமது நினைப்பை ஒட்டித்தான் நமது ஐம்புலன்களும் செயல்படும்.

சைக்கிளில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

9 மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டும்.

மணி 8.50‌ ஆகிவிட்டது. இன்னும் ஒரு கி.மீ தூரம் இருக்கிறது.

சைக்கிளை வேகமாக மிதிப்போம். அக்கம் பக்கம் பார்க்க மாட்டோம். யார் கூப்பிட்டாலும் கேட்க மாட்டோம்.
யார் நிறுத்தினாலும் நிற்க மாட்டோம்.‌நமது ஐம்புலன்களும் பள்ளிக்கூடத்தில் இருக்கும்.

அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் எந்த சூழ்நிலையிலும் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ள நம்மால் முடியும்.

கோவிலில் ஆயிரக் கணக்கான பேர் இருந்தாலும் நமது கண்ணும் கருத்தும் திருப்பலியில் மட்டும் இருந்தால் நமக்கு வேறு ஒன்றும் தெரியாது.

நமது கருத்து எங்கு இருக்கிறதோ அங்கு நாம் இருப்போம்.

சம்பந்தம் இல்லாத சத்தங்கள் கேட்டாலும், பார்வைகள் பட்டாலும் நாம் அவற்றைப் பற்றிக் கவலைப் பட மாட்டோம்.


நாம் இறைவனிடம் வேண்டும் பொழுது நமது உள்ளமாகிய அறைக்குச் சென்று, 

ஐம்புலன்களாகிய கதவை அடைத்துக் கொண்டு, 

மறைவாய் உள்ள நமது தந்தையை நோக்கி வேண்டுவோம்.

நமது உள்ளத்தில் உள்ளதைக் காணும் நமது தந்தையு நமக்குத் தேவையானதை அளிப்பார்.


"மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார்."
(மத்தேயு நற்செய்தி 14:23)

இயேசு எதைச் செய்தாலும் நமக்கு முன் மாதிரியாகச் செய்தார்.

இயேசு கடவுள். மனித சுபாவத்தில் ஒரு இடத்தில் இருந்தாலும்,  தேவ சுபாவத்தில் எங்கும் இருப்பவர்.

24 மணி நேரமும் தந்தையோடு ஒன்றித்து வாழ்பவர். 

தந்தையோடு ஒன்றித்து வாழ்வதுதான் செப வாழ்வு.

ஆகவே அவர் தனிமையைத் தேடிப்  போக வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் நமக்கு முன் மாதிரிகை காண்பிப்பதற்காக ஒவ்வொரு போதனையையும் வாழ்ந்து காண்பித்தார்.

நாமும் தனியாகச் செபித்தாலும்,

நாமும் உலக ஆரவாரங்களுக்கு மத்தியிலும் தனிமையில் இறைவனைச் சந்தித்து, அவரோடு ஒன்றிப்போம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment