"எனவே இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்."
(கலாத்தியர் 2:20)
புனித சின்னப்பரைப் போல செப வாழ்வு வாழ்பவர் யாராக இருந்தாலும் துணிந்து சொல்லலாம்,
"நான் இயேசுவால் நிறைந்திருக்கிறேன். எனது ஒவ்வொரு அணுவிலும் இயேசு வாழ்கிறார்.
எனது உயிரும் அவரே!
உயிர் மூச்சும் அவரே!
உண்மையில் நான் வாழவில்லை, இயேசுவே என்னில் வாழ்கிறார்.
என்னில் வாழ்வதற்காகவே விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்தார்.
என்னில் வாழ்வதற்காகவே நற் செய்தியை அறிவித்தார்.
என்னில் வாழ்வதற்காகவே பாடுகள் பட்டு சிலுவையில் அறையப்பட்டு மரித்தார்.
என்னில் வாழ்வதற்காகவே மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தார்.
என்னில் வாழ்வதற்காகவே திவ்ய நற்கருணையை ஏற்படுத்தினார்.
என்னில் வாழ்வதற்காகவே எனக்குள் உணவாக வருகிறார்.
என்னில் வாழ்வதற்காகவே
என் ஆன்மா முழுவதையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
என்னில் வாழ்வதற்காகவே
இரவும் பகலும் என்னை எதிர் பார்த்து திவ்ய நற்கருணைப் பேழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
என்னில் வாழ்வதற்காகவே
என் உள்ளும் புறமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
பழ வகைகளை விரும்பி சாப்பிடுகிறோம்.
ஏன்?
அவற்றிலுள்ள ருசிக்காக.
இனிப்பு ருசியுள்ள மாம்பழங்களும் இருக்கின்றன, புளிப்பு ருசியுள்ள மாம்பழங்களும் இருக்கின்றன.
நாம் விரும்புவது இனிப்பான மாம்பழங்களை மட்டும் தான்.
ஆக, மாம்பழங்கள் இருவகை, இனிப்பானவை, புளிப்பானவை.
அதேபோல மனிதனர்களும் இருவகை.
இயேசுவால் நிறைந்தவர்கள்.
சாத்தானால் நிறைந்தவர்கள்.
முதல் கையினருள் இயேசு வாழ்கிறார்.
இரண்டாம் கையினருள் சாத்தான் குடியிருக்கிறான்.
மனிதர்களில் யார் வாழ்கிறார் என்பதை அவர்கள் வாழும் விதத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
நம்மைப் பார்ப்பவர்கள் நம்மில் வாழும் இயேசுவைப் பார்க்கும் வகையில் நாம் வாழ வேண்டும்.
மற்றவர்கள் நம்மில் இயேசுவைப் பார்க்க வேண்டும்.
அவர்கள் நம்மில் வாழும் இயேசுவை ஏற்றுக் கொள்ளும் வகையில் நாம் வாழ வேண்டும்.
நம் வழியாக இயேசு மற்றவர்களிடம் செல்லும் வகையில் வாழ வேண்டும்.
புனித சின்னப்பர் அப்படி வாழ்ந்தார்.
இயேசு உலகில் முதன் முதலில் வாழ்ந்தது அன்னை மரியாளின் வயிற்றில்.
அன்னை மரியாள் சாத்தானின் தலையை நசுக்கியவள்.
பாவ மாசற்றவள்.
அவளில் வாழ்ந்தது போல நம்மிலும் வாழ வேண்டும் என்பதற்காகவே இயேசு நம்மிடம் வந்திருக்கிறார்.
நாம் வாழவில்லை, இயேசுதான் நம்மில் வாழ்கிறார்.
நாமும் இயேசுவில், இயேசுவாக வாழ்வோம்.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment