Sunday, July 13, 2025

அடிமை அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம்.



அடிமை  அனுபவிக்கும் பரிபூரண சுதந்திரம்.

இறைவனின் பண்புகளில் ஒன்று 
பரிபூரண சுதந்திரம்.

தன்னுடைய சாயலில் நம்மைப் படைத்த இறைவன் தன்னுடைய பரிபூரண சுதந்திரத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

கடவுளுடைய சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

கடவுளும் அவர் நமக்கு அளித்த சுதந்திரத்தில் குறுக்கிடுவதில்லை.

மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி பாவம் செய்யும்போது கூட கடவுள் அதில் குறுக்கிடுவதில்லை.

மனிதன் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்தி மனம்திரும்ப வேண்டும்.

மனம் திரும்பப் போதுமான அருள் வரங்களைக் கொடுப்பார்.

 அவற்றை ஏற்றுக் கொண்டு மனிதன் சுதந்திரமாக மனம் திரும்ப வேண்டும்.

மோட்ச வாழ்வையோ, நரக வாழ்வையோ தேர்வு செய்ய வேண்டியது மனிதன் தான்.

சுதந்திரம் என்ற வார்த்தைக்கு மனிதன் கொடுக்கும் பொருள் வேறு, கடவுள் கொடுக்கும் பொருள் வேறு.

மனிதன் சுதந்திரமாக வாழ்வது என்றால் தனது விருப்பம் போல் வாழ்வது என்று பொருள் கொள்கிறான்.

அதாவது தான் யாருக்கும் அடிமை இல்லை என்பது மனிதன் கொடுக்கும் பொருள்.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டது என்றால் இந்தியர்கள் தங்கள் விருப்பப்பட்ட அரசைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பொருள்.

கடவுள் கொடுக்கும் பொருள் என்ன?

நாம் சுதந்திர மாக இறைவன் விருப்பப்படி வாழ்வது.

இறைவன் தனது விருப்பப்படி வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மனிதனைப் படைத்தார்.

 எப்படி வாழ வேண்டும் என்று கடவுள் படைத்தாரோ அப்படி வாழ மனிதன் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.

மனிதன் சுதந்திரமாக இறைவன் விருப்பப் படி வாழ்ந்தால் அவன் இறைவனோடு நித்திய பேரின்ப வாழ்வு வாழ்வான்.

சுதந்திரமாக இறைவன் விருப்பத்திற்கு எதிராக வாழ்ந்தால் நித்திய பேரின்ப வாழ்வு கிடைக்காது.

நித்திய பேரின்ப வாழ்வுக்கு மோட்சம் என்று பெயர்.

நித்திய பேரிடர் வாழ்வுக்கு நரகம் என்று பெயர்.

பேரின்பத்துக்கு எதிர்ப் பதம் பேரிடர்.

சிலர் கேள்வி கேட்கிறார்கள்,

கடவுள் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்காமல் பாவமே செய்ய முடியாதபடி படைக்கலாம் அல்லவா?

அவருக்கு அப்படிப் படைக்க விருப்பம் இருந்தால் அப்படிப் படைக்கலாம்.

எப்படி வேண்டுமானாலும் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது.

நம்மைச் சுதந்திரத்தோடு படைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

அவருடைய சுதந்திரமான விருப்பத்தில் யாரும் குறுக்கிட முடியாது.

படைத்தவர் விருப்பப்படி தான் படைக்கப்பட்டவர்கள் நடக்க வேண்டும்.

நம் விருப்பப்படி கடவுள் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

"என்னைப் பின்பற்ற‌ விரும்புகிறவர்கள் தங்கள் சிலுவையைச் சுமந்து கொண்டு வர வேண்டும் '' என்று இயேசு சோல்கிறார்.

சிலுவை என்றால் துன்பம்.

சுதந்திரமாக இன்பத்தைத் தேர்வு செய்வது எளிது, துன்பத்தைத் தேர்வு செய்வது கடினமாயிற்றே என்று கூறுவது காதில் விழுகிறது.

ஒருவன் நடு மத்தியான வெயிலில் ஒரு மணிநேரமாக நிழலே இல்லாத இடத்தில் நின்று கொண்டிருக்கிறான்.

"ஏண்டே வெயிலில் நின்று கொண்டிருக்கிறாய்?"

"12 மணிக்கு வருவதாக காதலி கூறியிருக்கிறாள். அவள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்."

"வெயில்?"

''வெயில் என்ன செய்யும்?"

எங்கே அளவு கடந்த ஆசை இருக்கிறதோ அந்த ஆசையை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டியிருந்தாலும் அது இன்பம் தான்.

அதற்காகப் பட வேண்டிய துன்பமும் இன்பம் தான்.

எந்த துன்பத்தின் மத்தியிலும் இறைவன் விருப்பப்படிதான் வாழ்வது என்று தீர்மானித்து விட்ட ஒருவனுக்கு அதை இன்பகரமாக மாற்ற ஒரே வழி முழுமையாக சரண் அடைந்து விடுவது.

அன்னை மரியாள் அதைத்தான் செய்தாள்.

"இதோ, ஆண்டவருடைய அடிமை."

முழுமையான அடிமையாக வாழ்வதில் தான் முழுமையான சுதந்திரம் அடங்கியிருக்கிறது.

கட்டாயத்தினால் அல்ல, பரிபூரண சுதந்திர உணர்வுடன் இறைவனுடைய அடிமையாக வாழ தன்னை அர்ப்பணித்து விட்டாள்.

இறைவனுடைய விருப்பமே தனது விருப்பம் என்று முழு மனச் சம்மதத்துடன் வாழ்ந்ததால்

அவளது வியாகுலங்கள் கூட ஆன்மீகத்தில் மகிழ்ச்சி தான்.

ஆகவேதான் வியாகுல மாதாவை மகிழ்ச்சி நிறை கன்னிகையே என்று அழைக்கிறோம்.

இயேசு பட்ட அத்தனை பாடுகளையும் அவளும் மனத்தளவில் பட்டாள்.

இயேசு கல் தூணில் கட்டப்பட்டு அடிபட்ட போது அத்தனை அவள் மேல் விழுந்ததாகவே உணர்ந்திருப்பாள்.

இயேசு சிலுவையைச் சுமந்து சென்றபோதும், சிலுவையில் அறையப்பட்ட போதும் இயேசுவுக்கு ஏற்பட்ட வலி மாதாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும் அது மனுக்குலத்தின் மீட்புக்காக அவரே ஏற்றுக் கொண்டவை என்று அவளுக்குத் தெரியும்.

அது மட்டுமல்ல அவர் மூன்றாவது நாள் உயிர்ப்பார் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆகவே பிரசவ வேதனை அனுபவிக்கும் பெண் எப்படி பிறந்து கொண்டிருக்கும் குழந்தையை நினைத்து மகிழ்வாளோ அப்படியே அன்னை மரியாளும் ஆன்மீக மகிழ்ச்சியோடுதான் வேதனையை அனுபவித்திருப்பாள்.

ஆகவே தான் அவளை "மகிழ்ச்சி நிறை கன்னிகையே" என்று அழைக்கிறோம்.

மனித குல மீட்பு மாதாவுக்கு மகிழ்ச்சி.

மாதாவின் மகிழ்ச்சி ஆண்டவரின் அடிமைக்கு உயிர்ப்பினால் அவர் அடையப் போகும் மகிமையால் ஏற்பட்ட ஆன்மீக மகிழ்ச்சி.

இது ஆன்மீக மீட்பின் கண்ணோக்கிலிருந்து பார்ப்பவர்களுக்குப் புரியும்.

மகிழ்ச்சி ஒரு ஆன்மீக பண்பு.

சந்தோசம் ஒரு லௌகீக பண்பு.

ருசியான பிரியாணி சாப்பிட்டால் சந்தோசம் ஏற்படும்.

பாவப் பரிகாரமாக நோன்பு இருந்தால் மகிழ்ச்சி ஏற்படும்.


சினிமா பார்த்தால் சந்தோசம்.

திருப்பலியில் கலந்து கொண்டால் மகிழ்ச்சி.

உடல் ரீதியான துன்பங்களை சிலுவைகளாக ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது ஏற்படுவது ஆன்மீக ரீதியான மகிழ்ச்சி.

அன்னை மரியாள் தன் மகன் பட்ட பாடுகளையும், அதனால் அவள் அடைந்த வேதனையையும் மனிதர் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக தந்தை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்து 
 அடைந்தது மகிழ்ச்சி.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காலத்தில் மக்கள் மைல் கணக்கில் நடந்து மகிழ்ச்சியாகத் திருப்பலிக்குச்‌ சென்றிருக்கிறார்கள்.

இறைப்பணிக்குத் தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக அர்ப்பணித்த சவேரியார், அருளானந்தர் போன்ற வேத போதகர்கள் கட்டப்பட்டு பயணித்து மகிழ்ச்சியாக நற்செய்தியை அறிவித்ததிருக்கிறார்கள்.

ஆண்டவர் திருப்பணிக்குத் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் பரிபூரண சுதந்திரத்தோடு திருப்பணி புரிகிறார்கள்.

நாமும் பரிபூரண சுதந்திரத்தோடு நம்மை இறைப்பணிக்கு அர்ப்பணித்து நிலை வாழ்வு என்ற மகிழ்ச்சியைப் பரிசாகப் பெறுவோம்.

லூர்து செல்வம்

No comments:

Post a Comment