Friday, June 27, 2025

"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."(மத்தேயு நற்செய்தி 8:8)



"நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்."
(மத்தேயு நற்செய்தி 8:8)

நாம் திவ்ய நற்கருணை நாதரை நாவில் உணவாக வாங்குமுன் செய்யும் செபம் இந்த வசனம் தான்.

சிந்தித்துச் சொல்கிறோமா, அல்லது,  வாயினால் மட்டும் சொல்கிறோமா?

நாம் அடிக்கடி சொல்லும் செபங்கள் மனப்பாடமாகி விடுவதால் சொல்ல ஆரம்பித்தவுடன் வாய் மடமடவென்று சொல்லி விடும்,
ஆரம்பக் கல்வி மாணவர்கள் வாய்பாடு சொல்வது போல.

ஒரு சிறுவனிடம் "ஆறெட்டு எத்தனை" என்று கேட்டால்,

அவன், "ஓரெட்டு எட்டு" என்று ஆரம்பிப்பான்.

அது வாய் பாடு!

செபம் உள்ளத்திலிருந்து வர வேண்டும்,  உதட்டிலிருந்து மட்டும் அல்ல.

உள்ளத்திலிருந்து வந்தால் உள்ளம் , "நான் எப்படித் தகுதியற்றவன்?" என்று சிந்திக்கும், தியானிக்கும்.

''இயேசு அளவில்லாத விதமாய் பரிசுத்தமானவர். என்னால் அந்த அளவுக்கு பரிசுத்தமாக முடியாது.

ஆனாலும் இயேசு தனது அளவு கடந்த இரக்கத்தின் காரணமாக, தனது சிலுவை மரணத்தின் மூலம் தகுதி இல்லாத என்னை தகுதியானவனாக ஏற்றுக் கொண்டு என்னிடம் வருகிறார்.

நமது பாவங்களுக்கு நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை அவரே ஏற்றுக் கொண்டு அதற்காக சிலுவையில் மரித்தார்.

தனது தவறான நடத்தையால் பிள்ளை என்ற தகுதியை இழந்த பிள்ளையைத் தாய் தன் அன்பின் காரணமாக பிள்ளையாக ஏற்றுக் கொள்வது போல

தகுதி இல்லாத நம்மைத் தகுதி உள்ளவர்களாக ஏற்றுக் கொள்கிறார்."

தியானத்தின் மூலமாக இந்த உண்மையை அறிந்து கொண்ட நாம் இயேசு ஏற்றுக் கொண்ட தகுதியை இழக்காமல் இருக்க,

அதாவது, பாவம் செய்யாது வாழ முயற்சி செய்வோம்.

அடுத்து நாம் இயேசுவை நினைக்கும் போதெல்லாம் நமது பாவங்களுக்காக மனத்தாபப்படுவோம்.

இயேசுவை நினைக்கும் போதெல்லாம், 

"ஆண்டவரே, உமது மன்னிப்பை பெற நான் தகுதி அற்றவன்.  ஆயினும் உமது இரக்கத்தின் காரணமாக, என்னை மன்னியும். 

தகுதியற்ற என்னை தகுதி உள்ளவனாக மாற்றும்."
என்று வேண்டுவோம்.

திருப்பலியின்போது மட்டுமல்ல வீட்டுக்கு வந்த பின்னும் இயேசுவின் ஞாபகமாகவே இருப்போம். 

நூற்றுவர் தலைவன் இயேசு ஒரு வார்த்தை சொன்னாலே  தன் பையன் குணமாவான் என்று உறுதியாக விசுவசித்தான். 

அந்த விசுவாசம் நம்மிடம் இருக்கிறதா? 

நமது வேண்டுதல் உறுதியாக நிறைவேறும் என்று விசுவசிக்கிறோமா? 

விசுவசித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிறாமல் 
இயேசுவின் விருப்பப்படி வாழ்வதில் அதிக கவனம் செலுத்துவோம். 

நமது விருப்பம் நிறைவேறுவதில் காட்டும் ஆர்வத்தை விட இயேசுவின் விருப்பம் நிறைவேறுவதில் அதிக ஆர்வம் காட்டுவோம்.

நமக்காக வாழாமல் இயேசுவுக்காக வாழ்வோம்.

மனிதன் தான் செய்த பாவத்தினால் இறைவனைத் தந்தை என்று அழைக்கும் தகுதியை இழந்து விட்டான். 

ஆனாலும் இறைவன் தனது அன்பின் மிகுதியால் மனிதனாகப் பிறந்து மனிதன் செய்த பாவத்திற்குப் பரிகாரமாக தன்னைத்தானே பலியாக்கி

பிள்ளை என்று ஏற்றுக்கொள்ளப் பட தகுதியற்ற நம்மை பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டார்.

நாம் பாவத்தை விலக்கி, கிடைத்த தகுதியை தக்க வைத்துக் கொள்வோம். 

லூர்து செல்வம்

No comments:

Post a Comment