"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்."
(அரு.14:23)
இயேசு தனது உலக வாழ்க்கையின் இறுதி நாளுக்கு முந்திய நாள் வியாழக்கிழமை அன்று தனது சீடர்களுக்குக் கூறிய வார்த்தைகள் இவை.
கடவுள் அன்பு மயமானவர்.
அவருடைய சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பு மயமானவைதான்.
அவரது சீடர்களுக்கு அவர் கட்டளைகள் அன்பு மயமானவை.
கட்டளை என்று சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது அரசன், ஊழியர்.
இயேசு அரசர் தான், நாம் ஊழியர் தான், ஆனால் லௌகீகப் பொருளில் அல்ல.
ஆன்மீகத்தில் அரசரும் ஊழியரும் அன்பு என்ற கயிற்றால் பிணைக்கப் பட்டவர்கள்.
அன்னை மரியாள் "இதோ! ஆண்டவருடைய அடிமை." என்று கூறிய வார்த்தைகளுக்கு "ஆண்டவரின் அன்புக்கு முற்றிலும் கட்டுப்பட்டவள்" என்பது தான் பொருள்.
அன்பினால் கட்டுப் பட்டவர்கள் தங்களின் சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அன்போடு இணைந்துவிடுவர்.
அன்பு மயமான கடவுளோடு இணைந்துவிடுவர்.
கடவுள் நினைப்பதை நினைப்பர்.
கடவுள் சொல்வதைச் சொல்வர்.
கடவுள் செய்யச் சொன்னதை மட்டும் செய்வர்.
இத்தகைய அன்பைத் தான் இயேசு தனது சீடர்களிடமிருந்து எதிர் பார்க்கிறார்.
"என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்."
"என்னை நேசிப்பவர்கள் அவர்கள் செய்ய வேண்டும் என்று நான் விரும்புவதை மட்டும் செய்வார்கள்.
என்னுடைய விருப்பம் அவர்களுடைய செயலாக மாறும்."
"என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்."
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" என்றார். (10:30)
"தந்தைக்கும் எனக்கும் ஒரே அன்பு, ஒரே சித்தம்.
ஆகவே என்னோடு அன்பில் ஒன்றித்திருப்பவரகளோடு அவரும் ஒன்றித்திருப்பார்.
நான் இருக்கும் இடத்தில் அவரும் இருப்பார்.
நான் குடியிருக்கும் அன்பு நிறைந்த இருதயத்தில் அவரும் குடியிருப்பார்.
தந்தையும் நானும் அங்கே குடியிருப்போம்."
இயேசு தனது சீடர்களை நேசிக்கிறார் என்ற மறை உண்மையை விளக்கும் போதே
பரிசுத்த தம திரித்துவம் என்ற மறை உண்மையையும் விளக்குகிறார்.
சில வசனங்களுக்குப் பின்
"என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்." (14:26)
தந்தை, மகன், தூய ஆவி.
தந்தையால் அனுப்பப்பட்ட மகனின் போதனைகள் அனைத்தையும் சீடர்கள் புரிந்து கொள்ளும்படி செய்ய,
தந்தை தூய ஆவியை சீடர்களுக்கு அனுப்புவார்.
பெந்தகோஸ்து திருநாளன்று தூய ஆவி சீடர்கள் மீது இறங்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார்.
இதைத் தியானிக்கும் போது மனதில் சில கேள்விகள் எழும்.
தம திரித்துவம், மூன்று ஆட்கள், ஒரு கடவுள்.
மூவரில் மகன் மட்டும் மனிதனாகப் பிறந்தார்.
மகன் முழுமையாகக் கடவுள்.
(Fully God)
ஆகவே கடவுள் மனிதனாகப் பிறந்தார்.
சீடர்களைத் தேர்வு செய்தது கடவுள்.
அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி கொடுத்தது கடவுள்.
ஆனால் தூய ஆவியாகிய கடவுள் பெந்தகோஸ்தே திருநாள் அவர்கள் மீது இறங்கி வருமட்டும் இயேசுவின் போதனைகள் அவர்களுக்கு முழுமையாகப் புரியவில்லை.
மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னதே அவர்களுக்குப் புரியவில்லை.
புரிந்திருந்தால் இயேசுவின் பாடுகளின் போது அவரை விட்டு ஓடிப் போயிருக்க மாட்டார்கள்.
இராயப்பர் இயேசுவை மறுதலித்திருக்க மாட்டார்.
இயேசுவை அடக்கம் செய்தபின் அன்னை மரியாள் அமைதியாக வீட்டில் இருந்தது போல சீடர்களும் அவரை எதிர் பார்த்து ஏதாவது ஒரு வீட்டில் அமைதியாக செபித்துக் கொண்டு இருந்திருப்பார்கள்.
இராயப்பரும் அருளப்பரும் கல்லறைக்கு ஓடிப்போயிருக்க மாட்டார்கள்.
மனதில் எழும் கேள்வி,
தூய ஆவி செய்ததை ஏன் மகன் செய்யவில்லை?
இயேசுவின் பொது வாழ்வின் போது அவருடைய முழுக் கவனமும் மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதிலும்,
மக்களுடைய பாவங்களுக்கு பரிகாரமாகப் பாடுகள் பட்டு மரிப்பதிலும் இருந்தது.
தனது சீடர்களாக
படிப்பறிவு இல்லாத பாமர மக்களைத்தான் தேர்வு செய்தார்.
அவர்கள் ஆன்மீகத்தில் வளரப் போதுமான அருள் வரங்களைக் கொடுத்தாலும் அவர்களுடைய ஆன்மீக வளர்ச்சி சுய முயற்சியால் இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.
தந்தையும் மகனும் ஒரே கடவுளாய் இருப்பது போல
மகனும் தூய ஆவியும் ஒரே கடவுள்தான்.
எப்படி மகனைப் பார்க்கும்போது தந்தையைப் பார்க்கிறோமோ அப்படியே மகனைப் பார்க்கும்போது தூய ஆவியைப் பார்க்கிறோம்.
ஏனெனில் மூவரும் ஒரே கடவுள்.
ஆயினும் தந்தை, மகன், தூய ஆவி மூவரும் வெவ்வேறு ஆட்கள்.
(Three distinct persons)
என்பதை 'நமக்குப்' புரிய வைப்பதற்காகத்தான்
தந்தையால் அனுப்பப்பட்ட மகன்
மீட்புப் பணியையும், திருச்சபையை நிறுவும் பணியையும் தான் செய்து விட்டு,
சீடர்களை உறுதிப்படுத்தி, திருச்சபையை வழி நடத்தும் பணியைத் தூய ஆவிக்கு விட்டு விட்டார்.
ஆனாலும் மூன்று பணிகளையும் செய்வது ஒரே கடவுள் தான்.
தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால் திருமுழுக்குக் கொடுக்கிறோம்.
திருமுழுக்குப் பெறுபவர் மீது இறங்கி வருபவர் தூய ஆவி.
ஆயினும் சென்மப் பாவத்தை மன்னிப்பது கடவுள் தான்,
பரிசுத்த தம திரித்துவக் கடவுள்.
திரு முழுக்கின் போது தனது அன்பை வெளிப்படுத்திய,
நமக்குள் குடிபுகுந்த தந்தை, மகன், தூய ஆவி நம் அனைவரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைப்பாராக.
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment