மேலும் "வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். 
(அரு.1:51)
ஏற்கனவே இயேசுவை அறிந்திருந்த பெத்செய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பு(அரு.1:44) 
கானா ஊரினரான நத்தனியேலை
(அரு.21:2)  
இயேசுவிடம் அழைத்து வந்தார்.
நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,
 "இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார். 
(அரு.1:47)
நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று இயேசுவிடம் கேட்டார். 
இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார். 
அத்தி மரத்தின் அடியில் அமர்ந்து யூதர்கள் பைபிள் வாசிப்பது வழக்கம்.
ஒரு வேளை அவர் பைபிள் வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம்.
அப்போது பிலிப்பு அவரை அழைத்திருந்திருக்கலாம்.
அவர் இருந்த இடத்தை இயேசு சொன்னவுடனே
நத்தனியேல் அவரைப் பார்த்து, "ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார். 
அதற்கு இயேசு, "உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார். 
வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார
இயேசு குறிப்பிட்ட இந்த வார்த்தைகள் யாக்கோபின் கனவை நினைவூட்டுகின்றன.
 யாக்கோபு பெத்தேலில் இருந்தபோது ஒரு கனவு கண்டார்.
 அந்தக் கனவில், தரையிலிருந்து வானம் வரை ஒரு ஏணி நீட்டிக்கப்பட்டிருந்தது. 
அதில் கடவுளின் தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். 
அந்த ஏணியின் உச்சியில் கடவுள் நின்று பேசினார். (தொடக்கநூல் 28:12-13).
யாக்கோபின் கனவில், அந்த ஏணி பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.
 கடவுளின் தூதர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தனர். 
ஆனால், இயேசு கூறிய வார்த்தைகளில், தூதர்கள் "மனுமகன் மீது ஏறி இறங்குவார்கள்".
இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு முக்கியமான மறைப்பொருள் தெளிவாகிறது:
யாக்கோபின் கனவில், ஏணியானது பூமியையும் பரலோகத்தையும் இணைத்தது.
இயேசுவின் காலத்தில், அவரே அந்த ஏணியாக, அதாவது பரலோகத்தையும் பூமியையும் இணைக்கும் ஒரே வழியானவராக இருக்கிறார்.
இஸ்ரயேலின் வம்சத்தில் மீட்பர் பிறப்பார் என்பது கடவுளின் திட்டம்.
 யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர்தான் இஸ்ரேல். 
எனவே, இஸ்ரயேலின் கனவை விவரித்த வார்த்தைகளை இயேசு தன்னையே விவரிக்கப் பயன்படுத்தியதன் மூலம், இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மீட்பர் நான்தான் என்று இயேசு மறைமுகமாக உணர்த்துகிறார். 
அவரே கடவுளையும் மனிதனையும் இணைக்கும் ஒரே பாலம்.
நத்தனியேல் இயேசுவைச் சந்தித்த நிகழ்வைப் பற்றி நாம் தியானிக்கும்போது,
 நமது ஆன்மிக வாழ்வில் என்ன முன்னேற்றத்தை இந்த தியானம் தரும் என்பதைப் பார்ப்போம்.
முதலில், பிலிப்புதான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றிச் சொல்லி, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தார்.
இயேசுவுக்கு நத்தனியேலைப் பற்றி ஏற்கனவே தெரியும், 
ஆனால் இயேசுவைப் பற்றி நத்தனியேலுக்கு எதுவும் தெரியாது. 
"நாசரேத்திலிருந்து நல்லது ஏதாவது வர முடியுமோ?" என்று அவர் கேட்டதிலிருந்து இது தெளிவாகப் புரிகிறது.
பிலிப்பு இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே தனது நற்செய்திப் பணியைத் தொடங்கிவிட்டார். 
அவர்தான் நத்தனியேலுக்கு இயேசுவைப் பற்றி அறிவித்து, அவரை இயேசுவிடம் அழைத்து வந்தவர். 
அதற்கான உந்துதலை இயேசுவே கொடுத்திருக்க வேண்டும்.
நத்தனியேல் இயேசுவிடம் வந்தவுடன், "தான் தான் உலகின் மீட்பர்" என்ற உண்மையை இயேசு மறைமுகமாக அறிவித்துவிட்டார்.
 விண்ணகத்துக்குச் செல்வதற்கான ஏணி இயேசுதான் என்பதை நத்தனியேலுக்கும் நமக்கும் அவர் உணர்த்திவிட்டார்.
நாம் திருமுழுக்கு பெற்ற நாளிலிருந்தே இயேசுதான் உலகின் மீட்பர் என்பது நமக்குத் தெரியும். 
ஆனால், நாம் பைபிளை வாசிக்கும்போதுதான் அதைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள முடிகிறது.
நமது ஆன்மிக வாழ்வின் நோக்கமே விண்ணகத்திற்கு ஏறிச் செல்வதுதான்.
 அதற்கான ஏணி இயேசு மட்டுமே. 
நாமும் இயேசுவாக மாறினால் மட்டுமே இறைவனின் தூதர்கள் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.
ஏனெனில், மனுமகன் மீது ஏறி இறங்கும் தூதர்கள், அவரோடு ஒன்றித்திருக்கும் நம் மீதும் ஏறி இறங்குவார்கள்.
 நாம் இயேசுவோடு ஒன்றித்து வாழ்வதுதான் மிக முக்கியம்.
இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் நாம் உணவாக உட்கொள்வதன் நோக்கமும் அதுதான்.
 நாமும் விண்ணக வாழ்வின் சுவையை இந்த பூமியிலிருந்தே சுவைக்க ஆரம்பிப்போம்.
நமது தியானம் செயலாக மாறுவது எப்படி?
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நத்தனியேலைப் போல ஆர்வத்துடன் பைபிள் வாசிக்க வேண்டும்.
பிலிப்புவைப் போல, இயேசுவை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி, 
அவர்களை இயேசுவிடம் அழைத்து வர வேண்டும்.
இயேசுவைப் போல வாழ்ந்து, நமது பண்புகளால் அவராகவே மாற வேண்டும்.
நமது சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும் இயேசுவாக மாறி வாழ்வோம்,
இவ்வுலகிலும், விண்ணுலகிலும். 
லூர்து செல்வம்.
No comments:
Post a Comment