"நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.''
(மத்தேயு.5:10)
கடவுள் அவரது பண்புகளின் உருவானவர்.
அன்பே உருவானவர்.
நீதியே உருவானவர்.
நீதிக்கும் சட்டத்துக்கும் தொடர்பு உண்டு.
ஆகவேதான் சட்டத்தை மீறுபவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துகிறோம்.
இறைவனை உன் முழு மனதுடன் நேசி, உன்னை நேசிப்பது போல உன் அயலானையும் நேசி என்னும் அவருடைய கட்டளைகளை, அதாவது திருச் சட்டத்தை, முழுமையாக அனுசரிப்பவன் தான் நீதிமான்.
நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர் என்றால்
இறைவனின் விருப்பப்படி வாழ்வதன் காரணமாக துன்புறுத்தப்படுபவர்கள் பாக்கியவான்கள் என்று பொருள்.
விண்ணரசு இறைவனுடையது.
நாம் இறைவனின் விருப்பப்படி வாழ்பவர்கள் முடிவில்லாத காலமும் இறைவனோடு விண்ணரசில் உரிமையோடு பேரின்ப வாழ்வு வாழ்வோம்.
தந்தைக்கு உரியன யாவும் பிள்ளைகளுக்கும் உரியன.
ஆகவே விண்ணகத் தந்தையின் விருப்பப்படி வாழ்பவரகளூக்கு விண்ணரசு உரியது.
விண்ணகத் தந்தையின் விருப்பத்துக்கு எதிராக வாழ்பவர்கள் முழுமையான லௌகீகவாதிகள்,
விண்ணரசைப் பற்றி கவலைப் படாதவர்கள்.
இவ்வுலகில் இறைவனுக்கு எதிராக வாழ்பவரகள் இறைவன் மேல் உள்ள வெறுப்பை அவருடைய பிள்ளைகள் மேல் காட்டுகிறார்கள்.
வெறுப்பின் காரணமாக அவர்களைத் துன்புறுத்துகிறார்கள்.
துன்புறுத்தப் படுகிறவர்கள் பேறு பெற்றவர்கள், ஏனெனில் விண்ணரசு அவர்களுடையது.
நம் ஆண்டவராகிய இயேசு தனது வாழ்நாளின் ஒவ்வொரு வினாடியும் நமக்கு முன் மாதிரியாக வாழ்ந்தார்.
இயேசுவின் வாழ்வு
துவக்கம் முதல் முடிவு வரைத் துன்பங்கள் நிறைந்த வாழ்வு.
நாசரேத்தில் யோசேப்புக்குச் சொந்தமான வீடு இருந்தது.
இயேசு சொந்த வீட்டிலேயே பிறந்திருக்கலாம்.
ஆனால் அவர் தான் பிறப்பதற்கு 155 கி.மீ. தொலைவில் உள்ள பெத்தலகேமில் உள்ள சாணி நாற்றம் வீசும் ஒரு மாட்டுத் தொழுவத்தைத் தேர்வு செய்தார்.
நிறைமாத கர்ப்பிணியான மரியாளுடன் யோசேப்பு நடந்து சென்றார்.
எத்தனை நாட்கள் ஆகியிருக்கும்?
எத்தனை இரவுகள் வெட்ட வெளியில் மார்கழி மாதக் குளிரில் பாதையோரத்தில் படுக்க வேண்டியிருந்திருக்கும்?
துன்பம் நிறைந்த பயணம், நமது மீட்புக்காக!
துன்பப்படாமல் மீட்பு இல்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்ட தான் துன்பப் பட்டதோடு தன் பெற்றோரையும் துன்பப் பட வைத்தார் இயேசு.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்த குழந்தை இயேசு படுத்திருந்தது மாடுகளின் தீவனத் தொட்டியில்.
மாடுகள் தின்னும் வைக்கோல் தான் அவர் படுத்திருந்த மெத்தை!!
பிறந்து இரண்டு மாதங்கள் கூட முடியுமுன் ஏரோது மன்னனிடமிருந்து தப்பிக்க எகிப்துக்கு நடைப் பயணம்.
எகிப்தில் மூன்று ஆண்டுகள் நாடோடி வாழ்க்கை. துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை.
மூன்று ஆண்டுகள் நாடோடிகளாக வாழ்ந்து விட்டு ஏரோது இறந்த பின் நாசரேத்துக்குத் திரும்பினார்கள்.
உலகைப் படைத்த இறைமகன் இயேசு தன் மீது துன்பங்களை வரவழைத்துக் கொண்டார்,
எதற்காக,
துன்பங்கள் இன்றி நமக்கு மீட்பு இல்லை என்பதை நமக்குக் காட்டுவதற்காக.
துன்பங்கள்தான் நம்மை இயேசுவாக மாற்றுகின்றன.
இயேசுவின் மூன்று ஆண்டு பொது வாழ்வின் போது அவர் சென்ற இடமெல்லாம் நன்மையையே செய்தார்.
ஆனால் யூத மதத் தலைவர்கள் அவர் ஓய்வு நாளில் நோயாளிகளைக் குணமாக்கியதைக் கூட மரண தண்டனைக்குரிய குற்றமாக எடுத்துக் கொண்டார்கள்.
அவருடைய பாடுகளுக்கும் சிலுவை மரணத்துக்கும் அவர் செய்த நன்மைகளே காரணமாயின.
அவரைப் பின் பற்றி நன்மைகள் செய்பவர்களும் அவற்றின் காரணமாக அவரைப் போல துன்பங்களைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்கு அவரது பாடுகள் ஒரு முன் அடையாளம்.
''என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.
(மத்தேயு.5:11,12)
நன்மைகள் செய்ததற்காக அன்று இயேசுவை பாடுகளுக்கு உட்படுத்தியது ரோமை அரசு.
இயேசுவுக்கு மரணத்தீர்ப்பு இட்டது ரோமை கவர்னர் பிலாத்து.
இன்று நம் நாட்டில் அதே வேலையைச் செய்து கொண்டிருப்பது மத்திய மோடி அரசு.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட
வந்தனா பிரான்சிஸ் மற்றும் பிரீத்தி மேரி ஆகிய கன்னியர்கள்
Assisi Sisters of Mary Immaculate என்ற சபைச் சகோதரிகள்.
கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த இந்த சபை கல்வி, சுகாதாரம், மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பணிகளை இறைப்பணியாகச் செய்து வருகிறது.
அவர்கள் நாராயண்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பழங்குடியினப் பெண்களுக்கு, ஆக்ராவில் உள்ள கிறிஸ்தவ கான்வென்ட்களில் வீட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதற்காக அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
சம்மந்தப்பட்ட பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள்.
கைதுக்குச் சொல்லப்படும் காரணம்
ஆள்கடத்தல், கட்டாய மதமாற்றம்.
இரண்டு காரணங்களும் பொய் என்று அனைவருக்கும் தெரியும்.
இதற்கு எதிராக நாடெங்கும் புரட்சி வெடித்திருக்கிறது.
ஆனால் அது மத்திய அரசின் கண்களில் படவில்லை.
கடைசி செய்திப்படி நீதிமன்றம் கன்னியர்களுக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது.
திருச்சபைக்கு எதிராக நடப்பதெல்லாம் நமது ஆண்டவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே முன் அறிவித்தவைதான்.
ஒன்றை நினைவில் வைத்துக் கொள்வோம்.
இயேசுவுக்கு நடந்ததெல்லாம் அவருடைய சீடர்களாகிய நமக்கும் நடக்கும்.
இயேசு தனக்கு செய்யப்பட்ட கொடுமைகளை எல்லாம் பொறுமையுடன் தாங்கிக் கொண்டது போல நாமும் தாங்கிக் கொள்வோம்.
இயேசு எதிரிகளை மன்னித்தது போல நாமும் மன்னிப்போம்.
இயேசுவைப் போல நாமும் நீதியின் பொருட்டு துன்புறுத்தப்பட்டால் நாமும் அவரோடு விண்ணரசில் நித்திய பேரின்ப வாழ்வை அனுபவிப்போம்.
லூர்து செல்வம்
No comments:
Post a Comment