அவரன்றி அணுவும் அசையாது.
Do your best and leave the rest to God என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.
உன்னால் இயன்றதைச் செய், மீதியைக் கடவுளிடம் விட்டு விடு என்பது இதன் பொருள்.
இது மனிதனுடைய கூற்று.
ஆனால் இறைவன் என்ன சொல்கிறார்?
உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
(பழமொழி ஆகமம்.16:3)
உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.
(1 பேதுரு. 5:7)
மனிதன் "உன்னால் இயன்றதைச் செய், மீதியை இறைவனிடம் விட்டு விடு என்கிறான்.
ஆனால் கடவுள் "உனது எல்லாக் கவலைகளையும் என்னிடம் விட்டு விடு.
நான் உன்னை வாழ வைப்பேன்" என்கிறார்.
நாம் நமது முயற்சியால் உலகுக்கு வந்தோமா?
கடவுளால் வந்தோமா?
நாம் வரும் முன் Zero முயற்சி என்று கூட சிந்திக்கக் நாம் இல்லை.
We were absolutely nothing before our coming into this world.
நாம் உலகுக்குள் வருவதற்கு முழு முதற் காரணம் கடவுள் மட்டுமே.
இப்போதும் சுயமாக நம்மால் எதுவுமே இயலாது, மூச்சு விடக்கூட முடியாது.
நமது உடல் இலட்சக்கணக்கான அணுக்களின் கணம்.
Our body is nothing but a set of countless atoms.
கடவுளின் உதவியின்றி நம் உடலால் அசையக்கூட முடியாது, உள்ளத்தால் சிந்திக்கவும் முடியாது.
அவரன்றி அணுவும் அசையாது.
நம்மால் ஒன்று செய்ய முடியும், நம்மால் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட முடியும்.
"ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்."
(திருப்பாடல்கள்.55:22)
"இதோ ஆண்டவருடைய அடிமை, உமது வார்த்தையின்படி எனக்கு ஆகட்டும்''
என்ற அன்னை மரியாளின் வார்த்தைகளுக்கு ஆழமான பொருள் இதுதான்.
அடிமையால் சுயமாக
ஒன்றும் செய்ய முடியாது, முதலாளியின் கட்டளைப்படி நடப்பது மட்டும் தான் அவன் வேலை.
அதுதான் அவன் வாழ்வின் இலட்சியம்.
மரியாள் தனது சுயத்தை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டாள்.
அவளது ஒவ்வொரு அசைவும் கடவுள் விருப்பப்படி தான் நடந்தது.
எந்த தாயாவது சுயமாகத் தன் மகனைச் சிலுவையில் அறைந்து கொல்ல விடுவாளா?
மரியாள் விட்டாள், ஏனெனில் அது இறைவனின் சித்தம்.
நாம் நம்மை மரியாள் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கிறோம்.
உண்மையான பக்தன் மாதாவின் அத்தனை குணங்களையும் தான் கொண்டிருக்க வேண்டும்.
நாம் உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ நம்மை முழுவதும் அடிமையாக இறைவனிடம் ஒப்படைத்து விட்டு அவர் சொற்படி மட்டும் வாழ வேண்டும்.
இயேசு நமக்கு முன் மாதிரிகை காட்டினார்.
தனது தந்தையின் சித்தப்படி நமது பாவங்களுக்குப் பரிகாரமாகத் தன்னையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தார்.
அவருடைய சீடர்கள் அவருடைய முன்மாதிரிகைப் படி அவருக்காக தங்கள் உயிரைக் கொடுத்து வேத சாட்சிகளாக மரித்தார்கள்.
நாமும் நம்மை முழுவதும் கடவுளிடம் ஒப்படைத்து விட்டால் ஒவ்வொரு வினாடியும் அவருடைய விருப்பப்படி நடப்போம், அவர் நம்மை நடத்துவார்.
அவருடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதுதான் நமது வாழ்க்கை.
மரணமாக இருந்தால்?
இவ்வுலகில் மரணம் தான் மறு உலகில் நித்திய வாழ்வு.
தனது மரணத்தால் நமது மரணத்தை வென்றவர் இயேசு.
ஆன்மீக வாழ்வு வாழ
அவருடைய உதவியால் முயற்சி செய்வோம்,
அவருடைய உதவியால் முயற்சியில் வெற்றி பெறுவோம்.
"வாழ்வது நாம் அல்ல, நம்மில் அவர் வாழ்வார்.''
நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ்கிறோம்?
சோதனைகள் நிறைந்த உலகில்.
வேதனைகள் நிறைந்த உலகில்.
ஆன்மீகத்துக்கு எதிரான கவர்ச்சிகள் நிறைந்த உலகில்.
யாரை விழுங்கலாம் என்று சாத்தான் சுற்றிக் கொண்டிருக்கும் உலகில்.
யாரைக் கெடுக்கலாம் என்று சாத்தானின் சீடர்கள் அலைந்து கொண்டிருக்கும் உலகில்.
இவர்களுக்கு இடையில் நாம் தனியாக நடந்தால் அவர்கள் விரிக்கும் வலையில் நாம் வீழ்ந்து விட வாய்ப்பு உண்டு.
ஆனால் சர்வ வல்லப கடவுளின் கையை இறுகப் பற்றிக்கொண்டு நடந்தால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது.
தாயின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
கடவுளின் கரங்களைப் பற்றி நடப்பவர்கள் எந்த சோதனையிலும் விழ மாட்டார்கள்.
எப்போதும் கடவுளுடைய பிரசன்னத்தில் வாழ்பவர்கள் நூறு சதவீதம் ஆன்மீக வாழ்வில் வெற்றி பெறுவார்கள்.
எப்போதும் கடவுளையே நினைத்து வாழ்பவர்களால் அவருக்கு எதிராக எதையும் நினைக்க முடியாது.
கடவுளால் நிறைந்த மனதில் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் தான் நிறைந்திருக்கும்.
சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் பரிசுத்தர்களாக வாழ்வார்கள்.
இறைவன் அருளால் நமக்கு எல்லாம் முடியும்.
இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வோம்.
அவர் தான் நமக்கு நிலை வாழ்வு.
லூர்து செல்வம்.